Tuesday, August 20, 2013

மேகமலை ஒரு பயணம்

சில நாட்களுக்கு முன் குமுதம் இதழ் மூலம் இந்த மேகமலை பற்றியறிந்த என் தந்தை தன்னை அங்கே அழைத்து செல்லுமாறு கேட்டார்.

அலுவகத்தில் ஒரு வாரம் விடுப்பில் இருந்த நான்,மேகமலை செல்ல இது தான் சரியான நேரம் என்று முடிவெடுத்து அதற்க்கு வேண்டிய  தகவல்களை சேகரிக்க தொடங்கினேன்.


அணைத்து விவரங்களும் சேகரித்த பின்னர், நாங்கள் ஒரு ஐந்து நபர்கள் விழுப்புரத்தில் இருந்து ஆகஸ்ட் 14 காலை 5 மணிக்கு  போலேரோ வில் புறப்பட்டோம்.


கடல் மட்டத்திலிருந்து 1500 மீ உயரத்திலிருக்கும் மேகமலை, தேனியிலிருந்து கம்பம் செல்லும் வழியில் சின்னமனூர் என்னும் ஊரிலிருந்து  35 கி மீ தொலைவில் இருக்கிறது.


இப்படி ஒரு இடமிருப்பது அநேக மக்களுக்கு தெரியாத காரணத்தினால் தானோ என்னவோ ஊட்டி கொடைக்கானல் போல் இல்லாமல் இங்கே இயற்க்கை இன்னும் கொஞ்சி விளையாடி கொண்டிருக்கிறது.


காலை 11 மணியளவில் சின்னமன்னூரை அடைந்தோம். மேகமலையில் ஹோட்டல்கள் அதிகம் இல்லாத காரணத்தினாலும், நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த இடத்தில் உணவு விலை சற்று அதிகம் என்பதாலும் மதிய உணவை சின்னமன்னூரில் வாங்கிக்கொண்டோம்.


மீண்டும் மேகமலை/ஹைவேவிஸ் நோக்கி பயணம் தொடங்கியது. 





வழி நெடுக்க இருந்த திராட்சை தோட்டங்கள் எங்கள் கண்களை குளிரச்செய்தன.







மேகமலை செல்வதென்று முடிவு செய்த உடனே, அங்கே தங்குவதற்கான வசதிகள் குறித்து ஆராய தொடங்கினேன். அப்பொழுது மேகமலை ரெசிடென்சி என்னும் ஒரு ஹோட்டலை தொடர்பு கொண்டபோது அவர் என்னை கேட்ட முதல் கேள்வி "எந்த வாகனத்தில் வருகிறீர்கள்?"

நான் ஸ்விப்ட் என்றதும் வேண்டவே வேண்டாம் ரோடு சரியில்லாத காரணத்தினால் முடிந்தால் SUV ஒன்றில் வாருங்கள் என்றார்.அதனாலேயே போலேரோவில் சென்றோம். 





மேலே செல்ல செல்ல தான் அவர் அப்படி கூறியதற்கான காரணம் தெரிந்தது. வருடத்துக்கு 8-9 மாதங்கள் மழை பொழிவதால் சாலை மிகவும் மோசமானதாக இருக்கிறது. நான் ஸ்விப்ட் எடுத்து சென்றிருந்தால் நிச்சியம் ரத்த கண்ணீருடன் தான் திரும்பி இருப்பேன்.

18 கொண்டை ஊசி வளைவினை கொண்ட அந்த சாலை மிகவும் பழுதடைந்து இருந்தது.

சாலை சரிவர இல்லாததும் இவ்விடத்துக்கு மக்கள் வருகை குறைவாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

மேலே செல்ல செல்ல சில்லென்று காற்று எங்களை வரவேற்றது 


மதியம் 1 மணியளவில், மேகமலைக்கு 4 கி மீ முன்னரே நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த மேகமலை ரெசிடென்சியை  அடைந்தோம்.



அங்கே மதிய உணவை முடித்துக்கொண்டு ஒரு கைடுடன் 2 மணிக்கு வெளியே புறப்பட்டோம்.


மோசமான  சாலை காரணமாக அந்த 4 கி மீ தூரத்தை கடக்க 30 நிமிடங்களுக்கு மேல் தேவைப்பட்டது. பல இடங்களில் பாதையே இல்லை.




மேகமலையை அடைந்ததும் நெடுக்க பச்சை பசேலென்று தேயிலை தோட்டங்களை காண முடிந்தது. முன்னாறு மற்றும் வால்பாறை சென்றவர்களுக்கு இந்த தேயிலை தோட்டம் அப்படி ஒன்றும் ஒரு புதிய உற்சாகத்தை அளித்துவிட முடியாது என்பது உண்மையே.



முதலில், ஹைவேவிஸ் டாமை கண்டோம். அணையில் நீர் நிரம்பி காணப்பட்டது. 




