Tuesday, May 4, 2010

தாயின் அரவணைபிற்கு ஏங்கி....

நூறு குடும்பங்கள் வாழும் அந்த முகாமில் முக்கியமானவர் அந்தோணி தான்.
நன்கு படித்தவர்,செல்வசெழிப்புடன் வாழ்ந்தவர், ஒரு வருடத்திற்கு முன்பு மனைவியை உள்நாட்டு போரில் இழந்தவர். இப்பொழுது மகள் வடிவுடன் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளார்.
தாய்நாடு என்று எண்ணி வந்தோமே, ஆனால் இங்கேயும் அடிமைபோல் வாழ வேண்டியதா இருக்கே என்று எண்ணி அவர்கள் நொந்து போகாத நாள் இல்லை..  


அன்று காலை தூங்கி எழுந்ததும் ஆறு வயதான வேலு அந்தோணியை தேடி ஓடி வந்தான் ... 

டேய் டேய் !! ஏண்டா தம்பி இப்படி ஓடி வர,எங்கையாவது கீழ விழுந்துடபோர என்றார் அந்தோணி.
தான் மலம் கழிக்க வேண்டும் என்றான் அந்த பெரியவரிடம்.
ஹா ஹா.. இதுக்கு தான் நீ அவ்ளோ வேகமா ஓடி வந்தியா !! சரி வா என்று அவனை அழைத்து சென்றார்.
மலம் கழித்த சிறுவனை சுத்தப்படுத்த நீர் இல்லை.அவரும் ஒரு சில இடத்திருக்கு சென்று நீர் தேடினார் கிடைக்கவில்லை.
வேறு வழியின்றி அங்கே லட்டியுடன் அமர்ந்திருந்த அந்த காவல் துறை அதிகாரியிடம் சென்றார்..
ஐயா,குழந்தை மலம் கழிச்சான். இப்போ தண்ணீர் இல்லாததால சுத்தம் செய்ய முடியாம தவிக்கிறேன் என்றார்..
அதுக்காக,அவன கழுவ என்னை போய் தண்ணி கொண்டு வர சொல்றியா என்றார் அந்த காவலாளி கோவமாக.
ஐயா நான் அப்படி சொல்ல வரல, இரண்டு நாளா தண்ணியே சுத்தமா இல்ல, சமைக்க கூட தண்ணி இல்லை. நீங்க இத மேல் அதிகாரிங்க கிட்ட சொன்னீங்கனா எங்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும் என்றார் பெரியவர்.
உங்களுக்கு எல்லாம் போனா போகுதுன்னு தங்கறதுக்கு எடம் கொடுத்தா,இது வேணும் அது வேணும்னு சட்டம் பேசுரீகளோ அகதி நாயுங்களா என்று ஆவேசப்பட்டார் அந்த காவலாளி.
பதில் பேசாமல்,வேறு வழியின்றி அமைதியாக குடிசையை நோக்கி திரும்பி சென்றவர்,சிறு சிறு கந்தல் துணியை கொண்டு வேலுவை சுத்தம் செய்தார்.
 

அப்பொழுது வேலுவின் 2 வயது தம்பி குமார் அழுவும் சப்தம் அந்தோணியின் காதில் விழ,ஏய் வடிவு கொழந்த பசியில அழுவுது பாரு. யாருக்கு பால் சொரக்குதோ அவங்கள சீக்கிரம் கொடுக்க சொல்லு என்றார்.
முகாமைவிட்டு வெளியே சென்று கூலி வேலை செய்ய முப்பது நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. 

அவர்கள் வேளைக்கு சென்று கொண்டு வரும் தொகையின் ஒரு பகுதியை அரசு அதிகாரிகளுக்கு தரபடும்,மீதமுள்ள பகுதியில் முகாமில் இருக்கும் அனைவர்க்கும் உண்பதற்காக பன் மற்றும் பிஸ்கேட் என்று எதாவது வாங்கி வருவார்கள்.
இந்த பொருட்களே இவர்களின் வாழ்கையை ஓட்ட உதவுகின்றன. இவையின்றி எப்பொழுதாவது அரசியல்வாதிகள் தங்களின் விளம்பரத்திற்காக 5 கிலோ அரிசி அது இது என்று எதாவது தருவது உண்டு, ஆனால் அதையும் பிடிங்கி தின்னும் கூட்டம் இருப்பது தான் கொடுமை..
அன்றைய தினம் அந்தோணியிடம் அதிகாரிகள் ...  

நாளை உங்களை காண அமைச்சர் திரு. ஜெயகாந்தன் காலை 10 மணிக்கு வருகிறார், உங்கள் மக்கள் அனைவரையும் எங்கும் செல்லாமல் இங்கேயே இருக்குமாறு சொல்லிவிடு என்றார்.

