Thursday, October 6, 2011

நான் ஒரு திருட்டு பையன் !!



அப்பொழுது எனக்கு வயது 13 இருக்கும் ..

மதிய உணவு இடைவெளியின் போது,பள்ளியினருகில் இருக்கும் அந்த கடையில் தினமும் ஏதாவது வாங்கி தின்பது என்பது ஒரு பழக்கமாகிவிட்டது. அன்றும் சீக்கிரமே சாப்பிட்டு முடித்து, கடையை நோக்கி நடந்தோம். 

"டேய் இன்னைக்கு சுப்ரியா மிஸ் திருத்தி கொடுத்த சயின்ஸ்ல டெஸ்ட் பேப்பர்ல் நான் 81 மார்க் வாங்கினேன்..நீங்க எவ்ளோடா வாங்கினீங்க ??" என்று கேள்விகேட்ட தரணியிடம் "எனக்கு 73 தான் டா போட்டாங்க"  என்று பதில் சொல்லிக்கொண்டு வந்தான் ராம்ஜி... 

தரணி,"டேய் ரகு உனக்கு எவ்ளோ டா வந்துச்சி ??"

எனது சிந்தனையோ வேறெதிலோ இருந்தது. "நேத்து கமர்கட்டு, முந்தா நேத்திக்கு கடலை மிட்டாய் இன்னைக்கு மறுபடியும்....,ச்சே இந்த தரணி பயனுக்கு மட்டும் வீட்டுல எப்படி தான் காசு  தராங்களோ?"


"அவன் பதில் சொல்லாம வரத பார்த்தாலே புரியலையா?? அவன் பெயில்டா" என்றான் ராம்ஜி ..

இதை ஒரு கவுரவ பிரச்சன்னையாக தான் எடுத்துக்கொண்டேன் போலும் (பெயில் ஆனதை அல்ல, அவன் வாங்கி கொடுத்து தின்பதை)...

அடுத்த நாள் காலை அம்மா வழக்கமாக காசு வைக்கும் அந்த டப்பாவினுள் யாருக்கும் தெரியாமல் கையைவிட்டு 50 காசினை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு புறப்பட்டேன்.. எனக்கு அப்பொழுது எந்த பயமுமில்லை..

அன்று மதியம், நான் தான் என் நண்பர்களுக்கு தேன் முட்டாய் வாங்கிக்கொடுத்தேன்.

டேய் தரணி, நானும் உனக்கு வாங்கிக்கொடுத்தேன் பார் என்று மனதுள் மகிழ்ச்சியில் பொங்க,"காசு யார் டா கொடுத்தா??" என்றான் ராம்ஜி..  

இப்பொழுது எனக்கு பயம் வந்துவிட்டது.. காரணம், ராம்ஜி என் வீட்டின் அருகிலேயே இருக்கிறான். என் அம்மாவுக்கோ இவனை ரொம்பவே பிடிக்கும். இவன் கையெழுத்தை பார் எவ்ளோ அழகா இருக்கு என்று என் அம்மா சொல்லாத நாளே இல்லை.. நாளைக்கே இவன் என் அம்மாவிடம் சென்று எதையாவது உளறி வைத்துவிட்டால் என் கதி???

சற்று யோசித்த நான், "அப்பாக்கிட்ட கேட்டேன்டா அவர் தான் கொடுத்தார், அம்மா கிட்ட சொல்ல வேனாம்ன்னு சொல்லிட்டார், உனக்கு தான் தெரியுமே என் அம்மாக்கு வெளியில கடைல வாங்கி சாப்படா பிடிக்காதுன்னு!!.. நீயும் என் அம்மாகிட்ட சொல்லாம இருந்தா என் அப்பா கொடுக்குற காசுல உனக்கும் வாங்கி தரேன்" என்றேன். அன்றோடு எனக்கிருந்த ஒரு பிரச்சனை தீர்ந்தது..

தவறு செய்கிறோம் என்று தெரிந்தது ஆனால் பெரும் தவறு என்பதை நான் அந்த வயதில் உணரவில்லை... 

50 காசு 1 ரூபாய் ஆனது பிறகு 1 ரூபாய் 5 ரூபாயாக ஆனது..



ஒரு சில நாட்கள் இதே தொடர, எப்பொழுதும் காசு வைக்கும் அந்த டப்பாவில் அன்று  கையை விட்டு ஏமாந்தேன்.. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு இதே ஏமாற்றம் தான்.. 

அம்மாவுக்கு தெரிந்துவிட்டதோ என்று பயம் வந்தது, அதே சமயம் தெரிந்திருந்தால் அம்மா இப்படி இயல்பாக இருக்க மாட்டாரே என்ற எண்ணமும் வந்தது.. இருப்பினும் சில நாட்கள் இந்த பழக்கத்தை நிறுத்தி வைத்திருந்தேன். 

அன்று என் அம்மா என்னை அழைத்து, இன்னொரு ஒரு டப்பாவை காட்டி "ரகு, இதுல இருந்து 1 ரூபாய் எடுத்துகிட்டு போய் பச்சை மிளகாய் வாங்கிட்டு வாடா"  என்றார். 


1 ரூபாய் எடுக்கும் போதே அந்த டப்பாவை நன்கு கவனித்தேன், அதில்10 ரூபாய் தாளை தவிர வேறு சில்லறை எதுவுமில்லை...

அடுத்த நாள் காலை என் அம்மா என்னை பள்ளிக்கு அனுப்ப பிஸியாக இருந்த நேரம், அந்த பத்து ரூபாவை எடுத்துக்கொண்டால் என்ன என்று தோன்றியது எனக்கு.. உடனே தயங்காமல் அதனை எடுத்து பையிலிருந்த கணக்கு புத்தகத்தின் நடுவில் வைத்துக்கொண்டேன்...என்றும் போல் அன்றும் சாப்பிட்டுவிட்டு, பேருந்து நிறுத்ததிற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தேன்...  


"மனதிற்குள் கலக்கிட்டடா ரகு" என்று சொல்லிக்கொண்டே செல்ல, பின்புறத்திலிருந்து அம்மாவின் குரல் கேட்டது ..  இப்பொழது எனக்கு
வயிறு கலக்க ஆரம்பித்துவிட்டது...


"வா சாமி கும்பிட்டு போ" என்று பேருந்து நிறுத்ததிற்கு அருகிலுள்ள அந்த பிள்ளையார் கோவில்லுக்குள் அழைத்து சென்றார்..கோவிலுக்குள் சென்றதும், "ரகு பையை என்கிட்ட கொடுத்துட்டு கோவில சுத்தி வா" என்று அனுப்பினார்..


சரி தான் கும்(பிட)ம போறது பிள்ளையார இல்ல என்ன தான் என்று ஓரளவுக்கு தெரிந்து விட்டது.....நான் கோவில ஒரு சுத்து சுத்திட்டு வரத்துக்குள்ள, கணக்கு புக்கும் அதுக்குள்ள இருந்த பத்து ரூவாவும் அம்மா கையில சரியாய் சிக்கிடுச்சி.. 

இப்போ அம்மா என்ன பண்ணுவாங்க.. அப்பாக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவாரு?  ஒரு பக்கம் பயம், இன்னொரு பக்கம் அசிங்கமாவும் இருந்துச்சி...

தூரமா இருந்தே அம்மாவ பார்த்தேன்.. "எனக்கு தெரியும் நீ தான் இந்த திருட்டு  தனத்த பண்ணுறன்னு.. கையும் களவுமா பிடிக்கனும்ன்னு தான் காத்துட்டு இருந்தேன்னு அம்மா சொல்ல"..  ஒஹ் சரி தான், ப்ளான் பண்ணி தான் என்ன கவுத்திருக்காங்கன்னு புரிஞ்சிடுச்சி....

