Friday, March 11, 2011

அந்த நொடிஇன்று: Jan 15th 2011

மாலை மணி 6. முகத்திலிருந்த அந்தப்  பருவை எண்ணி அதிகம் வருத்தப்படாமல் மீசையை முறுக்கிக் கொண்டிருந்தேன்.


"இப்போ சார் எங்க ஊர் சுத்த ரெடி ஆகிட்டு இருக்கீங்க??" என்ற என் அக்காவின் நக்கலான கேள்விக்கு நான் அளித்த பதில் அவளை சற்று நெருடியிருக்க வேண்டும்.  


என் அருகே வந்தவள் என்னை முறைத்தவாரே, "என்ன இத்தனை வருஷம் கழுச்சி அவளை இப்போ பார்க்கப்  போற??" என்று கேட்டார்.

இந்தக்  கேள்வி நான் எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால் அதற்கு பதில் சொல்ல விருப்பமில்லாமல் அங்கிருந்து அகன்று அவள் வருகைக்காக அந்தப்  பூங்காவிற்கு சென்று காத்திருந்தேன். அந்தத் தனிமை என்னை ஏழு வருடங்கள் பின்னோக்கி கடத்திச் சென்றது.

அவள் மீதான எனது முதல் பார்வை :

இப்பொழுது நினைத்து பார்த்தல் கூட எனக்கு சிரிப்பு தான் வருகிறது. அவளை நான் முதல் முறைப்  பார்த்தது 2003 இல். நான் பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த நேரம், TNPCEE என அழைக்கப்படும் பொறியியல் கல்லூரிக்கான என்ட்ரன்ஸ் கோச்சிங் கிளாஸில் தான் அவளை சந்தித்தேன்.உண்மையைக் கூற வேண்டுமெனில் முதன் முறை சந்தித்த பொழுது காதலொன்றும் மலரவில்லை. கவிதையொன்றும் எழுதத் தோன்றவில்லை (பிளஸ் டூ படித்த பொழுது தமிழில் வீக், இப்பொழுதும் கூட). ஜஸ்ட் அவள் மீது ஒரு அட்ராக்ஷன் என்று கூறலாம். வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்துக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருப்பேன். ஏதோ ஒரு டைம் பாஸ் போல.இப்படியே ஒரு 3-4 மாதங்கள் கடந்தேன். 

-----------------------------------------------------------------

பிளஸ் டூ தேர்வும் TNPCEE தேர்வும் முடிந்து, கவுன்செல்லிங் மூலம் எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என்று கொஞ்சம் பிஸியாக இருந்தேன். இறுதியில் பொருளாதார சிக்கல்களை காரணமாக காட்டி, என் தந்தை வீட்டிலிருந்து 15 கி.மீ தொலைவிலிருக்கும் கல்லூரியில் BE CSE சேர செய்தார்.

2003 ஆகஸ்ட் மாதம் கல்லூரி தொடங்க, முதல் நாள் அவளை அந்தக்  கல்லூரியில் கண்டேன். இப்படி எல்லாம் நடக்கும் என கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. ஏதோ மனதுள் அளவில்லாத மகிழ்ச்சி. பிறகு மெல்ல மெல்ல அவளும் CSE க்கு தான் அந்தக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள் என்று தெரிய வந்தது. என் தந்தையின் மீது எனக்கிருந்த கோபம் தடம் தெரியாமல் மறைந்து சென்றது.

பொறியியல் கல்லூரிகளில் என்ன தான் CSE, ECE, MECH  என வெவ்வேறு டிபார்ட்மென்ட்ஸ் இருப்பினும் முதல் செமஸ்டர் அனைவருக்கும் பொதுவான பாடங்கள் தான். ஆகையால் டிபார்ட்மென்ட் வாரியாக அல்லாமல் வெவ்வேறு செக்ஷன்ஸ் பிரித்தார்கள். அவள் B செக்ஷன் நான் C செக்ஷன். 