அப்படியே நாளை அவரது வரவை எண்ணி அன்றைய பொழுதை கழித்தார்கள்.
அடுத்த நாள் சரியாக சொன்னதுபோல் 10 மணிக்கு நேரம் தவறாமல் வந்தார் ஜெயகாந்தன். மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் அவரை காண, அவர் எதோ அதிகாரிகளுடன் பேசி கொண்டிருந்தார்..


வேலு அந்த கூட்டத்தில் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தான்,அதிகாரிகளுடன் பேச்சை முடித்துக்கொண்டு அவர் அருகில் நின்ற வேலுவை அவரது கைகளால் தூக்கினார்.

உன் பேரு என்ன என்றார் ஆசையாக.. வேலு என்றான் அவன் .
உனக்கு இங்கே இருக்க பிடிச்சி இருக்கா என்றார். சற்றும் யோசிக்காமல் பிடிக்கலை என்றான்.
ஏன் என்று அவர் கேட்கும் முண்பதே காரணத்தை சொல்ல தொடங்கினான் வேலு.
"என் அம்மா, என்னை தனியாக தவிக்கவிட்டு எங்கோ சென்றுவிட்டால்.அப்படி அவள் சென்றது தவறு தானே ?? " என்றான் ஜெயகாந்தனிடம்..
சற்று மௌனம்காத்த ஜெயகாந்தன்,
"தவறு தான், உங்களது அல்லல்களையும், இன்னல்களையும் பார்த்துக்கொண்டு தாய்நாடு அமைதிகாத்தது மிக பெரிய தவறு தான். தவிக்கும் குழந்தையான உங்கள்
அனைவருக்கும் கைகொடுக்காத இந்த தாய் நாட்டிற்கு பாவ மன்னிப்பே கிடையாது" என்றார்
கூட்டத்தில் இருந்து ஒருவன் நீங்க நல்ல நடிகர்னு சொன்னாங்க இப்போ தான் நேருல பாக்குறோம் என்று சொன்னான்......

Friday, April 30, 2010

வெள்ளை மனசு

 மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த விக்னேஷ், தான் கொண்டுவந்த  இரு சக்கர வாகனத்தை கூட மறந்து, நடந்தே வீட்டை சென்றடைந்தான் ..

வழியில் யாரையும் நிமிர்ந்து பார்க்கவுமில்லை,பேசவுமில்லை..
வீட்டினுள் நுழைந்தவன் நேராக சென்று ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.. ஏதோ யோசித்துக்கொண்டிருந்தவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

அம்மாவின் அருகில் சென்றான்,
"
எனக்கு கேன்சர் இருக்குன்னு டாக்டர் மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்து சொன்னாரு. அதுவும் இப்போ குணப்படுதுற நிலையில இல்லை. முத்திபோயிடுசாம்.. இன்னும் அதிகபட்சம் 3
மாசம் "
 என்றான்...

இதை கேட்டதுதான், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார் அவன் தாய் ..
உடனே பதறிபோனவன், தண்ணீர் தெளித்து தாயை தெளிய வைத்தான்..
எழுந்தவர் அழ தொடங்கிவிட்டார்,

"உன்ன நல்லா தான டா வளத்தேன். ஏன் டா ஆண்டவன் இப்படி சோதிக்குறான்"..
 

அலுவலுகத்தில் இருந்த தந்தையை அழைத்து, அவருக்கும் தகவல் அளித்தான் விக்னேஷ் ...

அவருக்கோ இதை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் இப்படி வளர விட்டோமே என்று வருத்தம்..
 

ஆனால் இப்பொழுது எதுவும் அவர்கள் கையில் இல்லை என்பதை புரிந்து கொண்டார்...

இருந்தாலும் ஏன் இன்னொரு நல்ல மருத்துவமனையில் காட்ட கூடாது என்று எண்ணினார்.. அழைத்தும் சென்றார் விக்னேஷை,ஆனால் பலனில்லை...

வீட்டில் அமைதியே நிலவியது... நண்பர்களிடமும் பேச விருப்பமில்லாமல் வீட்டினுள்ளேயே அடைந்து கிடந்தான் விக்னேஷ்..

இப்படியே இரண்டு வாரங்கள் அமைதியும் அழுகையுமாக கழிந்தது..

ஒருநாள்  விக்னேஷை அழைத்தார் அவன் தாய்..

"இந்த வயசுல இப்படி நீ எந்த சுகத்தையும் அனுபவிக்காம போறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா, அதனால நான்  ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்" என்றார் அவர்.

என்ன அது என்று புரியாமல் விக்னேஷ் மட்டுமல்ல அவன் தந்தையும் குழம்பிபோய் இருந்தார்..

அப்பொழுது அவன் தாய்,
" உனக்கு வேண்டிய துணி எல்லாம் எடுத்து வைக்குறேன், நீ மும்பைக்கு போய்  கொஞ்ச நாள் இருந்துட்டு வா" என்றார்.