சரி இன்னைக்கு,நீ ஸ்கூல்க்கு போக வேணாம்..வீட்டுக்கு வான்னு கூட்டிட்டு போக, அப்புறமென்ன வீட்ல ஒரே கச்சேரி தான்...

அடிச்சி அடியில ஜல்லிக்கரண்டி உடன்சிடுச்சி... இருந்த ஒரே ஜல்லிக்கரண்டியும் போச்சேன்னு கோவத்துல இன்னும் நாலு அடி சேர்ந்து விழுந்துச்சி .. 

அடிவாங்கும்போது... ச்சே இப்படி அடிச்சிட்டாங்கலேன்னு அம்மா மேல அவ்ளோ கோவம்.. பிறகு யோசிச்சி பார்த்தா, பெயிலா போனதுக்கு கூட அடிக்காதவங்க இதுக்கு போய் இப்படி அடிசிருக்காங்கன்னா.. நாம ரொம்ப பெரிய தப்பு பண்ணி இருக்கனும்ன்னு தோனுச்சி.. 

என் தந்தையோ என்னை அடிக்கவுமில்ல திட்டவுமில்லை..
ஒரே வார்த்தை தான் சொன்னார்," இந்த திறமைய நீ படிப்புல காட்டினா எங்கையோ போவ"..        


அன்னைக்கு வாங்குன அடி தான், அதுக்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் காசு விஷயத்துல எந்த ஒரு தப்பும் பண்ணினதில்ல..

இப்போ யோசிச்சு பார்த்தா,அப்போ கண்டுக்காம விட்டிருந்தா இன்னைக்கு இப்படி ஒரு நல்ல நிலைமையில் இருக்க முடியுமான்னு தோணுது..


இந்த திருட்டு பயல திருத்தினதுக்காக என் அம்மாக்கு நன்றி.. அதற்க்கு உதவிய அந்த உடஞ்ச ஜல்லிக்கரண்டிக்கும் என் நன்றி !!! 

Sunday, March 27, 2011

நான், நிஷா(லா) & கிப்ளிங்...

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவும் த்ரிஷாவும் சென்னையின் ODE Cafe வில் சந்தித்துக்கொள்ளும் காட்சி வெளிவந்ததிலிருந்து அந்த இடம் மிகவும் பிரபலமடைந்தது.


அந்த ODE கபேவிற்கு தன்னை அழைத்து செல்ல வேண்டும் என்று என் பியான்சீ நிஷா கேட்க,முடியாதென்றா சொல்ல முடியும் ??

அங்கே செல்வதற்கு முன்பு,அந்த இடத்தை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் என்று கூகிள் ஆண்டவரின்  உதவிய நாடிய பொழுது தான் ODE Cafe  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறித்து தெரியவந்தது. இவனும்,இப்போ திறப்பான் அப்போ திறப்பான்னு 3 மாதங்கள் காத்திருந்து தான் மிச்சம், அவன் திறப்பதாக இல்லை.



சரி, இதே போல் சென்னையில் வேறென்ன இடங்கள் இருக்கு என்று கூகிளில் தேடும் போது தான் Kiplings Madras Cafe பற்றி தெரிய வந்தது. உடனே கிப்ளிங் கபே வலைதளத்தை பார்வையிட,அது ECR சாலையில் அக்கறை என்னும் இடத்தில் அமைந்துள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.



மார்ச் 19, கிப்ளிங் கபே செல்லலாமென்று முடிவு செய்தோம். மாலை 6.30 க்கு வருவதாக கூறி டேபிள் ரிசர்வ் செய்தோம். நான் அவளுக்கு முதல் முறையாக வாங்கி தந்த புடவையை அணிந்துக்கொண்டு என்னுடன் புறப்பட, 7 மணிக்கு அங்கே சென்றடைந்தோம்.

உள்ளே நுழையும் போதே கடலலை BGM வாசிக்க, சில்லென்று தென்றல் எங்களை உரசிக்கொண்டே வரவேற்றது.




சரியான இடத்திற்கு தான் நிஷாவை அழைத்து வந்துள்ளேன் என்று ஒரு திருப்தி என்னுள். அங்கே சர்வர்களை தவிற மற்ற டேபிளில் அமர்ந்திருந்த அனைவரும் வெள்ளைக்காரர்களே.
  
குடிசையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த ஒரு டேபிளில் நாங்கள் அமர, ராஜா என்னும் சர்வர் எங்களுக்கு மெனு கார்டை அளித்தார். மெனு கார்டில் காண்டினெண்டல் மற்றும் தாய் வரைட்டி உணவுகள் மட்டுமே இருந்தன, அதிலும் பெரும்பாலான ஐடங்கள் அசைவமே. நிஷாவோ சைவம், ஆகையால் நானும் சைவத்துக்கு தாவிக்கொண்டேன். 

முதலில் Tam Yum veg soup ஒன்று ஆர்டர் செய்தோம். பதினைந்து - இருபது நிமிடங்களில் எங்கள் மேஜைக்கு வந்தது. தாய்லாந்து வரைட்டி சூப், இது வரை நான் அதை போன்ற ஒரு சூப் சுவைத்ததே அல்ல. எனக்கு அந்த சுவைய சரியாக விவரிக்க தெரியவில்லை, ஆனால் அருமையாக இருந்தது.



அசைவமே அதிகமிருந்ததால்,விருப்பமின்றி Four-Cheese Pizza ஒன்று ஆர்டர் செய்தோம்.. பீசா வழக்கமாக ஒரேமாதிரி தானே இருக்கபோகிறது என்று நாங்கள் நினைக்க, அது வழக்கத்துக்கு மாறாக, அருமையாக இருந்தது. பொதுவாக டாமினோஸ் மற்றும் பீசா கார்னர் ஆகிய இடங்களில் தடி தடியாக இருக்கும். ஆனால் இங்கோ மிகவும் மெல்லிதாக இருந்தது ..

பிறகு Thai Flat Noodles ஆர்டர் செய்தோம். நூடுல்ஸ் பொதுவாக நூல் போல இருந்து தான் பார்த்திருக்கிறேன்.ஆனால் இதுவோ பட்ட பட்டையாக இருந்தது. வித்யாசமாக இருப்பினும் சுவை நன்றாகவே இருந்தது. 

மணி 9 ஆனது, பில் வந்ததும் 1500 ரூபாய் மொய் எழுதிவிட்டு, கிப்ளிங்க்ஸ் கபேவின் terraceக்கு சென்றோம்.

பௌர்ணமி நிலவொளியில் கடல் கொள்ளையழகுடன் மின்ன,அதனை 15 நிமிடங்கள் இருந்து ரசித்துவிட்டு புறப்பட்டோம்..  




அன்று (March 19th,2011) நிலவு பூமியின் அருகே வந்ததாம்.. 
நிலா மட்டும் தானா?? நிஷாவும் தான் !!

மை டே வாஸ் பெர்பெக்ட் !!

Friday, March 11, 2011

அந்த நொடி



இன்று: Jan 15th 2011

மாலை மணி 6. முகத்திலிருந்த அந்தப்  பருவை எண்ணி அதிகம் வருத்தப்படாமல் மீசையை முறுக்கிக் கொண்டிருந்தேன்.


"இப்போ சார் எங்க ஊர் சுத்த ரெடி ஆகிட்டு இருக்கீங்க??" என்ற என் அக்காவின் நக்கலான கேள்விக்கு நான் அளித்த பதில் அவளை சற்று நெருடியிருக்க வேண்டும்.  


