Monday, September 7, 2015

Go Gokarna !!

நானும் என் மனைவியும் ஒரே அலுவலகத்தில், ஒரே டீமில் பணிபுரிவதால், மற்றவரின் பணி சுமையினை நன்கு அறிவோம். என்னை  விட என் மனைவிக்கே அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி அதிக ஆணி .. 

இந்த கவலைகளை மறக்க, இதுவரை நாங்கள் பார்த்திராத ஆனால் பார்க்கவேண்டிய ஒரு இடத்திற்க்கு  செல்ல வேண்டும் என்று முடிவு செய்து எனது தேடலை கடந்த ஆண்டு 2014 நவம்பர் மாதம் தொடங்கினேன்.

நாங்கள் ஹைதராபாத்தில் இருப்பதால், இங்கிருந்து செல்லக்கூடிய இடங்களை ஆராய்ந்தேன். மேலும் அது குளிர் காலம் என்பதால் ஹில்  ஸ்டேஷனை தவிர்க்கவும் முடிவு செய்தேன்.

சில நாட்கள் இணையத்தில் மூழ்கி சில இடங்களை தேர்வு செய்தேன் 

1. ஹம்பி, கர்நாடகா 
2. டண்டேலி, ஹூப்ளி, கர்நாடகா 
3. கோவா 
4. கோதாவரி ரிவர் ட்ரிப், ராஜமுந்திரி,ஆந்திரா
5. அஜந்தா எல்லோரா, ஔரங்காபாத், மஹாராஷ்டிரா 
6. கோகர்ணா (Gokarna), கர்நாடகா 

இவை அனைத்தும் நாங்கள் ஒரு இரவு ரயில்/பேருந்து பயணத்தில் சென்றடைய கூடிய இடங்கள்..

மேலும் மனைவியுடன் கலந்து ஆலோசித்தேன் ..  

1. ஹம்பி, கர்நாடகா  

       மனைவி  -- ஹிஸ்டாரிகல் பிளேஸ் ஹ்ம்ம்.. என்று சொல்லிட்டு ஒரு லுக்கு..
       மீ -- இல்லமா  தவறுதலா இந்த லிஸ்ட்க்கு வந்துடுச்சி போல.. நெக்ஸ்ட் 

2. டண்டேலி, ஹூப்ளி, கர்நாடகா 

       மனைவி -- இங்க என்ன இருக்கு ??
       மீ -- ரிசர்வ் பாரெஸ்ட், டேம், முக்கியமா  Kali ரிவர்ல White Water Rafting போலாம் .
       மனைவி -- இதெல்லாம் நாங்கள் ஹரித்வார்/ரிஷிகேஷ்ல Ganges லையே  பண்ணிட்டோம்..
            பாரெஸ்டும்  நிறைய பார்த்தாச்சி..  
        மீ -- அப்போ நெக்ஸ்ட் என்னன்னு பார்க்க வேண்டியது தான் ..

3. கோவா  

         மனைவி -- போக வேண்டிய இடம் தான்.. லிஸ்ட்ல  இருக்கட்டும் 

4. கோதாவரி ரிவர் ட்ரிப், ராஜமுந்திரி,ஆந்திரா 

        மனைவி  -- நல்ல சாய்ஸ் தான், ஆனா..அம்மா அப்பா எல்லாரயும் கூட்டிட்டு போலாமே.. 
        மீ  -- ஓ போலாமே.. நல்ல திங்கிங்..நெக்ஸ்ட் 

5. அஜந்தா எல்லோரா, ஔரங்காபாத், மஹாராஷ்டிரா 

         மனைவி -- இப்போ கலைய ரசிக்கும் மூட் இல்லை 
         மீ  -- குட், நெக்ஸ்ட் 

6. கோகர்ணா பீச், கர்நாடகா 

         மனைவி   -- இதென்ன வித்யாசமா ஒரு இடம்.. கேள்வி பட்டதே இல்லையே.. 
          மீ -- இது நார்த் கர்நாடகால  ஒரு பீச் மா.. கோவா க்கு கொஞ்சம் கீழ வரும்..
          மனைவி -- சரி, லிஸ்ட்ல வையுங்க பாப்போம்  

ஆக ரெண்டு இடம்  GOA & GOKARNA .. இரண்டு இடங்களிலும் கடல் தான், ஆனால் அதை தாண்டி நிறைய வேறுபாடுகள் உள்ளன என்பதை இணையத்தின் உதவியுடன் அறிந்து கொண்டேன்.