அதை கேட்டதும் கொஞ்சம் அதிர்ச்சியில் மூழ்கி போன விக்னேஷின் தந்தை தன் மனைவியின் என்னத்தை புரிந்து கொண்டு  தன்னை சமாதான படுத்திக்கொண்டார்....


விக்னேஷிற்குஎன்ன சொல்வதென்று  புரியவில்லை.. அமைதியாகவே நின்றுகொண்டிருந்தான்...

நான் போய்  நாளைக்கு நீ மும்பை போறதுக்கு டிக்கெட் புக் பண்றேன் என்று கூறி விட்டு சென்றார் விக்னேஷின் தந்தை ..

விக்னேஷின் அருகில் சென்ற அவன் தாய்,
 இது எனக்கு தப்புன்னு தோனல டா. யோசிக்காத போய் கொஞ்ச நாள் எல்லாத்தையும் மறந்துட்டு சந்தோஷமா இருந்துட்டு வா என்றார்.

மறுநாள் மும்பை செல்ல ரயில் நிலையத்தில் விக்னேஷ் காத்துக்கொண்டிருக்க, அவன் தந்தை அவன் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து,
"எது எப்படியானாலும் சேப்டி (safety)  முக்கியம் மறந்துடாத"  என்று கூறி வழி அனுப்பிவைத்தார்...

மறுபடியும் வருவானா என்று கூட முழுமையாக தெரியாது,ஆனால் அவன் சந்தோஷத்திற்குகாக அனுப்பி வைத்தார்கள் ...

Thursday, April 29, 2010

அக்கரை சீமையில்

அன்று வெள்ளிக்கிழமை,எதிரே இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தனது காதலி ஹம்சாவுடன் ஆஸ்திரேலியாவின் 'பெர்த்' நகரின் ரம்மியமான இடங்களில் நேரத்தை கழித்தான் பிரகாஷ். 

இரவு 11.30 மணி அளவில் ஹம்சாவை அவளது இல்லத்தில் பத்திரமாக இறக்கி விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.


அவளின் நினைப்பிலேயே காரை ஓட்டிக்கொண்டிருந்தவன்,திடீரென்று பிரேக்கினை அழுத்தினான்.

நடுரோட்டில் மூன்று நபர்கள் கையில் பீருடன் காரின் எதிரே வழி மறிப்பது போல் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

முகத்தில் சிறிது வியர்வை துளிகள் எட்டிப்பார்க்க, கொஞ்சம் படபடப்புடன் காணப்பட்டான் பிரகாஷ்.
எதிரே நிற்பவர்கள் யார் என்று கூட இவனுக்கு தெரியாது. ஆனால் தொடர்ந்து நிகழும் சில சம்பவங்கள் மூலம் இவர்களின் நோக்கம் என்ன என்பதை யூகித்தான்.
'ஓடிடலாமா இல்ல நிக்கலாமா!!' என்று பிரகாஷ் யோசித்துக்கொண்டே இருக்க எதிரே நின்றவர்களில் ஒருவன் முதுகுப்புறமிருந்து ஒரு உருட்டுக் கட்டையை எடுத்தான்.

"ஷிட்" என்று சொல்லி,கதவை தள்ளிக் கொண்டு கண், மண் தெரியாமல் ஓட ஆரம்பித்தான் பிரகாஷ்.
அவர்களும் விடாமல் துரத்த ஆரம்பித்தனர். நீண்ட தூரம் ஓடி, பிறகு முடியாமல் ஒரு இடத்தில நின்று விட்டான்.
வெறியுடன் துரத்திக் கொண்டிருந்தவர்கள் அவனை நெருங்க, வேகமாக ஒரு கார் வந்து பிரகாஷை உள்ளே ஏற்றிக்கொண்டு பறந்தது.
சற்று பதட்டம் தெளிந்த பிறகு, "தேங்க்ஸ்" என்று சொல்லி சிரிக்க முயன்றான் பிரகாஷ்.
கார் ஓட்டிக்கொண்டிருந்தவர், "இட்ஸ் ஓ.கே. ஜஸ்ட் ரிலாக்ஸ்" என்று புன்னகைத்தார்.

அவர் முகமும், அவரது உடலை போர்த்தியிருந்த தோலும் அவனுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியது.
 
யுவர் நேம்?? என்று அவர் கேட்க "பிரகாஷ்" என்று பதில் அளித்தான்.
"வேர் ஆர் யு லிவிங் ?? என்று கேள்விக்கு மில் மவுன்ட் ரோட் என்றான் பிரகாஷ்.

சோ.. யூ ஆர் ஆன் இந்தியன்?" என்று பிரகாஷை பார்த்துக் கேட்டார்.
'நீங்களும் தானா?' என கேட்க நினைத்தான். ஆனால் எதுவும் சொல்லாமல், அவர் முகத்தை பார்த்தான். அவரும் பதில் எதிர்பார்த்த மாதிரி தெரியவில்லை.

மில் மவுன்ட் ரோடும் வந்து விட்டது. ஆனால் அவர் தன்னைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. பிரகாஷ் இறங்கியும் விட்டான்.

