Monday, January 3, 2011

"டண்டேலி" - சிலிர்க்கும் அனுபவம்

ஊர் சுற்றுவது என்றால் முதலில் கையைத் தூக்குகின்ற ஆள் நானாக தான் இருப்பேன். அது ஏற்கனவே பார்த்த இடமாக இருந்தாலும் சரி, பார்க்காத புது இடமாக இருந்தாலும் சரி.. எங்கேயாவது போவது என்றால் இரட்டை மகிழ்ச்சி தான். ஓர் இடத்திற்குப் போகும் முன், அந்த இடத்துல என்ன இருக்கு ஏது இருக்கு என்று கூகுள் ஆண்டவர் உதவியோடு ஆராய்ச்சிப் பண்ண ஆரம்பித்து விடுவேன். பிறகு நண்பர்களோடு அந்த இடத்திற்கு செல்ல ஆவலோடு காத்துக் கோண்டு இருப்பேன். இப்படிக் கல்லூரி காலங்களிலும், அலுவலகங்களில் பணிபுரியும் போதும் பல இடத்துக்குச் சென்று வந்துள்ளேன். இவை அனைத்திற்கும் நேர்மாறாக அமைந்தது நான் கடந்த மாதம் சென்ற ஒரு சுற்றுலா. 

சென்னையிலிருந்து இடம் பெயர்ந்து ஹைதராபாத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் நவம்பர் மாத இறுதியில் இணைந்தேன். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சில தமிழ் நண்பர்களின் அறையில் ஐந்தாவது நபராக அடைக்கலம் புகுந்தேன்.
ஒரு வியாழனன்று (9 - 12 - 2010), அலுவலகத்தில் என்ன வேலை செய்வது என்று நான் மூளையை கசக்கிக் கொண்டிருக்க.. என் அறை தோழர் சாரதியிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அவர் என்னிடம், "ரகு உனக்கு இந்த சாட்டர்டே, சன்டே என்ன பிளான்??" என்றார். எதுவுமில்லை என்று நான் கூற, "சரி.. அப்போ டண்டேலி க்கு போலாமா??" என்றார். 

 அப்படி ஓர் இடத்தின் பெயரை நான் முன்பு கேள்விப்பட்டதே இல்லை. நான், "அந்த இடம் எங்கே இருக்கு?" என்று அவரிடம் கேட்டேன். வட கர்நாடகாவில் ஹுப்ளியின் அருகில் அமைந்துள்ளதாக கூறினார். ஹைதராபாத்திலிருந்து எப்படியும் 500 - 600 கி.மீ தொலைவு இருக்கும் என்றார். எப்பொழுது, யாருடன் செல்கிறோம் என்று கேள்விகளை அவரிடம் அடுக்கினேன். வெள்ளியன்று (10 - 12 - 2010)  இரவுத் தொடங்கிய பயணம் திங்கள் (13 - 12 - 2010) காலை 7 மணி அளவில் முடியும் என்றார்.


"நம்ம ரூம்ல இருந்து நாம ரெண்டு பேர் மட்டும் தான் போறோம். இன்னும் பத்து பேர் நம்ளோட நாளைக்கு நைட் பஸ் ஸ்டாப்ல ஜாயின் பண்ணிக்குவாங்க" என்றார்.

"யார் அவங்க? உங்க டீம் மேட்ஸா!!" என்று கேட்டேன்.

"இல்ல இல்ல.. அவங்க யாருன்னே எனக்கு தெரியாது" என்றார்.

"என்னது?? யார்னே தெரியாதா!!" 

Great Adventure Hyderabad Club என்று ஒரு குழுமம் உள்ளதையும், அவர்கள் வார இறுதியில் ஏதாவது ஓர் இடத்திற்கு சுற்றுலா செல்வதையும் கூறினார். அந்த குழுமத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் விருப்பமிருந்தால் தங்கள் நண்பர்களையும் பயனர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம். உறுப்பினர்கள் எவரும் முன் பின் சந்தித்துக் கொண்டதில்லை என்றும் கூறினார். ஆக எல்லோருக்கும்  மற்றவர்கள் புதுமுகங்கள் தான். 