நாங்கள் விரும்பும் அமைதியான/தனிமையான  ஒரு சூழல் கோகர்ணாவில்  கிடைக்கும் என்று என் மனதிற்கு பட்டது.. நான் தேடிய இடம், போகுமிடம் இது தான் என்று முடிவு செய்தேன்..

அடுத்து கோகர்ணா வில் தங்குவதற்கான இடங்களை trip advisor மூலம் தேட துவங்கினேன்.. 

கிட்டத்தட்ட 10-15 நாட்கள் அலுவலக பணியின்  இடையே இந்த தேடலில் செலவு செய்தேன்.. இறுதியாக கோகர்ணாவின் அருகே இருக்கும்  Kumta என்னும் இடத்தில்  Nirvana Nature Resort ஐ தேர்வு செய்தேன்.. 

ஜனவரி 26 திங்களன்று வரும் என்பதால் ஜனவரி 23 வெள்ளியன்று  இரவு புறப்பட்டு ஜனவரி 27 செவ்வாயன்று காலை மீண்டும் ஹைதிராபாத்  திரும்ப திட்டமிட்டேன். 

டிசம்பர் மாதம் முதல் வாரத்திலேயே நான் தேர்வு செய்த அந்த ரெசார்ட்டை  தொடர்பு கொண்டு இரண்டு நாட்கள் தங்குவதற்கு ரிசர்வ் செய்து வைத்தேன்..  அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்திற்கு முன்பே முன் பதிவு செய்து வைத்தேன்..

மேலும் ஹைதிராபாத்திலிருந்து, கோகர்ணா செல்ல நேரடி ரயில் வசதி இல்லாததால் பேருந்தில் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன்.. 

ஒருவருக்கு ஒரு வழி செலவு மட்டும் 1300 ரூவா, ஆக  இருவருக்கு இருவழிக்கு 5200 ரூவா..

இப்படி பயணத்திற்கு  தேவையானவற்றை சிறிது சிறிதாக முன்னதாகவே செய்ய துடங்கினேன். நாட்கள் கடந்தன, நாங்கள் எதிர்பார்த்த நாளும் வந்தது.

ஜனவரி 23 Hyderabad - Mangalore செல்லும் பேருந்தில் பயணம் செய்து, கோகர்ணாவை தாண்டி  நேராக முருதீசுவர் என்னும் இடத்திற்கு ஜனவரி 24 காலை 7 மணிக்கு சென்றோம். 

Inline image 1





அரபிக்கடலோரம் அமைந்துள்ள இந்த முருதீசுவர் கோவில் மூன்று புறமும் கடல் நீரால் சூழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 




இதன் கோபுரம் 20 மாடிகளை உடையது. மேலும் கோபுரத்தின் உச்சிக்கு செல்ல லிப்ட் வசதி உள்ளது (நபர்க்கு  10 ரூவா). அங்கிருந்து பார்த்தால் 123 அடி உயரமுடைய சிவனின் அற்புதக்காட்சியைக் காணலாம்.









கடற்கரையை நோக்கிய வண்ணம் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் இந்த சிலை, உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய சிவன் சிலையாகும்.  







கோவிலின் ஒரு புறம் இருக்கும் கடற்கரை மீனவர்களாலும் மற்றொரு கரை சுற்றுலா பயணிகளாலும் நிரம்பி இருந்தது.. மோட்டார் போட், ஸ்பீட் போட் வசதிகளும் அங்கே உண்டு.. 



தரிசனத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து மீண்டும் பேருந்து மூலம் கும்தா க்கு புறப்பட்டோம். கும்தாவிலிருந்து  ஆட்டோ மூலம் Nirvana Nature, Kagal சென்றடைந்த போது மதியம் 1.30 மணி.

Inline image 2


Nirvana Nature, Kagal - நான் முன்பே கூறியிருந்தது போல், 10-15 நாட்கள் மெனக்கட்டு இந்த இடத்தை தேர்ந்தெடுத்தேன்..