"தேங்க்ஸ் அகெயின்,யுவர் குட் நேம் ப்ளீஸ்" என்று இறுதியாக கேட்டான்.

"ஐ ஆம் ஜமால் யூசுஃப்" என்று முதல் கியரினை போட்டுக் கொண்டு, "ஃப்ரம் பாகிஸ்தான்" என்ற அவரது குரல் கார் சீறலையும் மீறி கேட்டது.

Wednesday, April 28, 2010

சூர்யோதயம்

"உங்கள யாரு இவள 'எம்.ஈ.' (M.E) சேர்க்க சொன்னது. ஒழுங்கா கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இப்போ ஒரு பிரச்சனையும் இருக்காதுல்ல உங்களுக்கு" என்றான் ராதாவின் அண்ணன் ராகவன்.

"இப்போ மேரி வீட்டுல மாப்ள தேட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கும் வேற வழி தெரியல.

இன்னும் ஒரு மாசம்தான் டைம். அதுக்குள்ள நல்ல வரனா பாத்து அவளுக்கு கல்யாணத்த முடிச்சிடுங்க. இல்லன்னா யார பத்தியும் கவலப்படாம நான் மேரிய கல்யாணம் பண்ணிப்பேன்" என்றான்.

"டேய் இப்படி சொல்லாதடா. ரொம்ப கஷ்டபட்டு அந்த காலேஜ்ல சீட் வாங்கி இருக்காடா.அவளோட ஆசைய எப்படிடா எங்களால கெடுக்க முடியும்" என்றாள் அவன் தாய் வரலக்ஷ்மி.

இவை அனைத்தையும் கேட்டு மிரண்டு போய், கதவோரத்தில் நின்று கொண்டிருந்தாள் ராதா.

அடுத்த நாள் கல்லூரி சென்று அவளின் நெருங்கிய தோழனான வெங்கடேஷிடம் விஷயத்தைச் சொன்னாள்.

சிறு வயது முதலே வெங்கடேஷும் ராதாவும் நெருங்கிய நண்பர்கள். வெங்கடேஷிற்கு ராதா என்றால் மிகவும் பிடிக்கும். அவளுக்கும் கூட.

வெங்கடேஷ் மனதில், 'நாம் ஏன் ராதாவை மணக்கக் கூடாது?' என்று எண்ணம் தோன்றியது.

ஆனால் அவனோ இன்னும் படிப்பை கூட முடிக்கவில்லை. வேலை என்று ஒன்று இல்லாமல் ராதாவின் பெற்றோர்கள் முன்பு இவனால் நிற்க முடியாது. ஆகையால் அமைதியாக இருந்துவிட்டான்.

ராதாவின் பெற்றோர்கள் அவசர அவசரமாக ஒரு பையனை அவள் தலையில் கட்டினார்கள்.

நாட்கள் நகர்ந்தன..

கல்யாணத்திற்கு பிறகு துபாய் சென்றுவிட்டதால், கல்லூரிக்கு தொடர்ந்து வராமல் பாதியிலேயே நின்றுவிட்டாள் ராதா.

வெங்கடேஷிற்கும் அவள் எப்படி இருக்கிறாள்.. என்ன ஆனாள் என்று விவரம் தெரியாமலே இருந்தான்.

கல்லூரி படிப்பை முடித்தான், ஒரு நல்ல வேலையும் கிடைத்தது அவனிற்கு.
ஒரு வருடம் கழித்து, திடீரென்று ராதாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

"ராதாவா என்ன ஆச்சர்யம்!! எப்படி இருக்க? கல்யாணம் ஆனது தான் தெரியும். உடனே துபாய் போயிட்ட. இப்போ தான் எனக்கு போன் பண்ணனும்னு தோனுச்சா?" என்றான்.

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள், "என் கணவர் என்னிடம் விவாகரத்து கேட்கிறார்" என்றாள்.

ஒரு வருடம் கழித்து அவளிடமிருந்து வந்த முதல் அழைப்பு. அந்த அழைப்பு வராமலே இருந்திருக்கலாம் என்று எண்ணும்படி அமைந்தது தான் வருத்தம்.

சற்று நிதானத்துடன் பேச ஆரம்பித்தவன், "என்ன ஆச்சு? ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார் உன் கணவர்?" என்றான்.

"அவர் கல்யாணத்துக்கு முன்பே ஒரு பொண்ண லவ் பண்ணியிருக்கார். ஆனா அவர் அப்பாவோட கட்டாயத்துக்காக என்னை கல்யாணம் பண்ணியிருக்கிறார்."

"இப்போ அந்த பொண்ணோட வீட்டுல அவளுக்கு மாப் பாத்துட்டு இருக்காங்க. அவளும் இவரையே நினைச்சிட்டு இருக்கா" என்று கூறினாள்.

"இந்த விஷயம் வீட்டுக்கு தெரியுமா?"