என் அருகே வந்தவள் என்னை முறைத்தவாரே, "என்ன இத்தனை வருஷம் கழுச்சி அவளை இப்போ பார்க்கப்  போற??" என்று கேட்டார்.

இந்தக்  கேள்வி நான் எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால் அதற்கு பதில் சொல்ல விருப்பமில்லாமல் அங்கிருந்து அகன்று அவள் வருகைக்காக அந்தப்  பூங்காவிற்கு சென்று காத்திருந்தேன். அந்தத் தனிமை என்னை ஏழு வருடங்கள் பின்னோக்கி கடத்திச் சென்றது.

அவள் மீதான எனது முதல் பார்வை :

இப்பொழுது நினைத்து பார்த்தல் கூட எனக்கு சிரிப்பு தான் வருகிறது. அவளை நான் முதல் முறைப்  பார்த்தது 2003 இல். நான் பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த நேரம், TNPCEE என அழைக்கப்படும் பொறியியல் கல்லூரிக்கான என்ட்ரன்ஸ் கோச்சிங் கிளாஸில் தான் அவளை சந்தித்தேன்.



உண்மையைக் கூற வேண்டுமெனில் முதன் முறை சந்தித்த பொழுது காதலொன்றும் மலரவில்லை. கவிதையொன்றும் எழுதத் தோன்றவில்லை (பிளஸ் டூ படித்த பொழுது தமிழில் வீக், இப்பொழுதும் கூட). ஜஸ்ட் அவள் மீது ஒரு அட்ராக்ஷன் என்று கூறலாம். வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்துக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருப்பேன். ஏதோ ஒரு டைம் பாஸ் போல.இப்படியே ஒரு 3-4 மாதங்கள் கடந்தேன். 

-----------------------------------------------------------------

பிளஸ் டூ தேர்வும் TNPCEE தேர்வும் முடிந்து, கவுன்செல்லிங் மூலம் எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என்று கொஞ்சம் பிஸியாக இருந்தேன். இறுதியில் பொருளாதார சிக்கல்களை காரணமாக காட்டி, என் தந்தை வீட்டிலிருந்து 15 கி.மீ தொலைவிலிருக்கும் கல்லூரியில் BE CSE சேர செய்தார்.

2003 ஆகஸ்ட் மாதம் கல்லூரி தொடங்க, முதல் நாள் அவளை அந்தக்  கல்லூரியில் கண்டேன். இப்படி எல்லாம் நடக்கும் என கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. ஏதோ மனதுள் அளவில்லாத மகிழ்ச்சி. பிறகு மெல்ல மெல்ல அவளும் CSE க்கு தான் அந்தக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள் என்று தெரிய வந்தது. என் தந்தையின் மீது எனக்கிருந்த கோபம் தடம் தெரியாமல் மறைந்து சென்றது.

பொறியியல் கல்லூரிகளில் என்ன தான் CSE, ECE, MECH  என வெவ்வேறு டிபார்ட்மென்ட்ஸ் இருப்பினும் முதல் செமஸ்டர் அனைவருக்கும் பொதுவான பாடங்கள் தான். ஆகையால் டிபார்ட்மென்ட் வாரியாக அல்லாமல் வெவ்வேறு செக்ஷன்ஸ் பிரித்தார்கள். அவள் B செக்ஷன் நான் C செக்ஷன். 

இது வரை தூரத்திலிருந்து மட்டுமே அவளைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அவளது பள்ளி தோழியின் மூலம் அவளுடன் பேசும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன். அன்று அவளிடம் அதிகம் பேசவில்லை ஜஸ்ட் ஒரு இன்ட்ரோ அவ்ளோ தான். பிறகு அவள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு அழகானப் புன்னகை வெளிப்படுத்துவாள். அந்த நொடி பிறந்த பயனை அடைந்தது போலிருக்கும்.

இதன் இடையே முதல் செமஸ்டரின் போது என் அக்காவின் திருமணம் நிகழ்ந்தது. திருமணத்திற்கு அவளை அழைக்கவேண்டும். என் குடும்பத்தினரை அவளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அவளை மட்டும் தனியாக அழைத்தால் உடன் இருக்கும் நண்பர்களுக்கு என் மீது சந்தேகம் எழும் என்பதால் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். நான் எதிர்பார்த்திராதபடி என் அக்காவின் திருமணத்திற்கு எனது நண்பர்கள் மட்டும் 100 நபர்களுக்கு  மேல் வந்திருந்தனர். நான் எண்ணியபடி அவளும் வந்தாள். 


அவளிடம் என் காதலை சொல்லிவிடலாம் என்று எண்ணம் தோன்றியது, ஆனால் அவளுக்கு என்னை முழுவதுமாக தெரியாது. என்னை அவள் முழுவதும் புரிந்துக் கொண்டதும் அவளிடம் என் காதலை கூறலாமென்று எண்ணி அமைதி காத்தேன். இரண்டாவது செமஸ்டர் தொடங்க ஆவலாக எதிர்பார்த்திருந்தேன்.

------------------------------------------------------------------

இரண்டாவது செமெஸ்டர் ஒரே வகுப்பில் இணைந்தோம். அவளுடன் அதிகம் பேசும் வாய்ப்பு கிட்டியது. இது தொடர நான் ஒரு நல்ல நண்பனாக மாறினேன். அந்த மூன்று மாதங்களில், என் மேல் அவளுக்கு நல்ல எண்ணம் எழும் படி நடந்துக் கொண்டேன். என் வீட்டிற்கும் பல முறை அழைத்தும் சென்றேன். என்னிடம் பேசாமல் அவளால் இருக்க முடியாது என்ற நிலைமை உருவானது. இது தான் சரியான தருணமென்று எண்ணி அவளிடம் என் காதலையும் வெளிப்படுத்தினேன்.

நான் காதலை வெளிப்படுத்தியது 2004 பிப். மாதம். எனக்கு அவள் அளித்த பதில்.. "உன்னை ஒரு நல்ல நண்பனாக மட்டுமே பார்கிறேன். காதலனாக ஏற்க மனம் மறுக்கிறது."
அவள் பதில் எனக்கு ஏமாற்றத்தைத் தந்தும் கூட விடாமல் முயற்சி செய்தேன். ரோஸ் கொடுத்தேன். சீனியரிடமிருந்து கவிதை சுட்டு கொடுத்தேன். சுட்டது தெரிந்திருக்கும் போல.. தொடர்ந்து பல ஏமாற்றங்கள்.


இதனிடையே அவள் என் காதலுக்கு சம்மதித்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் என் தந்தையிடமும் கூறி சம்மதம் பெற்றேன். "பொண்ணுக்கு ஓகே என்றால் நானே பொண்ணு வீட்டில் பேசுறேன் என்றார் என் தந்தை".

அதன் பிறகு நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்க மனமில்லை. இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.

இறுதியாண்டு (2007) முதல் இன்று (2011 பொங்கல் தினம்)   வரை நான் அவளிடம் பேசவில்லை.. அவளுடனான மெயில் தொடர்பும் நானே துண்டித்துக் கொண்டேன். 

-------------------------------------------------------------------

ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து ஏன் நான் அவளை சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் எழுவதை தவிர்க்க முடியாது என்பதை அறிவேன். எனக்கு அவளுடனான அந்த உறவினை ஒரு வகையான கோபத்துடனும் ஏமாற்றத்துடனும் முடித்துக்கொள்ள விருப்பமில்லை.என் வாழ்வை திரும்பிப் பார்க்கும் பொழுது யாருடனும் எந்த ஒரு மனகசப்பும் இருக்கக் கூடாது என்ற ஒரு எண்ணத்தில் அவளை நானே என்னை சந்திக்க வரும்படி அழைத்தேன்.