அதற்கான முக்கிய காரணம் அந்த இடத்தின்  அமைதியான/இயற்கையான சூழல். அதனை புகைப்படங்கள் மூலம் நீங்களே தெரிந்துக்கொள்ளலாம்.

















மதிய உணவை உண்டு ஒரு குட்டி தூக்கத்திற்கு பின்பு மாலை 5 மணிக்கு கடற்கரைக்கு சென்றோம்.. 



அருகே இருக்கும் ஒரு சில மீனவர்களை தவிர, வேறு யாரும் அங்கே இல்லை.  மக்கள் கூட்டமில்லை, கடைகள் இல்லை, குப்பைகள் இல்லை..  வெறும் அலைகளின்  சப்தம்  மட்டுமே.. அந்த பெரிய கடல், அது எங்களுக்கே சொந்தம் என்பது போலிருந்தது.. இருட்டும் வரை அங்கேயே இருந்தோம். .

  



அன்றிரவு உணவின் போது கோயம்பத்தூர் காரர் ஒருவரை கண்டோம். அவருடன் பேசுகையில்  Nirvana beach - Gokarna செல்ல படகு  வசதி உள்ளதாகவும் ஆனால் நபருக்கு 1000 கேட்பதாகவும் கூறினார்.  எனக்கோ அங்கே படகு சவாரி இருப்பது தெரியும் ஆனால் இவ்ளோ ஆகும் என்பது தெரியாதிருந்தது.
அடுத்த நாள் (ஜனவரி  25 '15) காலை கோகர்ணா செல்ல தயாரானோம்.

கோகர்ணா என்றால்  பசுவின் காது என்று அர்த்தம்..பசுவின் காதிலிருந்து சிவன் அங்கே தோன்றியதால் இந்த பெயர். அங்கே இருக்கும் மகாபலேஷ்வர் கோவில் மிகவும் பிரசீதி பெற்றது.

ஒரு முக்கிய புனித ஸ்தலமாக இருந்த கோகர்ணா, நாட்கள் செல்ல செல்ல அழகிய சுற்றுலா தளமாக உருவெடுத்தது. 

கோகர்ணாவில் ஒன்றல்ல, இரண்டல்ல 8 பீச் உள்ளன, ஒவ்வொன்றும் வித்தியாசமானவை 

1. Kudle Beach 
2. Om Beach
3. Half Moon Beach
4. Small Hell Beach
5. God's own beach
6. Heaven Beach
7. Mystery Cave Beach
8. Gokarna Main Beach


நாங்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே இருக்கும் ஒரு சிறிய மலையை கடந்தால் Heaven Beach ஐ அடையலாம். ஆகையால் நாங்கள் இருவரும் உடன் தங்கியிருந்த தமிழ் நண்பர்கள் இருவருடன்  trekking செல்ல ஆயுத்தமானோம். 







மலையின் உச்சியை அடைந்த போது, அங்கே பழைய கோட்டை ஒன்று இருந்ததற்கான அடையாளமாக மதில் சுவரை மட்டும் கண்டோம். உற்சாகமா புறப்பட்ட நாங்கள் ,அந்த சுவரை தாண்டிய பின்னர்  சிறிது பயந்தோம். வறண்ட புதர்களும் , பாம்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதுமே அதன் காரணம்.. 



  




 ஒரு வகை தயக்கத்துடனேயே மலையின் மற்றொரு புறத்திற்கு சென்றோம் (Mystery Cave Beach), ஆனால் அங்கே சென்ற பிறகு தான் கீழே இறங்க வழியில்லை என்பதை அறிந்தோம்.  



Inline image 2


பின்னர் GPS உதவியுடன் அங்கிருந்து Heaven Beach செல்லும் ஒரு ஒற்றையடி பாதையை தொடர்ந்தோம்.







​இறுதியாக Heaven Beach ஐ அடைந்தபோது மணி 11.30.  பேருக்கு ஏற்றார் போல் ஹெவென் தான் அது... 







அங்கே சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறிய பின்னர் மீண்டும் Ferry Point ஐ நோக்கி நடக்க தொடங்கினோம்.. கிட்ட தட்ட 1.30 மணிக்கு Ferry point ஐ அடைந்த போது வயிறு மம் மம் கேட்டு அழ தொடங்கிவிட்டது..