"இல்ல.. இத எப்படி வீட்டுக்கு சொல்றதுன்னு புரியல. உங்கிட்ட முதல்ல சொல்லனும்னு தோனுச்சு அதான் உனக்கு போன் பண்ணேன்."

"இது சாதாரண விஷயமில்ல!! நீயா சமாளிச்சுக்க, முதல்ல அப்பா கிட்ட சொல்லு" என்றான்.
பிறகு இரண்டு மாதத்திற்குள் நடக்கக் கூடாது என்று அவன் எண்ணியவை அனைத்தும் நல்லபடியாக நடந்து முடிந்தது.
வெங்கடேஷ் ஒரு நாள் அவன் தாயிடம் ராதாவை பற்றி பேச ஆரம்பிக்க,
"எனக்கு உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியும். ஆனா அதுல எனக்கு இஷ்டமில்ல, மத்தபடி உன் விருப்பம்" என்று கூறி சென்றுவிட்டார் அவர்.

அன்றிரவு மனதில் பல குழப்பத்துடன் உறங்காமல் இருந்த அவன், காலையில் அழகிய சூரியோதயத்தை கண்டான். திருமண ஏற்பாடுகள் துவங்கின.

Tuesday, April 27, 2010

வாழ்க தமிழ்

டேய் மச்சான் அந்த தலப்பா காரனோட வண்டிய உஷார் பண்ணிட்டேன்,வேற எவனாவது கேட்கறதுக்கு முன்னாடி நம்ப நடைய கட்டுவோம்டா என்றான் கோகுல் .
 

ஆமாம் புனே வந்து ரெண்டு மாசம் ஆகுது, இப்போ தான் வண்டி எடுத்துக்கிட்டு ஊர் சுத்த போறோம், வெளிய சொல்லவே அசிங்கமா இருக்குடா....
அதுவும் உன்னோட வரணுமா? எதாவது பிகர் கூட போனா சந்தோசமா இருக்கும் என்று சலித்துகொண்டான் விக்ரம்.
அடங்குடா கொஞ்சம்,பேசியே கொல்லாத நான் Levis 
க்கு போய் ரெண்டு T ஷர்ட் வாங்கணும், அப்படியே ரெண்டு செட் woodlands ஷாக்ஸ் வாங்கணும் என்றான் கோகுல்.

டேய்,வர வர நீ விடுர பீட்டர்க்கு அளவே இல்லாம போச்சிடா.ஷாக்ஸ் கூட woodlands ல தான் வாங்கனுமா? சரி வந்து தொலையரேன்..
வண்டியில் சென்றுகொண்டிருக்கும் போது, ஏன் டா மச்சி இந்த ஊரு பொண்ணுங்க மட்டும் சும்மா கும்முன்னு இருக்கே அதெப்படி ?

யார பார்த்தாலும் உலக அழகி மாதிரியே இருகாங்கடா, உன் கிளாஸ்ல எந்த பொண்ணு கிட்டையாவது என்ன அறிமுகப்படுத்தி வையேன்டா ?? அப்படி மட்டும் உன்னால எனக்கு ஒன்னு செட் ஆச்சி,அடுத்த நாளே உனக்கு ஒரு "Johnny Walker" வாங்கி தரேன் என்றான் விக்ரம் ..
டேய் ஏன் இப்படி 
பின்னாடி உட்கார்ந்துகிட்டு உயிரை வாங்குற, விட்டா என்ன மாமா வேல பாக்க வச்சிடுவ போல என்றான் கோகுல்.
பேசிக்கொண்டே கடைக்கு வந்து சேர்ந்தனர். நகரத்தின் மிகவும் நெரிசல் மட்டும் போக்குவரத்து மிகுந்த சாலை அது. சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் கடைக்குள்ளே சென்றனர்.
T ஷர்ட் வாங்கி விட்டு வெளியே வந்த இவருக்கும் ஒரு அதிரிச்சி காத்திருந்தது..
டேய் மாப்ள இங்க விட்டுட்டு போன வண்டிய காணம்டா என்று அலற ஆரம்பித்தான் கோகுல்.
ஐயோ அந்த தலைப்பா காரன் கிட்ட கெஞ்சி கெஞ்சி வாங்கிட்டு வந்தேனே. இப்போ அவனுக்கு என்ன சொல்லுவேன் என்று கோகுல் ஒரு புறம் புலம்பிக்கொண்டு இருக்க, மறு பக்கம் விக்ரம், "ஐயோ இந்த விஷயம் காலேஜ்ல தெரிஞ்சா ஒரு பொண்ணு கூட என்ன மதிக்க மாட்டாளே" என்று கதரி
க்கொண்டிருந்தான்..
டேய் எரும எதுக்கு பீல் பண்ணிட்டு இருக்கான் பாரு...முதல்ல வண்டிய தேடுவோம் வா என்று வாகனம் நிறுத்திய இடத்தில் நின்றுகொண்டிருந்த இருவரிடம் கேட்டான் கோகுல் . அவர்கள் தெரியாது என்று கூற இன்னொருவரிடம் கேட்டான். வண்டி விட்ட இடம் No Parking என்பதால் போக்குவரத்து துறையினர் கொண்டு சென்று விட்டதாக கூறிய அவர்க்கு நன்றி தெரிவித்துக்கொண்டு போக்குவரத்து காவல் நிலையத்துக்கு சென்றார்கள்.
வண்டிக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தா தான் விடுவோம் என்று அவர்கள் கூற இருவரும் பாக்கெட்டை தடவினார்கள். மச்சான் என் கிட்ட கிரெடிட் கார்டு தான்டா இருக்கு, காசு இல்லடா என்று கோகுல் கூற அட பீட்டர் மவனே பைசா இல்லாம தான் சுத்துரியா ?? என்கிட்ட 200 ரூபாய் தான்டா இருக்கு என்றான் விக்ரம்.
இது போதும் வா என்று காவல்துறை அதிகாரியிடம் சென்று நாங்கள் தென் இந்தியர்கள்,நகரத்தில் முதல் முறையாக வண்டி எடுத்துக்கிட்டு வந்தோம், காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் சார் என்று அவரது பாக்கெட்டில் 200 ரூபாய் சொருகி வைத்து விட்டு கல்லூரிக்கு சென்றார்கள்..