இன்று: Jan 15th 2011

என் அழைப்பை ஏற்று வந்தாள். என்னைப் பார்த்ததும் அதே புன்னகை அவளிடமிருந்து. நான் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாகத் தான் இருந்தேன்.

என் தாய் தந்தை குறித்து நலம் விசாரித்துவிட்டு, "நீ என்னை தான் பார்க்க வந்தன்னு உன் வீட்டில் தெரியுமா?" என்று கேட்டு சிரித்துக்கொண்டாள். 

"ஹ்ம்ம்" என்றேன். 

"எல்லாத்துக்கும் நீ தான்டா காரணம். ஒழுங்கா நல்ல நண்பர்களா இருந்திருக்கலாம்" என்று அவள் பக்க நியாயத்தை மீண்டும்  நிருபிக்க முயன்றாள். 

"பொண்ணு எந்த ஊரு?? ஜாலி டைப்பா?? ம்ம்.. என்ன கல்யாணத்துக்கு கூப்பிடுவியா மாட்டியாடா??" என்று கேள்விகளை அடிக்கிக் கொண்டே இருந்தாள். 

அனைத்திற்கும் பதிலை கூறிவிட்டு அங்கிருந்து புறப்படும் முன்.. 

"இத்தனை வருடங்கள்ல  உனக்கு என் மீது 100% மேல் காதல் இருந்தது என்று எனக்கு தெரியும் ஆனால் இப்போ அதில் 1% ஆவது இருக்கா??" என்ற அவள் கேட்ட கேள்விக்கு, 

"இப்பவும் அதே 100%  இருக்கு ஆனால் நல்ல நண்பனாக" என்றேன். 

அவளைத் தொடர்ந்து இத்தனை வருடங்களாக அவளிடம் கேட்க நினைத்த அந்தக் கேள்வியை நானும் கேட்டேன்.

"இந்த நாலு வருஷத்துல, என்ன மிஸ் பண்ணிட்டேன்னு ஒரு செகண்டாவது நினைத்ததுண்டா?"

சிறிது மௌனத்திற்குப் பிறகு, "பல முறை எண்ணியதுண்டு" என்று பதில் வந்தது.

"அந்த நொடி என் காதல் வெற்றியடைந்தது." 

Friday, February 11, 2011

தீராத விளையாட்டு நினைவுகள்

என்னுடைய பொறியியல் கல்லூரி நாட்களில் (2003 - 2007) எனக்கு ஒரே ஆறுதல் கால்பந்து மட்டும் தான். பள்ளியிலிருந்தே கால்பந்து ஆடிவந்த எனக்கு கல்லூரியின் அணியில் இடம் பிடிப்பது கடினமானதாக இருக்கவில்லை. இன்னும் சொல்ல போனால், நான் கல்லூரியில் சேரும் போது கால்பந்து அணியே சரி வர உருவாகவில்லை. சீனியர் அண்ணாக்கள், பாசமாக மிரட்டி தான் முதல் செமஸ்டரில் டீமில் சேர செய்தார்கள். 

அது என்னவோ வாட்ட சாட்டமாக இருப்பதால் இவன் டெஃபன்ஸ்க்கு (defence) தான் லாயக்கு என பள்ளி பருவம் முதலே முடிவு செய்துவிட்டார்கள். ப்ளேயிங் 11 இல் முக்கியமான நபர் தான் என்றாலும், நான் ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பாடேக்கர் அல்ல என்பது எனக்கே தெரியும். இருந்தாலும் உடன் ஆடும் சக நண்பர்களுக்கு என் மீது நம்பிக்கை அதிகமே.

அணியில் சேர்ந்த முதல் மூன்று மாதங்களில், வேலூர் VIT பொறியியல் கல்லூரியில் Rivera நடைபெற்றது. ராணிபேட் பொறியியல் கல்லூரியுடன் நடந்த முதல் ஆட்டத்திலேயே தோல்வியை தழுவி விழுப்புரம் திரும்பினோம். அடுத்து செங்கல்பட் CMC  யில் நடைபெற்ற ஆட்டத்திலும் தோல்வியைத் தழுவினோம்.

பிறகு தொடர்ச்சியாக அண்ணா பல்கலைகழகத்தின் zonal - 4 பிரிவில் சென்னை வள்ளியம்மை கல்லூரியில் நடைபெற்ற ஆட்டத்தில் பங்குபெற்றோம். 

முதல் சுற்று எங்களுக்கு க்ரேசென்ட் (Crescent) பொறியியல் கல்லூரியுடன் இருந்தது. 

எங்க விளையாட்டு வாத்தி எங்களை அழைத்து, "டேய் நமக்கு இப்போ மேட்ச் க்ரேசென்ட் காலேஜ் டீம் கூட டா.. செமயா ஆடுவானுங்க. பார்த்து ஆடுங்க" என்றார்.

முதல் சுற்றிலேயே கேவலமாக ஆடி க்ரேசென்ட் பொறியியல் கல்லூரியிடம் தோல்வியடைந்தோம். ஆக முதல் வருடம் முற்றிலும் நாங்கள் தோல்வி எனும் மந்திர சொல்லையே முணுக செய்தோம்.

பின்னர் எங்கள் கல்லூரியின் விளையாட்டு வாத்தி, தன் நண்பரான குட்டியை எங்கள் அணியின் பயிற்சியாளராக நியமித்தார். குட்டி அவர்கள், பாண்டிச்சேரி தேசிய கால்பந்து அணியில் இடம்பிடித்து ஆடியவர். எங்களுக்கு விளையாட்டின் மீதிருந்த ஆர்வத்தைக் கண்ட அவர் எங்களுக்கு பயிற்சியளிக்க இசைந்தார்.

அவர் தனது முயற்சியால் புதுவையிலிருந்து சில அணியினரை எங்கள் கல்லூரிக்கு வர செய்து அவர்களுடன் நட்பு ரீதியல் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற செய்தார். சிறந்த அணியினுடன் நாங்கள் ஆடிய ஆட்டங்கள மூலம் எங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு எங்களை தயார் படுத்திக் கொண்டோம். விழுப்புரம் நகரில் நடைபெற்ற பல சிறிய போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டு சிறப்பாக விளையாடினோம். 

இப்படியாக எங்களை நாங்கள் மெருகேற்றிக் கொண்டிருக்கும் போது, எனது இரண்டாம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் Zonal ஆட்டங்களை எங்கள் கல்லூரியில் நடத்த அனுமதி கிட்டியது.

முதன் முறையாக எங்கள் கல்லூரியில் நடைபெறும் போட்டி என்பதால் மகிழ்ச்சி கலந்த டென்ஷனில் இருந்தோம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றோம். 
இரண்டு முறை தொடர்ந்து zonal 4 போட்டிகளில் வெற்றிப் பெற்ற க்ரேசென்ட் அணியினருடன் கடந்த வருடத்தின் தோல்விக்கு பழி தீர்த்துக் கொள்ளும் எண்ணத்துடன் களத்தில் இறங்கினோம்.
ஆனால் அன்று எங்கள் கல்லூரியின் ஃபிகர்களுக்கு முன்னாடி எங்களை வென்று முகத்தில் கறியைப் பூசிவிட்டு சென்றார்கள் க்ரேசென்ட் அணியினர். அன்று முதல் அவர்களை நாங்கள் வெறுப்புடனே காண ஆரம்பித்தோம். அவர்களை வீழ்த்துவதே வாழ்க்கையின் லட்சியம் என்பது போல் வெறித் தனமான பயிற்சியில் இருந்தோம். மிரட்டலான ஆட்டத்தினை வெளிபடுத்த தொடங்கினோம்.