அங்கே ஒரு boat பிடித்து நபர் ஒருவருக்கு 600 என்று பேசி, அங்கிருந்து கோகர்ணாவின் மற்ற பீச்களுக்கு சென்றோம். 

முதலில் Half Moon Beach சென்றோம் , அங்கே மதிய உணவினை உண்டோம். பின்னர்  kudle beach மற்றும்  Om beach  சென்றோம்..அதனை தொடர்ந்து Mystery Cave Beach சென்றுவிட்டு மீண்டும் Ferry Point வந்தடைந்தோம்..

பொதுவாக பாண்டிச்சேரி மற்றும் சென்னையின் கடற்கரை மட்டுமே அதிகம் பார்த்திருந்த எங்களுக்கு இந்த அழகான சுத்தமான  கடல்கள் ஆச்சர்யத்தை உண்டாக்கின..






Half Moon Beach :  இங்கே 99% வெளிநாட்டவர்களே இருந்தனர்.  சிறிய கடற்கரையே, ஆனால் அழகாக இருந்தது



Om Beach :  ॐ வடிவத்தில் இருப்பதால் இந்த பெயர். Aerial View புகைப்படத்தை கீழே காணலாம்.. 




Kudle Beach: Om Beach போன்று இதுவும் பெரிய கடற்கரையே.. இவ்விரு இடத்திலும் வெளிநாட்டவர்கள் மற்றுமின்றி நம்மவர்களையும் காணலாம்.. 




Mystery Cave Beach: கரையின் ஓரத்திலிருந்து மலைக்கு மேலே இருந்த அந்த கோட்டைக்கு ஒரு குகை பாதை இருப்பதாக கூறினர்..


இவை அனைத்தையும் முடித்துக்கொண்டு மீண்டும் அறைக்கு திரும்பிய பொழுது இரவு 7.30 மணி..  

அடுத்த நாள் ஜனவரி 26 எங்கேயும் செல்லாமல் nirvana beach லேயே இருந்தோம்.. 

அன்று இரவு Mangalore - Hyderabad பேருந்தில் கும்தாவில் ஏறி அடுத்த நாள் அலுவலகத்திற்கு திரும்பினோம்...

மொத்தத்தில் அமைதியான resort, ஆளில்லா Nirvana Beach, எதிர்பாராத trekking, கடலில் அலைகளுக்கு நடுவே திரில்லிங் boat ride, வெள்ளை மணல் கொண்ட குப்பைகளில்லா அழகிய கடற்கரைகள் என அனைத்தும் எங்கள் எதிர்பார்ப்பை மிஞ்சியே இருந்தன.

Tuesday, August 20, 2013

மேகமலை ஒரு பயணம்

சில நாட்களுக்கு முன் குமுதம் இதழ் மூலம் இந்த மேகமலை பற்றியறிந்த என் தந்தை தன்னை அங்கே அழைத்து செல்லுமாறு கேட்டார்.

அலுவகத்தில் ஒரு வாரம் விடுப்பில் இருந்த நான்,மேகமலை செல்ல இது தான் சரியான நேரம் என்று முடிவெடுத்து அதற்க்கு வேண்டிய  தகவல்களை சேகரிக்க தொடங்கினேன்.


அணைத்து விவரங்களும் சேகரித்த பின்னர், நாங்கள் ஒரு ஐந்து நபர்கள் விழுப்புரத்தில் இருந்து ஆகஸ்ட் 14 காலை 5 மணிக்கு  போலேரோ வில் புறப்பட்டோம்.


கடல் மட்டத்திலிருந்து 1500 மீ உயரத்திலிருக்கும் மேகமலை, தேனியிலிருந்து கம்பம் செல்லும் வழியில் சின்னமனூர் என்னும் ஊரிலிருந்து  35 கி மீ தொலைவில் இருக்கிறது.


இப்படி ஒரு இடமிருப்பது அநேக மக்களுக்கு தெரியாத காரணத்தினால் தானோ என்னவோ ஊட்டி கொடைக்கானல் போல் இல்லாமல் இங்கே இயற்க்கை இன்னும் கொஞ்சி விளையாடி கொண்டிருக்கிறது.