மேகமலையில் மட்டும் கிட்டத்தட்ட 4-5 அணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஊட்டி மற்றும் கொடைக்கானல் போல் இங்கே ஏரி சிறியது கிடையாது. மேகமலையில் நாங்கள் செல்லுமிடமெங்கும் ஏரிகள் எங்களுடனேயே பயணித்தது. அவற்றில் படகு வசதி இல்லாதது பெரிய குறையாகவே இருந்தது.








மகாராஜா வியூ பாய்ன்ட், வூட் பிரியர் டீ பாக்டரி என்று இருட்டும் முன் சில இடங்களை பார்த்த பிறகு மீண்டும் அறையை அடைந்தோம்.






நாங்கள் தங்கியிருந்த இடத்தில் மின்சார வசதி இல்லாத காரணத்தினால், 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஒரு 4 மணி நேரம் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. அந்நேரத்தில் கைபேசி, காமெரா சார்ஜ் போட்டுக்கொள்ள வேண்டும். இரவு எந்த ஒரு லைட் வெளிச்சமும் இருக்காது, எங்களுக்கு ஒரு எமெர்ஜென்சி லைட் மட்டும் கொடுக்கபட்டது.


இடைவேளியின்றி தொடர்ச்சியாக கடற்கரையில் வரும்  அலையின் சப்தம் எவ்வாறு இருக்குமோ அதே போல் தான் இரவு முழவதும் காற்றின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. சில நேரங்களில் எங்கேகாற்று  நம்மை தூக்கி வீசிவிடுமோ என்று பயமாக கூட  இருந்தது.



மீண்டும் மறுநாள் காலை ட்ரெக்கிங் செல்வதற்காக 5 மணிக்கே எழுந்து, கைடையும் எழுப்பிவிட்டு கையில் டார்ச்சுடன் ஒரு நடைபயணம் சென்றோம். எந்த மிருகத்தையும் பார்க்கும் வரம் கிடைக்காத காரணத்தினால் மீண்டும் அறைக்கு வந்துவிட்டோம்.



அழகான மேக மூட்டங்களை ரசித்துவிட்டு, மேகமலையில் எங்களது பயணத்தை முடித்துக்கொண்டு சுருளி அருவிக்கு செல்ல தயாரானோம். 




மேகமலையில் தங்குவதற்கு 4-5 இடங்களே தற்போதைக்கு உள்ளன 



அரசு விடுதிகள் : 

1. பஞ்சாயத்து விடுதி  - 

2. அரசு இன்ஸ்பெக்ஷன் பங்களா

தொடர்ப்புக்கொள்ள 04554232389 or 04554232225



தனியார் விடுதிகள்: 


3. மேகமலை ரெசிடென்சி 

4. சாண்ட் ரிவர் காட்டேஜ் 
5. க்லௌட்  மவுண்டைன் பங்களா 

தொடர்ப்புக்கொள்ள திரு.சிவக்குமார் +919894055554 or +919487850508.



சுருளி மற்றும் சின்ன சுருளி அருவி :


மேகமலையில் இருந்து சுருளி மற்றும் சின்ன சுருளி என இரண்டு அருவிகள் உருவாகுகின்றன. 


இரண்டும் வெவ்வேறு திசையில் உள்ளன. பொதுவாக கம்பம் அருகே இருக்கும் சுருளி அருவி தான் பலருக்கு தெரியும் ஆனால் மயிலாடும்பாரை, வர்ஷநாடு அருகே இருக்கும் சின்ன சுருளியை அதிகம் தெரியாது.


நாங்கள் சில காரணங்களுக்காக  சுருளி அருவிக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம்.


மேகமலையில் இருந்து மீண்டும் சின்னமன்னூர் வந்து ஒரு 25 கி மீ சென்றால் சுருளி அருவியை அடைந்துவிடலாம்.


வழியெங்கும் மீண்டும் திராட்சை தோட்டங்கள், பச்சை பசேலென்று வயல்வெளிகள் பார்க்கவே அவ்ளோ ஆசையாக இருந்தது.







சுருளி அருவியில் நல்லதொரு குளியலை போட்டுவிட்டு, தேக்கடியியை ஒரு எட்டு பார்த்துவிட்டு மீண்டும் விழுப்புரம் திரும்பினோம்.

அடுத்த முறை சின்ன சுருளி,கும்பக்கரை அருவி ஆகியவற்றுக்கும் இன்னும் சில இடங்களுக்கு செல்லலாம் என்று இருக்கிறோம்.


அந்த இரண்டு நாட்கள் வீடு அலுவலகம் என்று எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் நகர வாழ்க்கையிலிருந்து தள்ளி வந்து, எந்த ஒரு மாசுமில்லாத அருமையான மேகமலையில் கழித்தது மறக்க முடியாத ஒரு அனுபவம்.


சாலைகள் அனைத்தும் சீர் செய்ததும் மீண்டும் ஒரு முறை குடும்பத்துடன் அங்கே  செல்லவேண்டும் என்ற ஒரு ஆசை உள்ளது. அதுவும் அந்த காற்றினில் இரவினை கழிக்க இதே ஆடி மாதத்தில் செல்ல வேண்டும்.