'ஆஹா!! போற இடம் எங்க இருக்குன்னு சரியா தெரியாது. போற இடத்துல என்ன இருக்கும்னு தெரியாது. கூட வரப் போறவங்களும் யார்னு தெரியாது. ஆனா கேட்கவே ரொம்ப நல்லா இருக்கில்ல??' 

வெள்ளியன்று அலுவலகம் முடித்து, இரவு 9 மணி அளவில் பேருந்து நிலையத்திற்குச் சென்றோம். பெரிய பெரிய பைகளை மாட்டிக் கொண்டு திரு திருவென்று விழித்துக் கொண்டிருந்தனர். 9.45க்கு ஹுப்ளிக்கு செல்லும் KSRTC AC VOLVO பேருந்து வந்து நின்றது. எங்களை இரண்டு நாட்கள் கட்டி மேய்க்கப் போறவர் (organizer) யார் என்று அறிந்துக் கொள்ள ஆவலாக இருந்தேன். எங்களையும் சேர்த்து சுற்றுலா செல்ல 10 நபர்கள் இருந்தனர் பேருந்தில். அதில் 6 ஆண்கள் 4 பெண்கள். அந்த நான்கு பெண்மணிகளுமே மணமானவர்கள். அவர்களை, அவர்களது கணவன்மார்கள் பேருந்து நிலையத்தில் வழி அனுப்பிவிட்டு பெருமூச்சு(!?) விட்டவாறே வீட்டை நோக்கிப் பயணம் செய்தனர். அமெரிக்காவை சேர்ந்த ஒருவரும் எங்களுடன் பயணம் செய்தார்.

அந்த நான்கு பெண்மணிகளுள் ஒருவர், தன்னை KC  என்று அறிமுகபடுத்திக் கொண்டார். அவர் தான் எங்களின் இந்த சுற்றுலாவிற்கு கேப்டன் (trip organizer) போலும். அன்றைய இரவு பயணத்தின் போது, நாங்கள் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை.

சனிக்கிழமை (11 - 12 - 2010) காலை 8 மணிக்கு ஹுப்ளி வந்ததும், நாங்கள் அனைவரும் அந்தப் பேருந்தை விட்டு இறங்கி எங்களை டண்டேலிக்கு அழைத்து செல்லக் காத்திருந்த டாலியில் (DOLLY - ஜீப்பின் பெயர்) ஏறினோம். சுற்றுலாவின் இறுதி வரை டாலியில் தான் நாங்கள் பயணம் செய்தோம். அப்பொழுது இந்த சுற்றுலாவுக்காக சென்னையிலிருந்து ரயிலில் ஹுப்ளிக்கு வந்திருந்த இன்னொரு பெண்மணியும் எங்களுடன் இணைந்துக் கொண்டார். ஆக இப்பொழுது மொத்தம் 11 நபர்கள். அதில் 6 ஆண்கள் 5 பெண்கள்.

ஜீப்பில் சுமார் 70 கி.மீ தொலைவு பயணம் செய்த பின்னர் சரியாக 10 மணிக்கு டண்டேலி வந்தடைந்தோம். அங்கே ஸ்டான்லி ஃபார்ம் (Stanley Farm) என்னும் ஒரு ஹோட்டலில் எங்களுக்காக அறை ஒதுக்கபட்டது. பயணத்தின் போது ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். கேரளத்தைச் சேர்ந்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் வட இந்தியர்கள் தான்.


குளிக்காமல் காலை உணவை மட்டும் முடித்துவிட்டு வாட்டர் ராஃப்டிங் (Water Rafting) செல்லத் தயாரானோம் (ராஃப்ட் என்றால் தமிழில் கட்டுமரம்). ஹோட்டலிலிருந்து டாலியில் 15 நிமிடங்கள் பயணம் செய்து காளி நதியை (Kali river) அடைந்தோம்.