பின்னர் எனது இறுதியாண்டில் B.S. Abdur Rahman Trophy நடத்திய க்ரேசென்ட் கல்லூரி, அதில் பங்கெடுத்துக் கொள்ள எங்கள் கல்லூரிக்கு அழைப்பு விடுத்தனர். எங்கள் மண்ணில் எங்கள் ஃபிகர்களுக்கு முன் எங்களை வீழ்த்திச் சென்ற அவர்களை அவர்கள் மண்ணில் அவர்கள் ஃபிகர்களுக்கு முன் வீழ்த்த வேண்டும் என்று முடிவெடுத்து அங்கே சென்றோம். 
இந்தப் போட்டியில் சிறப்பான பல அணியினர் அங்கே கலந்துக் கொண்டனர். முகமது சதக், புனித ஜோசஃப் பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம். கல்லூரி, சத்யபாமா, அண்ணா பல்கலைகழகம்(கிண்டி), MIT சென்னை என ஏகப்பட்ட கல்லூரிகள். முதலில் knock-out முறையில் தொடங்கிய போட்டி, பிறகு league  மேட்ச் முறையில் சென்றது.

Knock-out சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வென்று லீக் சுற்றுக்கு புனித ஜோசஃப் பொறியியல் கல்லூரி, க்ரேசென்ட் கல்லூரி, அண்ணா பல்கலைகழகம்-கிண்டி அணிகளுடன் மோதினோம். 

லீக் சுற்றில் புனித ஜோசஃப் அணியினரை 1-0 என்கிற கணக்கில் வென்றோம். அண்ணா பல்கலைகழகத்துடனும் வென்றோம்.

இருபினும் மீண்டும் ஒரு தலை பட்சமான நடுவர் மூலம் க்ரேசென்டிடம் 2-1 என தோல்வியைத் தழுவினோம். போட்டிகளின் முடிவில் க்ரேசென்ட் அணியினரை விட ஒரு புள்ளி குறைந்திருந்தால் அவர்கள் முதலிடத்தையும், நாங்கள் இரண்டாவது இடத்தையும் பிடித்தோம். இம்முறையும் எங்கள் விருப்பம் நிறைவேறவில்லை. அவர்களை எங்களால் வெல்ல முடியவில்லை. 

என்னுடைய இறுதி ஆண்டிற்கான Zonal ஆட்டங்கள் மீண்டும் க்ரேசென்ட் கல்லூரியில் நடைபெற்றது. ஒரு முறை கிட்டிய வாய்ப்பை நழுவ விட்டோம் மீண்டும் விடுவதாக இல்லை.

ஆம் நீங்கள் நினைப்பது சரி தான். நாங்கள் அவர்கள் கல்லூரியில் அவர்களை வென்று சரித்திரம் படைத்தோம் (கொஞ்சம் ஓவர் பில்டப் தான், ஆனா பொறுத்துக்கோங்க ப்ளீஸ்).

ஒரு வழியாக நாங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டினோம். பிறகு INTER-ZONAL அளவில் அரை இறுதிக்கு சென்று சில அரசியல் காரணங்களால் எங்கள் அணியை ஆட விடாமல் வெளியேற்றினார்கள். 
அடுத்து மீண்டும் தேசிய அளவில் நடைபெற்ற VIT கல்லூரியின் RIVERA விற்கு சென்றோம். அந்த வருடம் VIT அணியை அவர்கள் மண்ணில் வீழ்த்தி, இறுதி வரை முன்னேறி இரண்டாமிடத்தை பிடித்தோம். 
பின்னர் களத்தில் இறங்கினாலே, "டேய் இது விழுப்புரம் வி.ஆர்.எஸ் காலேஜ் டீம் டா.. செமயா ஆடுவானுங்க" என்று எதிரணியினர் மிரளுமளவுக்கு எங்கள் கல்லூரியின் பெயரை நிலை நாட்டினோம். 



2003- 2004  VIT Rivera                           - முதல் ஆட்டத்திலேயே  தோல்வி.
2003- 2004  CMC Chengalpet                   - முதல் ஆட்டத்திலேயே  தோல்வி.
2003-2004  Anna university Zonal           - முதல் ஆட்டத்திலேயே க்ரேசென்ட்                                                                                                         அணியினரிடம் தோல்வி.
2004 -2005  Anna university Zonal          -  இறுதி  சுற்றில்  க்ரேசென்ட் அணியினரிடம் தோல்வி.
2006-2007  BS Abdur Rahman Trophy    -  இரண்டாமிடம் ( ஒரு புள்ளி குறைவு)
2006 -2007 Anna university Zonal           -  இறுதி  சுற்றில் க்ரேசென்ட் அணியினருடன் வெற்றி.
2006 -2007 Anna university Inter-Zonal    - அரை-இறுதி  சுற்றில் அணி வெளியேற்றம்.
2006- 2007  VIT Rivera                             - இரண்டாவது பரிசு 

அடிமட்ட நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி உச்சியை அடைந்தோம். இந்த நான்கு வருட கல்லூரி வாழ்கையில், விளையாட்டில் மட்டுமல்ல பொதுவாகவே என்னுள் confidence லெவல் அதிகமானது. எதையும் எதிர்கொண்டு நிற்கும் மனநிலை உருவானது.

"யாரைக் கண்டு நாம பயந்து பின்வாங்குகிறோமோ அவன் நம்மை கண்டு பின் வாங்கும் வரை ஓயாதே.. விடாமுயற்சி இருந்தால் அவனே ஒரு நாள் உனக்காக கை தட்டுவான்."

Monday, January 3, 2011

"டண்டேலி" - சிலிர்க்கும் அனுபவம்

ஊர் சுற்றுவது என்றால் முதலில் கையைத் தூக்குகின்ற ஆள் நானாக தான் இருப்பேன். அது ஏற்கனவே பார்த்த இடமாக இருந்தாலும் சரி, பார்க்காத புது இடமாக இருந்தாலும் சரி.. எங்கேயாவது போவது என்றால் இரட்டை மகிழ்ச்சி தான். ஓர் இடத்திற்குப் போகும் முன், அந்த இடத்துல என்ன இருக்கு ஏது இருக்கு என்று கூகுள் ஆண்டவர் உதவியோடு ஆராய்ச்சிப் பண்ண ஆரம்பித்து விடுவேன். பிறகு நண்பர்களோடு அந்த இடத்திற்கு செல்ல ஆவலோடு காத்துக் கோண்டு இருப்பேன். இப்படிக் கல்லூரி காலங்களிலும், அலுவலகங்களில் பணிபுரியும் போதும் பல இடத்துக்குச் சென்று வந்துள்ளேன். இவை அனைத்திற்கும் நேர்மாறாக அமைந்தது நான் கடந்த மாதம் சென்ற ஒரு சுற்றுலா. 

சென்னையிலிருந்து இடம் பெயர்ந்து ஹைதராபாத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் நவம்பர் மாத இறுதியில் இணைந்தேன். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சில தமிழ் நண்பர்களின் அறையில் ஐந்தாவது நபராக அடைக்கலம் புகுந்தேன்.
ஒரு வியாழனன்று (9 - 12 - 2010), அலுவலகத்தில் என்ன வேலை செய்வது என்று நான் மூளையை கசக்கிக் கொண்டிருக்க.. என் அறை தோழர் சாரதியிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அவர் என்னிடம், "ரகு உனக்கு இந்த சாட்டர்டே, சன்டே என்ன பிளான்??" என்றார். எதுவுமில்லை என்று நான் கூற, "சரி.. அப்போ டண்டேலி க்கு போலாமா??" என்றார். 

