Wednesday, July 28, 2010

என்ன மரியாதை..என்ன மரியாதை

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே.. 
பாபு என்று பெயர் கொண்ட யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை..


"உலக நாயகனே இவரோட அழகை பார்த்து வாயை பொலந்து நிற்பார்".

"இவரு எதிர்ல நடந்து வந்தா,அரவிந்த் சுவாமி கூட எங்கையாவது போய் மறைஞ்சி நின்னுபார்".


இப்படி இன்னும் நெறைய சொல்லிட்டே போகலாம்,அப்படி ஒரு அழகு நம்ம பாபுக்கு..

பாபுவுடன் இருக்கும் நண்பர்களும், அவனைவிட அறிவில் குறைந்து விளங்குவதால்,அவன் தான் உலக மகா புத்திசாலி என்ற ஒரு எண்ணம் உடல் முழுவதும் பரவி இருந்தது.

மற்றவர்கள் கருத்தை கேட்டு ஏற்பதில் எப்பொழுதும் உடன்பாடு இல்லை அவனுக்கு.

ஆகா மொத்தம் பாபு ஒரு காவிய படைப்பு.

இவ்வாறாக தன்னை தானே எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், அலுவலக வேளை காரணமாக பாபுவை ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்கள், உடன் அவன் நண்பர்களுள் ஒருவனும் சென்றான்.

தெலுங்கான பிரச்சனை தலைவிரித்து ஆடிய நேரமது.

நம்ம ஹீரோ ஹைதராபாத் போய் லேன்ட் ஆனாரு...

ரயில் விட்டு இறங்கியதும், பேருந்து ஒன்றில் ஏறினான்.

அந்த பேருந்தில் நடத்துனராக இருந்த ஒரு பெண்மணி நம்ம ஹீரோவை பார்த்து

"பாபு டிக்கெட் தீசிகுன்னாவா (தம்பி டிக்கெட் வாங்கிட்டியா)" என்று கேட்டார்.

அட என் பேரு பாபுனு உங்களுக்கு எப்படி தெரியும் என்றான் ஆச்சர்யமாக.


பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, உடன் வந்தவன் பாபுவிடம்,

"தெலுங்கான தெலுங்கானானு சொல்றாங்களே அந்த பேரு எப்படி வந்துச்சி ??" என்று கேட்டான் பாபுவிடம்.

நமக்கு பதில் தெரியாட்டியும் தெரியாதுன்னு எப்போ உண்மைய சொல்லி இருக்கோம்??

"தெலுங்கு கானா பாட்டு எல்லாம் இங்க இருந்து தான் பரவ ஆரமிச்சிது அதனால தெலுங்கானானு வச்சிடாங்க" என்றான் பாபு.

அடுத்து பேருந்தை விட்டு இறங்கியவன்,ஹோட்டல் சென்று
அரை ஒன்றை புக் செய்துவிட்டு,உணவு உன்ன சென்றான்.

ஹோட்டலில் ஆர்டர் எடுக்க வந்தவர் இவனை பார்த்து,

"பாபு ஏண்டி தின்டாறு (தம்பி என்ன சாப்பிட வேணும்) " என்றார்.

அட இவருக்கு கூட என் பேரு தெரிஞ்சி இருக்கு பாரேன் என்றான் உடன் வந்தவனை பார்த்து..

உடன் இருந்த எடுபுடி, 

உங்களுக்கு எங்க போனாலும் மரியாதை தான் போங்க, எல்லாருக்குமே உங்கள தெரிஞ்சி இருக்கு என்று சொல்ல பாபு முகத்தை பார்க்கணுமே,அடேங்கப்பா...

பிறகு வந்த வேலைய பார்க்கலாம்ன்னு முடிவு பண்ணி ஒரு டாக்ஸி புடிச்சி போயிட்டு இருந்தபோது, வழியில ஒரே கலவரம்..

கலவர காரன் ஒருத்தேன் பாபு போன கார வழி மறைச்சி..