Supa Dam

நான் வாகனத்தை விட்டு இறங்கி இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்க, KC தனது வாயில் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தார். அவர் புகைத்துக் கொண்டே இருக்க, வாட்டர் ராஃப்டிங் செல்ல எங்களுக்கு life jacket, helmet  இவை அனைத்தும் கொடுக்க guide வந்தார். 

6 நபர்கள் ஒரு ராஃப்டில்லும் மீதி 5 நபர்கள் இன்னொரு ராஃப்டில்லும் பயணம் செய்தோம். முன் பின் தெரியாத நபர்களாக இருப்பினும் ஒருவருக்கொருவர் நன்கு பேசத் தொடங்கினோம். காளி நதியில் 9 கி.மீ வாட்டர் ராஃப்டிங் சென்றோம். 1 மணி நேரம் 30 நிமிடங்கள் நதியில் பயணம் செய்த பின்னர் மீண்டும் கரைக்கு ஒதுங்கினோம்.


இந்த வாட்டர் ராஃப்டிங்கை நான் டிஸ்கவரி அலைவரிசையில் கண்டதுண்டு, நானும் ஒரு நதியில் இப்படிச் செல்வேன் என்று ஒரு போதும் நினைத்து பார்த்ததில்லை (அதுவும் நீச்சல் தெரியாமல்). 1200 ரூபாய் இதற்கு ஒரு பெரிய தொகையாக எனக்கு தோன்றவில்லை. தென் இந்தியாவில் இப்படி ஓர் அழகான இடம் இருப்பதும் அறியாதிருந்தேன்.

பிறகு அறைக்குச் சென்று  மதிய உணவை முடித்துக் கொண்டு கயாகிங் (Kayaking- 350 ரூபாய்) மற்றும் ஜக்கூஷி (Jacuzzi- 150 ரூபாய்) க்காக காளி நதிக்கு மீண்டும் திரும்பினோம். 
மாலை 6 மணி வரை நதியில் நேரம் கழித்துவிட்டு மீண்டும் அறைக்கு டாலியில் திரும்பிக் கொண்டிருக்க, இரவு யாரெல்லாம் சரக்கடிக்க தயார் என்று KC கேள்வி எழுப்பினார். 6 ஆண் மகன்களும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் மௌனம் காக்க, ஐந்தில் நான்கு பெண்மணிகள் கைகளை உயர்த்தினார்கள். பிறகு மெல்ல 3 ஆண்கள் கையை உயர்த்தினர் (அதுவும் பெண்கள் கலாய்த்த பிறகு). என்ன பிராண்ட் ஆர்டர் செய்வது என்பதில் கூட பெண்களே ஆதிக்கம் செலுத்தினார்கள்.

இறுதியாக 1 ஃபுல் வைட் ரம் மற்றும் 1 ஃபுல் ஆன்ட்டிக்விட்டி விஸ்கியும் வாங்கினார்கள். KC தனக்காக ஒரு பாக்கெட் தம் வாங்கிக் கொண்டார். அறைக்கு திரும்பியதும் வெளியே Campfireக்கு ஏற்பாடு செய்துவிட்டு சைட்  டிஷ் மற்றும் சோடாவிற்கு ஆர்டர் தரப்பட்டது.


பிறகென்ன ஒரே ஆட்டமும் பாட்டமும் தான். அமெரிக்க நண்பன் பென் -ஐ ஆங்கிலப் பாடல்கள் பாட விட்டு கூத்து அரங்கேறியது. பிறகு ஹிந்திப் பாடல்கள் பாட பட்டது. ரகு நீயும் பாடு நீயும் பாடு என்று அவர்கள் கூற, பாடல்களின் முடிவில் வரும் சப்தங்களை மட்டும் முனகினேன். பிறகு மணி 11 ஆனதும் இரவு உணவை முடித்துக் கொண்டு டென்ட்டிற்கு உறங்கச் சென்றோம். அந்த குளிரில் டெண்டில் உறங்கியது இனிமையாக இருந்தது. எல்லாமே எனக்கு ஒரு புது அனுபவம்.