 அப்படி ஓர் இடத்தின் பெயரை நான் முன்பு கேள்விப்பட்டதே இல்லை. நான், "அந்த இடம் எங்கே இருக்கு?" என்று அவரிடம் கேட்டேன். வட கர்நாடகாவில் ஹுப்ளியின் அருகில் அமைந்துள்ளதாக கூறினார். ஹைதராபாத்திலிருந்து எப்படியும் 500 - 600 கி.மீ தொலைவு இருக்கும் என்றார். எப்பொழுது, யாருடன் செல்கிறோம் என்று கேள்விகளை அவரிடம் அடுக்கினேன். வெள்ளியன்று (10 - 12 - 2010)  இரவுத் தொடங்கிய பயணம் திங்கள் (13 - 12 - 2010) காலை 7 மணி அளவில் முடியும் என்றார்.


"நம்ம ரூம்ல இருந்து நாம ரெண்டு பேர் மட்டும் தான் போறோம். இன்னும் பத்து பேர் நம்ளோட நாளைக்கு நைட் பஸ் ஸ்டாப்ல ஜாயின் பண்ணிக்குவாங்க" என்றார்.

"யார் அவங்க? உங்க டீம் மேட்ஸா!!" என்று கேட்டேன்.

"இல்ல இல்ல.. அவங்க யாருன்னே எனக்கு தெரியாது" என்றார்.

"என்னது?? யார்னே தெரியாதா!!" 

Great Adventure Hyderabad Club என்று ஒரு குழுமம் உள்ளதையும், அவர்கள் வார இறுதியில் ஏதாவது ஓர் இடத்திற்கு சுற்றுலா செல்வதையும் கூறினார். அந்த குழுமத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் விருப்பமிருந்தால் தங்கள் நண்பர்களையும் பயனர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம். உறுப்பினர்கள் எவரும் முன் பின் சந்தித்துக் கொண்டதில்லை என்றும் கூறினார். ஆக எல்லோருக்கும்  மற்றவர்கள் புதுமுகங்கள் தான். 

'ஆஹா!! போற இடம் எங்க இருக்குன்னு சரியா தெரியாது. போற இடத்துல என்ன இருக்கும்னு தெரியாது. கூட வரப் போறவங்களும் யார்னு தெரியாது. ஆனா கேட்கவே ரொம்ப நல்லா இருக்கில்ல??' 

வெள்ளியன்று அலுவலகம் முடித்து, இரவு 9 மணி அளவில் பேருந்து நிலையத்திற்குச் சென்றோம். பெரிய பெரிய பைகளை மாட்டிக் கொண்டு திரு திருவென்று விழித்துக் கொண்டிருந்தனர். 9.45க்கு ஹுப்ளிக்கு செல்லும் KSRTC AC VOLVO பேருந்து வந்து நின்றது. எங்களை இரண்டு நாட்கள் கட்டி மேய்க்கப் போறவர் (organizer) யார் என்று அறிந்துக் கொள்ள ஆவலாக இருந்தேன். எங்களையும் சேர்த்து சுற்றுலா செல்ல 10 நபர்கள் இருந்தனர் பேருந்தில். அதில் 6 ஆண்கள் 4 பெண்கள். அந்த நான்கு பெண்மணிகளுமே மணமானவர்கள். அவர்களை, அவர்களது கணவன்மார்கள் பேருந்து நிலையத்தில் வழி அனுப்பிவிட்டு பெருமூச்சு(!?) விட்டவாறே வீட்டை நோக்கிப் பயணம் செய்தனர். அமெரிக்காவை சேர்ந்த ஒருவரும் எங்களுடன் பயணம் செய்தார்.

அந்த நான்கு பெண்மணிகளுள் ஒருவர், தன்னை KC  என்று அறிமுகபடுத்திக் கொண்டார். அவர் தான் எங்களின் இந்த சுற்றுலாவிற்கு கேப்டன் (trip organizer) போலும். அன்றைய இரவு பயணத்தின் போது, நாங்கள் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை.

சனிக்கிழமை (11 - 12 - 2010) காலை 8 மணிக்கு ஹுப்ளி வந்ததும், நாங்கள் அனைவரும் அந்தப் பேருந்தை விட்டு இறங்கி எங்களை டண்டேலிக்கு அழைத்து செல்லக் காத்திருந்த டாலியில் (DOLLY - ஜீப்பின் பெயர்) ஏறினோம். சுற்றுலாவின் இறுதி வரை டாலியில் தான் நாங்கள் பயணம் செய்தோம். அப்பொழுது இந்த சுற்றுலாவுக்காக சென்னையிலிருந்து ரயிலில் ஹுப்ளிக்கு வந்திருந்த இன்னொரு பெண்மணியும் எங்களுடன் இணைந்துக் கொண்டார். ஆக இப்பொழுது மொத்தம் 11 நபர்கள். அதில் 6 ஆண்கள் 5 பெண்கள்.

ஜீப்பில் சுமார் 70 கி.மீ தொலைவு பயணம் செய்த பின்னர் சரியாக 10 மணிக்கு டண்டேலி வந்தடைந்தோம். அங்கே ஸ்டான்லி ஃபார்ம் (Stanley Farm) என்னும் ஒரு ஹோட்டலில் எங்களுக்காக அறை ஒதுக்கபட்டது. பயணத்தின் போது ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். கேரளத்தைச் சேர்ந்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் வட இந்தியர்கள் தான்.


குளிக்காமல் காலை உணவை மட்டும் முடித்துவிட்டு வாட்டர் ராஃப்டிங் (Water Rafting) செல்லத் தயாரானோம் (ராஃப்ட் என்றால் தமிழில் கட்டுமரம்). ஹோட்டலிலிருந்து டாலியில் 15 நிமிடங்கள் பயணம் செய்து காளி நதியை (Kali river) அடைந்தோம்.

Supa Dam

நான் வாகனத்தை விட்டு இறங்கி இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்க, KC தனது வாயில் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தார். அவர் புகைத்துக் கொண்டே இருக்க, வாட்டர் ராஃப்டிங் செல்ல எங்களுக்கு life jacket, helmet  இவை அனைத்தும் கொடுக்க guide வந்தார். 

6 நபர்கள் ஒரு ராஃப்டில்லும் மீதி 5 நபர்கள் இன்னொரு ராஃப்டில்லும் பயணம் செய்தோம். முன் பின் தெரியாத நபர்களாக இருப்பினும் ஒருவருக்கொருவர் நன்கு பேசத் தொடங்கினோம். காளி நதியில் 9 கி.மீ வாட்டர் ராஃப்டிங் சென்றோம். 1 மணி நேரம் 30 நிமிடங்கள் நதியில் பயணம் செய்த பின்னர் மீண்டும் கரைக்கு ஒதுங்கினோம்.


இந்த வாட்டர் ராஃப்டிங்கை நான் டிஸ்கவரி அலைவரிசையில் கண்டதுண்டு, நானும் ஒரு நதியில் இப்படிச் செல்வேன் என்று ஒரு போதும் நினைத்து பார்த்ததில்லை (அதுவும் நீச்சல் தெரியாமல்). 1200 ரூபாய் இதற்கு ஒரு பெரிய தொகையாக எனக்கு தோன்றவில்லை. தென் இந்தியாவில் இப்படி ஓர் அழகான இடம் இருப்பதும் அறியாதிருந்தேன்.