இது வரை தூரத்திலிருந்து மட்டுமே அவளைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அவளது பள்ளி தோழியின் மூலம் அவளுடன் பேசும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன். அன்று அவளிடம் அதிகம் பேசவில்லை ஜஸ்ட் ஒரு இன்ட்ரோ அவ்ளோ தான். பிறகு அவள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு அழகானப் புன்னகை வெளிப்படுத்துவாள். அந்த நொடி பிறந்த பயனை அடைந்தது போலிருக்கும்.

இதன் இடையே முதல் செமஸ்டரின் போது என் அக்காவின் திருமணம் நிகழ்ந்தது. திருமணத்திற்கு அவளை அழைக்கவேண்டும். என் குடும்பத்தினரை அவளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அவளை மட்டும் தனியாக அழைத்தால் உடன் இருக்கும் நண்பர்களுக்கு என் மீது சந்தேகம் எழும் என்பதால் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். நான் எதிர்பார்த்திராதபடி என் அக்காவின் திருமணத்திற்கு எனது நண்பர்கள் மட்டும் 100 நபர்களுக்கு  மேல் வந்திருந்தனர். நான் எண்ணியபடி அவளும் வந்தாள். 


அவளிடம் என் காதலை சொல்லிவிடலாம் என்று எண்ணம் தோன்றியது, ஆனால் அவளுக்கு என்னை முழுவதுமாக தெரியாது. என்னை அவள் முழுவதும் புரிந்துக் கொண்டதும் அவளிடம் என் காதலை கூறலாமென்று எண்ணி அமைதி காத்தேன். இரண்டாவது செமஸ்டர் தொடங்க ஆவலாக எதிர்பார்த்திருந்தேன்.

------------------------------------------------------------------

இரண்டாவது செமெஸ்டர் ஒரே வகுப்பில் இணைந்தோம். அவளுடன் அதிகம் பேசும் வாய்ப்பு கிட்டியது. இது தொடர நான் ஒரு நல்ல நண்பனாக மாறினேன். அந்த மூன்று மாதங்களில், என் மேல் அவளுக்கு நல்ல எண்ணம் எழும் படி நடந்துக் கொண்டேன். என் வீட்டிற்கும் பல முறை அழைத்தும் சென்றேன். என்னிடம் பேசாமல் அவளால் இருக்க முடியாது என்ற நிலைமை உருவானது. இது தான் சரியான தருணமென்று எண்ணி அவளிடம் என் காதலையும் வெளிப்படுத்தினேன்.

நான் காதலை வெளிப்படுத்தியது 2004 பிப். மாதம். எனக்கு அவள் அளித்த பதில்.. "உன்னை ஒரு நல்ல நண்பனாக மட்டுமே பார்கிறேன். காதலனாக ஏற்க மனம் மறுக்கிறது."
அவள் பதில் எனக்கு ஏமாற்றத்தைத் தந்தும் கூட விடாமல் முயற்சி செய்தேன். ரோஸ் கொடுத்தேன். சீனியரிடமிருந்து கவிதை சுட்டு கொடுத்தேன். சுட்டது தெரிந்திருக்கும் போல.. தொடர்ந்து பல ஏமாற்றங்கள்.


இதனிடையே அவள் என் காதலுக்கு சம்மதித்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் என் தந்தையிடமும் கூறி சம்மதம் பெற்றேன். "பொண்ணுக்கு ஓகே என்றால் நானே பொண்ணு வீட்டில் பேசுறேன் என்றார் என் தந்தை".

அதன் பிறகு நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்க மனமில்லை. இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.

இறுதியாண்டு (2007) முதல் இன்று (2011 பொங்கல் தினம்)   வரை நான் அவளிடம் பேசவில்லை.. அவளுடனான மெயில் தொடர்பும் நானே துண்டித்துக் கொண்டேன். 