மீண்டும் ஞாயிறு (12 - 12 - 2010) காலை 4 மணிக்கு என்னை எழுப்பினார்கள். எழுந்து காட்டுக்குள் வனப் பயணத்திற்கு (Jungle safari) புறப்பட்டோம். 
இங்க தான் எங்களை வைத்து காமெடிப் பண்ணிட்டாங்க. காட்டுக்குள்ள ஒரு குரங்கைக் கூட பார்க்க முடிய வில்லை. ஆனால் அதுக்கு 100 ரூபாய் அழுது வாங்கி விட்டார்கள். வனப் பயணம் முடிந்ததும் அதன் தொடர்ச்சியாக கவாலா குகைக்குச் (Kavala caves) சென்றோம்.


6 கி.மீ தொலைவு மலையில் நடந்துச் செல்ல வேண்டியதாயிற்று. அந்த குகையில் ஒரு சிவலிங்கம் அமைந்திருந்தது. 

பிறகு காலை உணவுக்காக அறைக்கு திரும்பிய போது மணி 11. உணவை முடித்துக் கொண்டு ஒரு சிலர் களைப்பில் அறையிலேயே உறங்க, 6 நபர்கள் மட்டும் ராப்பெல்லிங் (rapelling) சென்றோம். 75 மீட்டர் உயரத்திலிருந்த மலையிலிருந்து கையிற்றை பிடித்தவாறே கீழே இறங்க வேண்டும். கொஞ்சம் பயமாக தான் இருந்தது இருப்பினும் துணிந்து இறங்கினேன். இதுவும் ஒரு அற்புதமான அனுபவம் எனக்கு. இதற்கு 350 ரூபாய் தாராளமாகக் கொடுக்கலாம்.  



பிறகு மீண்டும் காளி நதியில் ஜக்குஷி (jacuzzi) முடித்துக் கொண்டு அறைக்கு திரும்பிய போது மணி மாலை 4.  ஜக்குஷி என்றால் இயற்கையாய் அமைந்த குளியல் தொட்டிப் போன்ற பாய்ந்தோடும் நீர் நிலை. மதிய உணவை முடித்துக் கொண்டு அங்கிருந்து 4.30க்கு டாலியில் ஹுப்ளிக்கு புறப்பட்டோம். மாலை 7 மணிக்கு ஹுப்ளியிளிருந்து அதே KSRTC AC VOLVO பேருந்தில் ஹைதராபாத்திற்கு திரும்பினோம்.

அந்த இரண்டு நாட்களில் வித்தியாசமான மனிதர்கள், அட்டகாசமான சாகச விளையாட்டுக்கள், அற்புதமான இயற்கை சூழ்நிலை என அனைத்தையும் முழுமையாக அனுபவித்து விட்டு முழுத்  திருப்தியுடன் திங்கள் காலை ஆணிப்  பிடுங்க வந்து விட்டோம்.

5 comments:

குசும்பன் said...

சூப்பரு, படிக்கும் பொழுதே அங்க போகனும் என்று தோனுது...

இரகுராமன் said...

Thanks Cable anna :)

Unknown said...

கொடுத்து வச்சவன்.

ராஃப்ட்டைக் கட்டுமரம்ன்னு சொல்றதை விட மிதவைன்னு சொல்லலாம்

இரகுராமன் said...

//கொடுத்து வச்சவன்//

நம்ம கையில என்ன அண்ணா இருக்கு ..எல்லாம் ஆண்டவன் செயல்(ரஜினி போல்)

//ராஃப்ட்டைக் கட்டுமரம்ன்னு சொல்றதை விட மிதவைன்னு சொல்லலாம்

கூகிள் ஆண்டவர் என்னை ஏமாத்திட்டார் :(

இரகுராமன் said...

//சூப்பரு, படிக்கும் பொழுதே அங்க போகனும் என்று தோனுது...//

நண்பர்களுடன் சென்று கும்மியடிக்க சரியான இடம்.. ஹனிமூன் போறவங்களும் போகலாம்.. :):)