நாட்கள் இப்படியே செல்ல 3 மாதங்கள் கழித்து,

டேய் கோகுல் எனக்கு ATM ல இருந்து காசு கொஞ்சம் எடுக்கணும் அவசரமா. எனக்கு லேப் வேற இருக்கு அதனால என் வண்டி எடுத்துக்கிட்டு நீ போய்ட்டு வரியா என்றான் அந்த ஆந்த்ரா ரெட்டி.
சரி போறேன்டா என்றவனிடம், இந்தா 100 ரூபாய் வண்டிக்கு பெட்ரோல் போடு என்றான் ரெட்டி..
கோகுல் அதை வாங்கி கொண்டு விக்ரமிடம் சென்றான்.. மச்சி சீக்கிரம் வா,ரெண்டு பேரும் சிட்டில FC ரோடு
க்கு போகலாம் என்று கூறினான்.
அது சனியன் புடிச்ச ரோடுடா.அங்க போனாலே இந்த மாமா பசங்க காச புடுங்காம விட மாட்டானுங்க என்றான் விக்ரம்.
டேய் அதெல்லாம் சமாளிச்சிக்கலாம் என்று கோகுல் கூற, சரி நான் தான் வண்டிய ஓட்டிகிட்டு வருவேன் என்றான் விக்ரம்.
வண்டியில் சென்றுகொண்டிருக்க டேய் அந்த மாக்கான் ரெட்டி 100 ரூபாய் பெட்ரோல்க்கு தந்தான்.. அதுல 50 ரூபாய் பெட்ரோல் போட்டுக்கிட்டு மீதிய ஆட்டைய போட்டுக்கலாம் நம்ப என்றான் கோகுல் .

வண்டியயை விக்ரம் ஓட்ட ஜூஸ் கடை ஒன்றை கண்டனர்.டேய் வண்டிய பார்கிங் ஏரியால சரியா நிறுத்துடா என்று கோகுல் கூற,இப்போ பாரு என் திறமையை என்று சொல்லி போக்குவரத்து துறையினர் அமைத்திருந்த பார்கிங் "P" போர்டு பக்கம்சரியாக நிறுத்தினான் விக்ரம்.
இப்போ எவன் வண்டிய தூக்கிட்டு போவான் என்று பாத்துடுறேன்,என்று வீர வசனம் பேசி விட்டு அருகில் இருந்த ஜூஸ் கடையின் பெஞ்சினில் அமர்ந்தார்கள்.. இருவரும் கதை அடித்துக்கொண்டு இருந்தனர்.
பேசிகொண்டே இருக்கும்போது அலறிக்கொண்டே ஓடினான் கோகுல்,இவேன் ஏன் இப்படி ஓடுறான் என்று விக்ரம் திரும்பி பார்க்க அவனுக்கு கோவம் கோவமாக வந்தது.
பார்கிங்கில் இருந்த வாகனத்தை போக்குவரத்து அதிகாரி அவர்கள் வாகனத்திற்குள் ஏற்றி கொண்டு இருந்தார்கள்..
எரிச்சலுடன் நேராக போக்குவரத்துக்கு அதிகாரியிடம் சென்று, ஐயா நான் வாகனத்தை சரியாக "P" போர்டு அருகில் தானே நிறுத்தினேன் என்று கூற,அவர் அளித்த பதிலில் இருவரும் வாயடைத்து நின்றனர்..
அதிகாரி கூறிய பதில் " வண்டி நிறுத்தப்பட்டு இருந்த இடம் பார்கிங் ஏரியா தான்,அனால் இது இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் இல்லை,கார் பார்க் செய்யும் இடம் என்றார்" அவர்.மேலும் அவர் "P" போர்டில் கார் பார்கிங் என்று ஹிந்தியில் எழுதி இருப்பதை சுட்டி காட்டினர்..
வேறு வழியின்றி நாங்கள் தமிழர்கள், எங்களுக்கு ஹிந்தி படிக்க தெரியாது நாங்கள் கல்லூரி மாணவர்கள் என்று கெஞ்ச, கையில் இருந்த 100 ரூபாயை பிடிங்கி கொண்டு வாகனத்தை விட்டனர்..
வாகனம் கிடைத்த மகிழ்ச்சியில் இருவரும் இருக்க,கையில் இரண்டு ஜூஸ் கிளாஸ் வைத்துக்கொண்டு இவர்களை பார்த்துகொண்டிருந்தான் ஜூஸ் கடைக்காரன்.
இவர்கள் இருவரும் செய்கையில் கையில் காசு இல்லை என்று கூற அவனும் செய்கையில் உங்களுக்கு எல்லாம் நல்ல பிகர் செட் ஆகவே ஆகாது என்று தலையில் அடித்துகொண்டான்..
அலைச்சலோட தங்கி இருந்த அறைக்கு சென்ற அவர்கள்,தொலைக்காட்சி பெட்டியில் தமிழ் செய்திகள் கேட்க, அதில் பேசிக்கொண்டிருந்த தமிழகத்தின் மத்திய மந்திரியை கண்டு வெறுத்து போனார்கள்..
தமிழ் தமிழ்னு சொல்லியே நம்ப வாழ்க்கையில் கபடி ஆடிட்டாங்க..