பிறகு அறைக்குச் சென்று  மதிய உணவை முடித்துக் கொண்டு கயாகிங் (Kayaking- 350 ரூபாய்) மற்றும் ஜக்கூஷி (Jacuzzi- 150 ரூபாய்) க்காக காளி நதிக்கு மீண்டும் திரும்பினோம். 
மாலை 6 மணி வரை நதியில் நேரம் கழித்துவிட்டு மீண்டும் அறைக்கு டாலியில் திரும்பிக் கொண்டிருக்க, இரவு யாரெல்லாம் சரக்கடிக்க தயார் என்று KC கேள்வி எழுப்பினார். 6 ஆண் மகன்களும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் மௌனம் காக்க, ஐந்தில் நான்கு பெண்மணிகள் கைகளை உயர்த்தினார்கள். பிறகு மெல்ல 3 ஆண்கள் கையை உயர்த்தினர் (அதுவும் பெண்கள் கலாய்த்த பிறகு). என்ன பிராண்ட் ஆர்டர் செய்வது என்பதில் கூட பெண்களே ஆதிக்கம் செலுத்தினார்கள்.

இறுதியாக 1 ஃபுல் வைட் ரம் மற்றும் 1 ஃபுல் ஆன்ட்டிக்விட்டி விஸ்கியும் வாங்கினார்கள். KC தனக்காக ஒரு பாக்கெட் தம் வாங்கிக் கொண்டார். அறைக்கு திரும்பியதும் வெளியே Campfireக்கு ஏற்பாடு செய்துவிட்டு சைட்  டிஷ் மற்றும் சோடாவிற்கு ஆர்டர் தரப்பட்டது.


பிறகென்ன ஒரே ஆட்டமும் பாட்டமும் தான். அமெரிக்க நண்பன் பென் -ஐ ஆங்கிலப் பாடல்கள் பாட விட்டு கூத்து அரங்கேறியது. பிறகு ஹிந்திப் பாடல்கள் பாட பட்டது. ரகு நீயும் பாடு நீயும் பாடு என்று அவர்கள் கூற, பாடல்களின் முடிவில் வரும் சப்தங்களை மட்டும் முனகினேன். பிறகு மணி 11 ஆனதும் இரவு உணவை முடித்துக் கொண்டு டென்ட்டிற்கு உறங்கச் சென்றோம். அந்த குளிரில் டெண்டில் உறங்கியது இனிமையாக இருந்தது. எல்லாமே எனக்கு ஒரு புது அனுபவம்.

மீண்டும் ஞாயிறு (12 - 12 - 2010) காலை 4 மணிக்கு என்னை எழுப்பினார்கள். எழுந்து காட்டுக்குள் வனப் பயணத்திற்கு (Jungle safari) புறப்பட்டோம். 
இங்க தான் எங்களை வைத்து காமெடிப் பண்ணிட்டாங்க. காட்டுக்குள்ள ஒரு குரங்கைக் கூட பார்க்க முடிய வில்லை. ஆனால் அதுக்கு 100 ரூபாய் அழுது வாங்கி விட்டார்கள். வனப் பயணம் முடிந்ததும் அதன் தொடர்ச்சியாக கவாலா குகைக்குச் (Kavala caves) சென்றோம்.


6 கி.மீ தொலைவு மலையில் நடந்துச் செல்ல வேண்டியதாயிற்று. அந்த குகையில் ஒரு சிவலிங்கம் அமைந்திருந்தது. 

பிறகு காலை உணவுக்காக அறைக்கு திரும்பிய போது மணி 11. உணவை முடித்துக் கொண்டு ஒரு சிலர் களைப்பில் அறையிலேயே உறங்க, 6 நபர்கள் மட்டும் ராப்பெல்லிங் (rapelling) சென்றோம். 75 மீட்டர் உயரத்திலிருந்த மலையிலிருந்து கையிற்றை பிடித்தவாறே கீழே இறங்க வேண்டும். கொஞ்சம் பயமாக தான் இருந்தது இருப்பினும் துணிந்து இறங்கினேன். இதுவும் ஒரு அற்புதமான அனுபவம் எனக்கு. இதற்கு 350 ரூபாய் தாராளமாகக் கொடுக்கலாம்.  



பிறகு மீண்டும் காளி நதியில் ஜக்குஷி (jacuzzi) முடித்துக் கொண்டு அறைக்கு திரும்பிய போது மணி மாலை 4.  ஜக்குஷி என்றால் இயற்கையாய் அமைந்த குளியல் தொட்டிப் போன்ற பாய்ந்தோடும் நீர் நிலை. மதிய உணவை முடித்துக் கொண்டு அங்கிருந்து 4.30க்கு டாலியில் ஹுப்ளிக்கு புறப்பட்டோம். மாலை 7 மணிக்கு ஹுப்ளியிளிருந்து அதே KSRTC AC VOLVO பேருந்தில் ஹைதராபாத்திற்கு திரும்பினோம்.

அந்த இரண்டு நாட்களில் வித்தியாசமான மனிதர்கள், அட்டகாசமான சாகச விளையாட்டுக்கள், அற்புதமான இயற்கை சூழ்நிலை என அனைத்தையும் முழுமையாக அனுபவித்து விட்டு முழுத்  திருப்தியுடன் திங்கள் காலை ஆணிப்  பிடுங்க வந்து விட்டோம்.

Wednesday, October 27, 2010

என்திசை வீசா தென்றல்

எவ்வளவு நாள்?


வசந்தம் போய் கோடையும் வந்து விட்டது. 
 
துவைக்கப் பட்ட கருஞ்சேலையாய் சாலை ஈரத்தில் மின்னிக் கொண்டிருந்தன. வழுக்கிக் கொண்டிருக்கும் வாகனங்களின் மறுபுறம் செவ்வண்ண தென்றலாய் அவள். நான் பார்க்க.. நான் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன் தென்றல் பேருந்தில் ஏறும் வரை. மழைக் காலத்தில் சாரல் தானே அடிக்கும்.. எங்கிருந்து தென்றல் வந்தது என என்னால் யோசிக்க முடியவில்லை. 

ஒருவேளை செவ்வண்ணம் என்னுள் வானவில்லை தோற்றுவித்திருக்கலாம். கடைசியில் நானுமா? ஆனால் வெளியில் தெரிந்தால் தானே நான் நாண வேண்டி இருக்கும் என பீறிட்டு எழும் கவிதை எழுதும் ஆசையையும் அடக்கிக் கொண்டேன்.

நான் சாப்பிடும் அளவு குறைகிறதா, தூக்கம் சரியாக வருகிறதா, காதல் பாட்டு பிடிக்கிறதா என என்னை உள்நோக்கி பார்த்தேன். வானவில்லும், மழையும் ஒருங்கே தெரிந்தது. ம்ம்.. நடப்பவை எல்லாம் இயற்கைக்கு மாறாகவே நடக்கின்றன.

அக்னி நட்சத்திரம் அனைத்தையும் எரித்து விடுவது என தீர்மானித்து விட்டது போலும். பாவம் என்னை அன்று தாக்கிய தென்றல் முக்காடு போட்டு கொண்டு  'தேமோ'வென வெயிலில் சென்றுக்கொண்டிருந்தது.பாரதியார் பாடல் எல்லாம் என்னவளுக்கு பரீச்சயம் இல்லை போலும்.பெரும்பாலும் அவள் பாதம் பார்த்தே நடக்கிறாள். நான் பின் தொடர்கிறேன் என்று எப்படி தான் நான் தெரியப்படுத்துவேன்? 

அலையோ  அலை என அலைந்து,தென்றலைக் குறித்து எந்தவொரு தொல்லை தரும் நண்பர்களின் உதவியுமில்லாமல் தெரிந்துக் கொண்டேன். தென்றலின் வழியில் எந்த இடைஞ்சலும் இல்லை என தெரிந்துக் கொண்டு அகமகழிந்த நொடியில் வசந்தம் பிறந்தது.