காலை 11 மணியளவில் சின்னமன்னூரை அடைந்தோம். மேகமலையில் ஹோட்டல்கள் அதிகம் இல்லாத காரணத்தினாலும், நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த இடத்தில் உணவு விலை சற்று அதிகம் என்பதாலும் மதிய உணவை சின்னமன்னூரில் வாங்கிக்கொண்டோம்.


மீண்டும் மேகமலை/ஹைவேவிஸ் நோக்கி பயணம் தொடங்கியது. 





வழி நெடுக்க இருந்த திராட்சை தோட்டங்கள் எங்கள் கண்களை குளிரச்செய்தன.







மேகமலை செல்வதென்று முடிவு செய்த உடனே, அங்கே தங்குவதற்கான வசதிகள் குறித்து ஆராய தொடங்கினேன். அப்பொழுது மேகமலை ரெசிடென்சி என்னும் ஒரு ஹோட்டலை தொடர்பு கொண்டபோது அவர் என்னை கேட்ட முதல் கேள்வி "எந்த வாகனத்தில் வருகிறீர்கள்?"

நான் ஸ்விப்ட் என்றதும் வேண்டவே வேண்டாம் ரோடு சரியில்லாத காரணத்தினால் முடிந்தால் SUV ஒன்றில் வாருங்கள் என்றார்.அதனாலேயே போலேரோவில் சென்றோம். 





மேலே செல்ல செல்ல தான் அவர் அப்படி கூறியதற்கான காரணம் தெரிந்தது. வருடத்துக்கு 8-9 மாதங்கள் மழை பொழிவதால் சாலை மிகவும் மோசமானதாக இருக்கிறது. நான் ஸ்விப்ட் எடுத்து சென்றிருந்தால் நிச்சியம் ரத்த கண்ணீருடன் தான் திரும்பி இருப்பேன்.

18 கொண்டை ஊசி வளைவினை கொண்ட அந்த சாலை மிகவும் பழுதடைந்து இருந்தது.

சாலை சரிவர இல்லாததும் இவ்விடத்துக்கு மக்கள் வருகை குறைவாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

மேலே செல்ல செல்ல சில்லென்று காற்று எங்களை வரவேற்றது 


மதியம் 1 மணியளவில், மேகமலைக்கு 4 கி மீ முன்னரே நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த மேகமலை ரெசிடென்சியை  அடைந்தோம்.



அங்கே மதிய உணவை முடித்துக்கொண்டு ஒரு கைடுடன் 2 மணிக்கு வெளியே புறப்பட்டோம்.


மோசமான  சாலை காரணமாக அந்த 4 கி மீ தூரத்தை கடக்க 30 நிமிடங்களுக்கு மேல் தேவைப்பட்டது. பல இடங்களில் பாதையே இல்லை.




மேகமலையை அடைந்ததும் நெடுக்க பச்சை பசேலென்று தேயிலை தோட்டங்களை காண முடிந்தது. முன்னாறு மற்றும் வால்பாறை சென்றவர்களுக்கு இந்த தேயிலை தோட்டம் அப்படி ஒன்றும் ஒரு புதிய உற்சாகத்தை அளித்துவிட முடியாது என்பது உண்மையே.



முதலில், ஹைவேவிஸ் டாமை கண்டோம். அணையில் நீர் நிரம்பி காணப்பட்டது. 




மேகமலையில் மட்டும் கிட்டத்தட்ட 4-5 அணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஊட்டி மற்றும் கொடைக்கானல் போல் இங்கே ஏரி சிறியது கிடையாது. மேகமலையில் நாங்கள் செல்லுமிடமெங்கும் ஏரிகள் எங்களுடனேயே பயணித்தது. அவற்றில் படகு வசதி இல்லாதது பெரிய குறையாகவே இருந்தது.








மகாராஜா வியூ பாய்ன்ட், வூட் பிரியர் டீ பாக்டரி என்று இருட்டும் முன் சில இடங்களை பார்த்த பிறகு மீண்டும் அறையை அடைந்தோம்.






நாங்கள் தங்கியிருந்த இடத்தில் மின்சார வசதி இல்லாத காரணத்தினால், 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஒரு 4 மணி நேரம் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. அந்நேரத்தில் கைபேசி, காமெரா சார்ஜ் போட்டுக்கொள்ள வேண்டும். இரவு எந்த ஒரு லைட் வெளிச்சமும் இருக்காது, எங்களுக்கு ஒரு எமெர்ஜென்சி லைட் மட்டும் கொடுக்கபட்டது.