"எந்த ஊருடா நீ" என்றான் தெலுகில்.

பாபுவுடன் வந்திருந்த நண்பன்,

"நேனு ஹைதராபாத் (நான் ஹைதராபாத்)" என்று கூறிமுடிக்க,

" பாபு நுவ்வு ?? (தம்பி நீ ?? ) " என்றார் பாபுவை பார்த்து..

உடனே நம்ம அறிவாளி பாபு,

"அட என் பேரு தெரிஞ்சி இருக்கு, ஆனா நான் தமிழ்நாடுனு மட்டும் தெரியாதா ?? " என்றான் அவரிடம்..

ஏற்கனவே ஆந்திரா, தெலுங்கானானு கடுப்புல இருந்தவன், தமிழ்நாடு பேர கேட்டதும் வெறுத்துபோக, அப்புறம் என்ன சொல்லவா வேணும்,

"என்ன மரியாதை..என்ன மரியாதை" ...

Tuesday, July 27, 2010

சுயம்வரம் - பகுதி 3

 ராஜேஷ் ஈ மெயில் அனுப்பி இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. அலுவலகத்தில் வேளை பளு அதிகம் இருந்தது அவனுக்கு. 

பணி முடித்து வீடு திரும்பும் முன் அலுவலக நண்பர்களுடன் அருகே இருந்த 'கஃபே டே(cafe day)' போனான் ராஜேஷ். 

அன்றைய வேலை பளுவின் அலுப்பு மிகுதியாக இருந்தது.தேனீர் அருந்திக் கொண்டே  ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். 

அப்பொழுது அவனது நண்பன் அருண், 

"உனக்கு வர போற பொண்ணு, பார்க்க எப்படி இருக்கணும்னு எதிர்பாக்குற?" என்றான் ராஜேஷிடம்.

"ரொம்ப சிம்பிள். பார்த்த உடனே 'ஷீ இஸ் லுக்கிங் ப்யூட்டிஃபுல்' அப்படின்னு சொல்ல தோனனும், 'ஷீ இஸ் சோ ஹாட்' ன்னு சொல்ற மாதிரி இருக்க கூடாது" என்றான் ராஜேஷ்.

"அப்போ என் ஆளு நேஹா பார்க்க எப்படி இருக்கா?" என்று அருண் கேட்க, "வேணாம் டா சொன்னா உனக்கு கஷ்டமா இருக்கும்" என்று சொல்லி வீட்டுக்கு செல்ல தொடங்கினான் ராஜேஷ்.

அன்று வெள்ளிக்கிழமை, அடுத்த நாள் அலுவலகம் விடுமுறை என்பதால் நிம்மதியாக உறங்கினான். 

எழுந்து மின்னஞ்சலை பார்த்தால், ஞாயிறன்று  இரண்டு சுற்றுக்கும் தேர்வு நடக்கவிருப்பதாகவும் அதற்கு வருமாறு வந்திருந்த அழைப்பைப் பார்த்து மலைத்தான். 

ஐந்து நாள் கசங்கி போய் வீட்டில் வந்து சாய்பவர்களின் சுயத்திற்கு தூக்கம் தானே வரம். அந்த பொக்கிஷமான நேரத்தில் போய் தேர்வு அது, இதுவா என யோசிக்க கொட்டாவி தான் வந்தது ராஜேஷுக்கு. 

இருந்தாலும் அந்த பெண்ணை பார்க்கும் ஆவல் ஒருபுறம் சில்லென்று உணர வைத்தது. 

"ஐயோ.. முதல் சுற்று எழுத்து தேர்வாமே!! ச்சே.. பதினெட்டு வருஷமா சுத்தி சுத்தி அடிச்சுது. திரும்பியுமா?" என்று ஏதோ பழைய புத்தகங்களை எல்லாம் தேடத் தொடங்கினான்.