பருவங்கள் மாறுகின்றன.ஆனால் இன்னும் முதல் படியிலேயே நின்றுக் கொண்டிருக்கிறேன்.எவ்வளவு நாள் தான் இப்படியே!! என்னையும் மீறி கண்கள் கலங்கி விடும் போல.எவரையோ பார்ப்பது போல் அவள் என்னை ஒரு முறை பார்த்து விட்டாலும் கூட போதும்.ஒரு நம்பிக்கை துளிர்க்கும். ச்சே..இந்த வெயிலும்,வியர்வையும் என்னை மேலும் சோர்வும்,எரிச்சலடைய செய்கின்றன.இன்று கூட அவள் திரும்பவில்லை எனில்..நினைத்து பார்க்கவே அழுகை,அழுகையாக வருகிறது. 

சடசடவென்று ஆலங்காட்டி மழை திடீரென பெய்தது. இருக்கும் வெப்பத்தை மேலும் கிளறுகிறது.மழை நல்லதுக்கு தான் என்றாலும், அவளும் நனைவாளே என்று கவலையாக இருந்தது.ஆனால் அவளோ மிக குதூகலமாய்,முகத்தில் வழிந்த நீரை வழித்து வானத்தை நோக்கி வீசி எறிந்தாள்.எவ்வளவு அழகு? ஒரு குழந்தையின் துள்ளல் போல!!!.


சட்டென்று மழை நின்றது.கிளறப்பட்ட வெப்பம் மட்டும் அலையாய் எழுகின்றது.துப்புக் கெட்ட மழை. ஊருக்கும் நல்லது செய்யவில்லை. என்னவளையும் அதிக நேரம் மகிழ்விக்கவில்லை. என்னை பார்க்காத அவள் மகிழ்ச்சியில் வானத்தை பார்த்தாள்.ஆனால் இந்த மழையோ..

ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம்..

அவ்வ்.. ஒருவேள இப்படி இருக்குமோ? அவள் கண்டுக்கொள்ளவில்லை என்பதால் சுட்டெரிக்கும் ஆதவன் மனம் வருந்தி அழுது, பிறகு என்னவள் பார்த்தவுடன் அழுகையை நிறுத்தி இருக்குமோ!!


Thursday, October 14, 2010

விக்ரமுக்கு ஒரு சவால் (சவால் சிறுகதை)

கல்லூரி முடிந்ததும் வேகமாக வீட்டுக்கு வந்தவன் லுங்கி ஒன்றை கட்டிக்கொண்டு கடையை நோக்கி நடந்தான்.அன்று அவன் தந்தை ஏதோ சற்று களைப்புடன் காணப்படவே,"அப்பா நீங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்" என்றான் விக்ரம்.

மாலை நேரம் என்பதால் சுறுசுறுப்பாக இயங்கவேண்டிய கட்டாயம், விக்ரமுக்கு இது  பழகிய ஒன்று தான் ஆகவே திறமையாக வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தான். கடைக்கு வருபவர்கள் 98 சதவிகிதம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களே என்பதால் அவர்களுடன் சிரித்து உரையாடியபடியே வேலைகளை செய்தான்.

இரவு மணி 8 ஆக வாடிக்கையாளர்களின் வருகை சற்று குறைந்திருந்தது. விக்ரம் அவன் தந்தை அருகே இருந்த ஒரு ஸ்டூலில் அமர்ந்துக்கொண்டு  ஒரு வார இதழை புரட்டி கொண்டிருந்தான்.சினிமா பற்றிய செய்திகளை தேடி தேடி படித்துக்கொண்டிருந்தவன் ஒரு பக்கத்தில் சிறுகதை போட்டிக்கான விளம்பரத்தை கண்டான்.அதை மீண்டும் ஒரு முறை முழுவதாக படித்தவன் தனக்குள் சிரித்துக்கொண்டான்.

“என்னடா தனியா சிரிசிகிட்டு இருக்க??“என்று அவன் தந்தை கேட்க,


"ஒன்னுமில்லப்பா,ஒரு சிறுகதை போட்டிக்கான விளம்பரத்த பார்த்தேன் அதுல தங்கச்சி  காமினியோட பெயர் கூட ஒரு கேரக்டரா இருந்துச்சி அதான் சிரிச்சேன்"என்றான்.

"அட சிறுகதை போட்டியா!! எங்க அந்த விளம்பரத்தை வாசி கேட்போம்".

விக்ரம் விளம்பரத்தை வாசிக்க தொடங்கினான்,

"தமிழ்க்களஞ்சியம் குழுவினர் நடத்தும் சிறுகதை போட்டி.


போட்டிக்கான விதிமுறைகள் பின் வருமாறு

கீழே உள்ள மூன்று வாக்கியங்களைப் படியுங்கள்:

1)
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

2) “
ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலைஎன்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

3) “
காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியேஎன்று பாராட்டினார் பரந்தாமன்.

இந்த மூன்று வாக்கியங்களும் கொடுத்திருக்கும் வரிசைப்படியே வருகிற மாதிரி ஒரு சிறுகதை எழுதி நவம்பர் 1 க்கு முன் அனுப்பிவைக்கவும்.

கதையை எழுதி அனுப்பவேண்டிய முகவரி,
தபால் பெட்டி என் 4,
தமிழ்க்களஞ்சியம் குழு,
வளசரவாக்கம்,
சென்னை.

இதனை கேட்டுக்கொண்டிருந்த விக்ரமின் தந்தை, "நீ ஏண்டா ஒன்னு எழுதி அனுப்ப கூடாது??" என்றார்.

என்னது நானா!! இதுவரைக்கும் நான் எந்த ஒரு கதையும் எழுதியதே கிடையாதே!! இந்த போட்டிக்கு வேற பல பேர் எழுதுவாங்க இதெல்லாம் எனக்கு சரிபட்டு வராதுப்பா.

"டேய் B.A தமிழ் படிக்குற,போட்டியில கலந்து தான் பாரேன்.முயற்சி செய்தா தானே முடிவு எப்படி இருக்குன்னு தெரியவரும்".

அதெல்லாம் சரி,ஆனா இதை எப்படி ஆரம்பிக்க நான் ?

"ஹ்ம்ம்,அவங்க தந்துள்ள வாகியங்கள வச்சி பாக்கும் போது, எழுதுறவங்க ஒரு த்ரில்லர் அல்லது ஆக்ஷன் கதைய தான் எழுதுவாங்கன்னு தோணுது. அதுல இருந்து விலகி,நீ கொஞ்சம் வித்யாசமான கோணத்துல யோசிச்சி  பார்டா.மூளைக்கு கொஞ்சமாவது வேலைய கொடு".

"மூளையா??அப்படி ஒன்னு நிஜமாவே என்கிட்ட இருக்கா !!!" என்று தன்னையே கேட்டுக்கொண்டான். 

சரி பரிசு என்ன சொல்லியிருக்காங்க??

முதல் பரிசா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புஸ்தகம் தராங்க. இரண்டாவது  பரிசா ஐநூறு ரூபாய் மதிப்புள்ள புஸ்தகம் தராங்க.

"அட அருமை போ.யோசிச்சி ஒரு நல்ல கதையை எழுதி என்கிட்ட காட்டு. இதை உனக்கு ஒரு சவாலா எடுத்து செய்வியாடா??"என்று அவர் கேட்க, எங்கோ கண்களை அலைய விட்டுக்கொண்டிருந்த விக்ரம் தலையை மட்டும் ஆட்டினான்.

அப்பொழுது கடையிலிருந்த கலைஞரின் இலவச தொலைக்காட்சி பெட்டியில் "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்" பாடல் ஒலிக்க, பக்கத்து வீட்டு ஜானகி கடையை ஓரக்கண்களால் பார்த்தபடியே கடந்தாள்.