ஆனா இவனுங்க குடும்பத்துல பாரு ஹிந்தி,ஆங்கிலம் இன்னும் எல்லா எழவையும் தெரிஞ்சி வச்சி இருப்பானுங்க. இவனுங்க எல்லாம் உருப்படுவாங்களா......

Monday, April 26, 2010

ஏன் இப்படி ?

நான் என்னுடைய பொறியியல் படிப்பை முடித்த பிறகு புனே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் எனது முதுநிலை பட்டப்படிப்பு படிக்கச் சென்றேன்..
 

புதுவகையான மக்கள்,மொழி,கலாசாரம் என்று அனைத்தும் புதுசாக இருக்க,அங்கே சென்ற இரண்டு நாட்களுக்குள் என்னுடன் தமிழகத்தில் இருந்து கல்லூரியில் சேர்ந்த நபர்களுடன் நட்பை வளர்த்துகொண்டேன்.

ஒன்றுகூடிய தமிழ் நண்பர்கள் அனைவரும் அவர்களுடைய பெயர், ஊர் என்று சில விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்க, நண்பர் ஒருவர் தன்னுடைய பெயர் இளவரசன், ஊர் விழுப்புரம் என்றும் கூறினார்..
அதை கேட்ட எனக்கு அளவில்லாத சந்தோஷம்..


இருக்காதா பின்ன!! ஆயிரம் மயில் தாண்டி தமிழ் நாட்டுல இருந்து வந்தாலே மனசுல சந்தோசம் இருக்கும்,அதுவும் தமிழ்நாட்டுல, நம்ப ஊருல இருந்து வந்திருகாங்க அப்படினா எனக்கு எவ்ளோ மழிக்சியா இருந்திருக்கும்??


உடனே விழுப்புரம்ல எங்க,எந்த எடம் என்று ஆர்வத்துல என் வாய் கேள்விகளை அடுக்க..

இளவரசனிடம் இருந்து வளவனூர் என்று பதில் வந்தது.  

அட நம்ப ஊரு.. சரி எங்க படிச்சீங்க ஸ்கூல் எல்லாம் என்று வினா எழுப்ப,நான் ராமகிருஷ்ண வித்யாலயா ல படிச்சேன் என்றார்..

ஐயோ டேய் நானும் அங்க தான் படிச்சேன் ... எந்த வருஷம் நீ 12th முடிச்ச??

நான் 2002 ல முடிச்சேன்.. நீ எப்போ முடிச்ச ?என்று என்னை கேட்டவனிடம் 2003 என்று பதில் சொன்னேன்.

அட பாவி எனக்கு அங்க ஜூனியர் டா நீ ..
என்ன ஸ்கூல் ல பார்த்து இருக்கியா ? என்று என்னை பார்த்து கேட்டவனிடம் இல்லை என்றே உண்மையை கூறினேன்..

 

டேய் எல்லாருக்கும் என்னை தெரியும் டா .. நீ மட்டும் எப்படி டா தெரியலனு 
சொல்ற ?? என்று வருந்தியவன், சரி உனக்கு சதீஷ்,ராஜ்கமல் தெரியுமா என்று என்னிடம் கேட்டான்..
 