"என்னடா ஆச்சு. தூங்காம ஒட்டடை எல்லாம் அடிக்கிற?" என்று ஆச்சரியத்தில் மூழ்கிய அம்மாவை பார்த்து, 

"நீங்க வேற.. ஞாயித்துக் கிழம அந்த பொண்ணு டெஸ்ட் எழுத வர சொல்லியிருக்கு அம்மா. அதுக்காக தான் புக் எல்லாம் எடுத்துக்கிட்டு இருக்கேன்" என்றான் ராஜேஷ்.

சிறிது நேரத்தில் நண்பரை காண  சென்றிருந்த பத்மநாபன் வீடு திரும்பினார். அவனது அம்மா நடந்ததை அவரிடம் கூற நேராக  அவனை நோக்கி நடந்தார்.

அவனது கையில் இருந்த புத்தகத்தை பார்த்தார்.

அந்த புத்தகத்தின் அட்டையில்  ஏதோ  "ஆர்.எஸ்.அகர்வால்" என்று ஆசிரியரின் பெயர் பதிந்திருந்தது.


சிரித்துகொண்டே, "என்ன புக் டா இது? நீ ஆளு மட்டும் தான் மாடு மாதிரி வளர்ந்திருக்க. அறிவு கொஞ்சம் கூட இல்ல" என்று அவர் கூறியவுடன் முகம் சிவந்தது ராஜேஷிற்கு.

"நாளைக்கு ரிட்டன் டெஸ்ட்க்கு நான் வேற என்ன தான் படிக்க?" என்றான் அவரிடம்.

"நீ இதுக்காக புதுசா எதையும் படிக்க வேணாம். போய் நிம்மதியா தூங்கு" என்றார் அவர். 

ராஜேஷின் இத்தனை வருட அனுபவத்தில் அவர் இப்படி சொன்னதே கிடையாது. 

ஆனால் அதை நினைத்து மகிழ முடியாத நிலையில் இருந்தான். அவனாலும் படிக்க முடியவில்லை. 

புத்தகத்தில் படிந்திருந்த தூசி அவனை பார்த்து சிரித்து வெறுப்பு வேறு ஏற்றியது.

மறுநாள் காலை எத்தனை பேர் வந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டே தேர்வு நடக்கவிருக்கும் ஹோட்டலுக்கு சென்றான். 

வாகனத்தை பார்கிங்கில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். எத்தனை பேர் வந்திருப்பார்கள் என தோராயமாக எண்ணிப் பார்த்த பொழுது சுமார் 100 பேரு வந்திருந்து பயமுறுத்தினார்கள்.

அங்கே ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த நபரை நோக்கி பின்புறத்திலிருந்து சென்ற ராஜேஷ்,  தலையில் ஓங்கி அடித்தான். 

யார் அது தலையில அடிக்கறது என்று கோவத்துடன் அந்த நபர் திரும்ப, 
"டேய் அருண் நாயே, நீ இங்க என்னடா பண்ற?" என்றான் ராஜேஷ்.

"நீயா?? ம்ம்.. நீ எதுக்கு வந்தியோ அதுக்கு தான்" என்று கண் சிமிட்டினான் அருண்.

"டேய் உனக்கு தான் உன் ஆளு நேஹா இருக்காளே? பின்ன ஏன்டா வந்த.. இங்க!!" என்று ராஜேஷ் கேட்க, "அதெல்லாம் நீ கேட்க கூடாது" என்றான் அருண்.

"என்னமோ பண்ணு. எப்படியும் உனக்கு ஊத்திக்க தான் போவுது."

"பொறாமையில் வெம்பாதடா."

இவர்கள் பேசிக்கொண்டே இருக்க, ஒரு குரல் அனைவரையும் அறைக்குள்ளே வருமாறு அழைத்தது. 

இருவரும் அறைக்குள் சென்றனர். அருணும், ராஜேஷும் அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர்.