இடைவேளியின்றி தொடர்ச்சியாக கடற்கரையில் வரும்  அலையின் சப்தம் எவ்வாறு இருக்குமோ அதே போல் தான் இரவு முழவதும் காற்றின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. சில நேரங்களில் எங்கேகாற்று  நம்மை தூக்கி வீசிவிடுமோ என்று பயமாக கூட  இருந்தது.



மீண்டும் மறுநாள் காலை ட்ரெக்கிங் செல்வதற்காக 5 மணிக்கே எழுந்து, கைடையும் எழுப்பிவிட்டு கையில் டார்ச்சுடன் ஒரு நடைபயணம் சென்றோம். எந்த மிருகத்தையும் பார்க்கும் வரம் கிடைக்காத காரணத்தினால் மீண்டும் அறைக்கு வந்துவிட்டோம்.



அழகான மேக மூட்டங்களை ரசித்துவிட்டு, மேகமலையில் எங்களது பயணத்தை முடித்துக்கொண்டு சுருளி அருவிக்கு செல்ல தயாரானோம். 




மேகமலையில் தங்குவதற்கு 4-5 இடங்களே தற்போதைக்கு உள்ளன 



அரசு விடுதிகள் : 

1. பஞ்சாயத்து விடுதி  - 

2. அரசு இன்ஸ்பெக்ஷன் பங்களா

தொடர்ப்புக்கொள்ள 04554232389 or 04554232225



தனியார் விடுதிகள்: 


3. மேகமலை ரெசிடென்சி 

4. சாண்ட் ரிவர் காட்டேஜ் 
5. க்லௌட்  மவுண்டைன் பங்களா 

தொடர்ப்புக்கொள்ள திரு.சிவக்குமார் +919894055554 or +919487850508.



சுருளி மற்றும் சின்ன சுருளி அருவி :


மேகமலையில் இருந்து சுருளி மற்றும் சின்ன சுருளி என இரண்டு அருவிகள் உருவாகுகின்றன. 


இரண்டும் வெவ்வேறு திசையில் உள்ளன. பொதுவாக கம்பம் அருகே இருக்கும் சுருளி அருவி தான் பலருக்கு தெரியும் ஆனால் மயிலாடும்பாரை, வர்ஷநாடு அருகே இருக்கும் சின்ன சுருளியை அதிகம் தெரியாது.


நாங்கள் சில காரணங்களுக்காக  சுருளி அருவிக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம்.


மேகமலையில் இருந்து மீண்டும் சின்னமன்னூர் வந்து ஒரு 25 கி மீ சென்றால் சுருளி அருவியை அடைந்துவிடலாம்.


வழியெங்கும் மீண்டும் திராட்சை தோட்டங்கள், பச்சை பசேலென்று வயல்வெளிகள் பார்க்கவே அவ்ளோ ஆசையாக இருந்தது.







சுருளி அருவியில் நல்லதொரு குளியலை போட்டுவிட்டு, தேக்கடியியை ஒரு எட்டு பார்த்துவிட்டு மீண்டும் விழுப்புரம் திரும்பினோம்.

அடுத்த முறை சின்ன சுருளி,கும்பக்கரை அருவி ஆகியவற்றுக்கும் இன்னும் சில இடங்களுக்கு செல்லலாம் என்று இருக்கிறோம்.


அந்த இரண்டு நாட்கள் வீடு அலுவலகம் என்று எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் நகர வாழ்க்கையிலிருந்து தள்ளி வந்து, எந்த ஒரு மாசுமில்லாத அருமையான மேகமலையில் கழித்தது மறக்க முடியாத ஒரு அனுபவம்.


சாலைகள் அனைத்தும் சீர் செய்ததும் மீண்டும் ஒரு முறை குடும்பத்துடன் அங்கே  செல்லவேண்டும் என்ற ஒரு ஆசை உள்ளது. அதுவும் அந்த காற்றினில் இரவினை கழிக்க இதே ஆடி மாதத்தில் செல்ல வேண்டும்.