-------------------------------------------------------------------

ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து ஏன் நான் அவளை சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் எழுவதை தவிர்க்க முடியாது என்பதை அறிவேன். எனக்கு அவளுடனான அந்த உறவினை ஒரு வகையான கோபத்துடனும் ஏமாற்றத்துடனும் முடித்துக்கொள்ள விருப்பமில்லை.என் வாழ்வை திரும்பிப் பார்க்கும் பொழுது யாருடனும் எந்த ஒரு மனகசப்பும் இருக்கக் கூடாது என்ற ஒரு எண்ணத்தில் அவளை நானே என்னை சந்திக்க வரும்படி அழைத்தேன்.

இன்று: Jan 15th 2011

என் அழைப்பை ஏற்று வந்தாள். என்னைப் பார்த்ததும் அதே புன்னகை அவளிடமிருந்து. நான் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாகத் தான் இருந்தேன்.

என் தாய் தந்தை குறித்து நலம் விசாரித்துவிட்டு, "நீ என்னை தான் பார்க்க வந்தன்னு உன் வீட்டில் தெரியுமா?" என்று கேட்டு சிரித்துக்கொண்டாள். 

"ஹ்ம்ம்" என்றேன். 

"எல்லாத்துக்கும் நீ தான்டா காரணம். ஒழுங்கா நல்ல நண்பர்களா இருந்திருக்கலாம்" என்று அவள் பக்க நியாயத்தை மீண்டும்  நிருபிக்க முயன்றாள். 

"பொண்ணு எந்த ஊரு?? ஜாலி டைப்பா?? ம்ம்.. என்ன கல்யாணத்துக்கு கூப்பிடுவியா மாட்டியாடா??" என்று கேள்விகளை அடிக்கிக் கொண்டே இருந்தாள். 

அனைத்திற்கும் பதிலை கூறிவிட்டு அங்கிருந்து புறப்படும் முன்.. 

"இத்தனை வருடங்கள்ல  உனக்கு என் மீது 100% மேல் காதல் இருந்தது என்று எனக்கு தெரியும் ஆனால் இப்போ அதில் 1% ஆவது இருக்கா??" என்ற அவள் கேட்ட கேள்விக்கு, 

"இப்பவும் அதே 100%  இருக்கு ஆனால் நல்ல நண்பனாக" என்றேன். 

அவளைத் தொடர்ந்து இத்தனை வருடங்களாக அவளிடம் கேட்க நினைத்த அந்தக் கேள்வியை நானும் கேட்டேன்.

"இந்த நாலு வருஷத்துல, என்ன மிஸ் பண்ணிட்டேன்னு ஒரு செகண்டாவது நினைத்ததுண்டா?"

சிறிது மௌனத்திற்குப் பிறகு, "பல முறை எண்ணியதுண்டு" என்று பதில் வந்தது.

"அந்த நொடி என் காதல் வெற்றியடைந்தது." 

5 comments:

ராம்குமார் - அமுதன் said...

Ultimate Story !!!!! Super Super Super... Vadai EnaKKE...

Anonymous said...

முக புத்தகம் வாயிலாக முகவரி கண்டு வந்தேன் .. அருமையான எழுத்து நடை ...

இரகுராமன்
நீங்கள் விரும்பும் நபர் நானாக இருக்கக் கூடும்.
View my complete profile
நீங்க சொன்னது போல பல விரும்பும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருப்பிர்கள் உங்க எழுத்து உருவில்

bharathi said...

WOOOOOO... xtraordinary story. GR8. Congrats, keep it up

இரகுராமன் said...

@ ராம்குமார் - அமுதன் - நன்றி.. மசால் வடையா .. தயிர் வடையா :P

@ கல்பனா- என் பதிவை படித்து உங்கள் கருத்துக்களை பதித்தமைக்கு மிக்க நன்றி :))

@ bharathi - Thanks a lot for your motivation. Thanks again :)

Anonymous said...

super anna,really fantastic