அட நம்ப பசங்க..சதீஷ் ,ராஜ்கமல் ரெண்டு பேரும் மாநில அளவில் பள்ளியில் ஓட்ட பந்தையத்தில் சாதனை படைத்தவர்கள்,அவங்கள போய் தெரியாம இருக்க முடியுமா என்றேன் நான் ..

டேய் அவங்க ரெண்டு பேரும் என்னோட கிளாஸ் தான்.. அவங்கள மட்டும் தெரிஞ்சி இருக்கு என்ன தெரியல உனக்கு என்றவனிடம் "நீ என்ன கிழிச்ச உன்ன தெரிஞ்சிக்க" என்றேன்.. 

கோவத்தின் உச்சிக்கு சென்ற அவன் 10th ல பள்ளியிலும், மாவட்ட அளவிலும் முதிலிடம் அது மட்டுமின்றி 12th ல பள்ளியில் முதலிடம்,மாவட்ட அளவிலும் இரண்டாவதாக வந்தேன் என்றான்.


அசடு வழிந்துவிட்டு,
"விளையாடுற வயசுல விளையாடாம ரொம்ப படிச்சா இப்படி தான்".. ஹி ஹி ....
அதனால தான் உன்ன எனக்கு தெரியல என்றேன்..

இப்படி தான் நல்லா படிபவர்கள், சாதனை செய்பவர்கள் மக்கள் மனதில் பதிவதில்லை..
விளையாட்டு,அரசியல்,கலை சார்ந்த துறைகளில் உள்ளவர்கள் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறார்கள்..

இதெற்கெல்லாம் என்ன காரணமாக இருக்க முடியும்??

Thursday, April 22, 2010

இடியரசன்

இந்தியா,பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தறப்பு ஒருதின கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது.
 

அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி சென்னையில் நடந்துகிட்டு இருக்க,போட்டியை காண லக்க்ஷக்கணக்கில் கூட்டம் கூடி இருக்கு.
விறுவிறுப்பா இந்திய அணி அடித்த 291 ரன்களை பாகிஸ்தான் அணியின் வீரர்கள் துரத்திகொண்டிருந்தார்கள்.
அப்போ பாகிஸ்தான் வீரர் அப்ரிடி (afridi), இந்திய வீரர் எறிந்த பந்தை சிக்ஸ் (6) அடிக்க விண்ணை நோக்கி பந்தை பரக்க விட,காமெராக்கள் அனைத்தும் பந்தை விண்ணில் காட்ட, மக்கள் அனைவரும் பந்து பவுண்டரி தாண்டி விழுமா என்று எதிர்பார்போடு பந்தை பார்த்துகொண்டிருகார்கள்.
ஆனா பந்து பவுண்டரி தாண்டி,கூட்டத்தில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஒரு கையில் கொண்டு மடியில் கை குழந்தையோட அமர்ந்து, மொபைல் போனில் பேசிகொண்டிருக்கும் அந்த பெண்ணை நோக்கி பரந்துகொண்டிருக்கு.
அப்போ தான் சார் நீங்க, அப்படியே பறந்து போய் கொழந்தைய கொள்ள வர அந்த பந்தை ஏர்லையே பிடிச்சி அந்த உசுர காப்பாத்துறீங்க. இங்க தான்
இளையதளபதி இன் (in) "இடியரசன்" அப்படின்னு படத்தோட டைட்டில் போடுறோம் சார்.
 

எதிரி நாட்டு கொழந்தையோட உயிரை கூட மதிச்சி ரிஸ்க் எடுத்து காப்பாத்தின உங்கள எல்லாரும் தோளுல தூக்கிட்டு ஆடுறாங்க.. இங்க உங்க அறிமுக பாட்டு (introduction song) வைக்கிறோம் சார்..
 
"எமனுக்கு எமன் டா, கொழந்தையுல்லாம் கொண்டவன்டா இடியோடு மோதினா, நீ அட்ரஸ் இல்லா ஆளுடா..... "
 


அப்படின்னு தேவி ஸ்ரீ பிரசாத் மியூசிக்ல ஒரு பாட்டு வைக்கிறோம் சார்.
பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கம் உங்களுக்கு பாராட்டு தெரிவிச்சி டெல்லில விருது தராங்க சார். விருது வாங்கிட்டு நீங்க சென்னை விமான நிலையத்துல கால் எடுத்து வைக்கறீங்க,உடனே எல்லாருக்கும் முன்னாடி உங்கள ஒரு பொண்ணு கட்டி புடிச்சி முத்தம் கொடுக்க உங்க ரெண்டு பேருக்கும் காதல் ஸ்டார்ட் ஆகுது சார் என்று இயக்குனர் சொல்லி கொண்டிருக்க,
மீதி கதையை கேட்காமல், நீங்க போய் தயாரிப்பாளர பாருங்க.நான் ஓகே சொன்னேன்னு சொல்லுங்க என்று மகிழ்ச்சியுடன் கூறி அனுப்பினார் நடிகர்.