அருண் ராஜேஷிடம் செய்கையில்,

"எனக்கு கொஞ்சம் அப்போ அப்போ காமி டா" என்று கேட்க, அவனை முறைத்தவாரே அனைத்து விரல்களையும் மடக்கி கொண்டு நடு விரலை மட்டும் உயர்த்தி  காட்டினான் ராஜேஷ்.

பெரியவர் ஒருவர் அறையிலிருந்த மேடையில் நின்றுக் கொண்டு, ஏதோ ஆங்கிலத்தில் ரொம்ப நேரம் ஆற்றிக் கொண்டிருந்தார்.பாவம் யாருமே கவனித்தது போல் தெரியவில்லை. 

அந்த பெண் அங்கே வருவாளா என்ற எண்ணம் அனைவர் இடையேயும் இருந்தது. ஆனால் அவள் வருவது போல் தெரியவில்லை.

தேர்வுக்குரிய  வினாத் தாளும், விடையளிக்க இரண்டு வெள்ளை தாள்களும் கொடுக்கப்பட்டன. 

பரீட்சைக்கு ஒரு மணி நேரம் அளிக்கப்பட்டது. தேர்வு தொடங்கியது என்று அறிவித்ததும், வெள்ளை காகிதங்களில் தங்கள் பெயரை எழுதிக் கொண்டிருந்த அனைவரும் வினாத் தாளை திறந்தனர்.

தொடரும்... 
 

Wednesday, July 21, 2010

காதல் தூதன்


மாலை நேரம்சில்லென்று வீசும்  தென்றலை ரசித்தப்படி பூங்காவினுள்   நுழைந்தேன்வாயிலில் படர்ந்திருந்த கொடிகள் புன்னகைத்தவாறே  வரவேற்றன

மழையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த மயில் அப்பொழுது  தான் தன் மீது விழும் தூறல்களை உணரத் தொடங்கியது போலும்மெல்ல தன் தோகையை விரிக்க ஆரம்பித்தது.

நான் அருகிலிருந்த  புல் தரையில் அமர்ந்துக் கொண்டு ஒரு நொடி கண்களை மூடினேன்.

குழந்தையை  பாசத்துடன்  தனது  மடியில்  தாங்கிக்கொள்ளும் அன்னையை   போல், இயற்கை அன்னை  அவள்  மடியில் என்னை தாங்கிக்  கொண்டிருப்பதை உணர்தேன். சுகமான  நொடிகள் அவை.

கண் திறந்து சுற்றும்  முற்றும்  பார்த்த போது,அருகே  இருந்த  மலர்  கூட்டத்தில்  ஒரு ஆச்சர்யத்தை கண்டேன்.

வீசும்  தென்றலின் திசைக்கேற்ப மெல்ல  தலையசைக்கும்  மலர்களுக்கு நடுவே, ஒரு  மலர்  மட்டும்  அந்த  தென்றலை எதிர்த்து  வேறெங்கோ  பார்த்துக் கொண்டிருந்தது .

அந்த நொடி வரை  மலரின்  நண்பனாக  இருந்த தென்றல், அப்பொழுது  மட்டும் எதிரியானது  வியப்பை  அளித்தது எனக்கு .

எதையோ எண்ணி தவித்துக் கொண்டிருந்த அந்த மலர்,என் பக்கம்   திரும்பி   என்னை அருகே  வருமாறு தலையசைத்தது.

அழைப்பை  ஏற்று  அருகே சென்றேன்.

எனக்கு  உன்  உதவி  வேண்டும் என்றது ஏக்கத்துடன்

என்ன செய்ய என்று நான் கேட்கும் முன்பே என் காதில் மெல்லிய குரலில்,

அங்கே நீல நிற ஆடை அணிந்து செல்லும் தேவதையிடம் தன்னை சேர்க்க வேண்டும் என்றது

அது கோரிய உதவியை மீற முடியாமல், அதனை தாங்கிக் கொண்டிருந்த செடியில் இருந்து பறித்தேன்.

என் கையில் மலரை தாங்கியபடி அந்த தேவதையை நோக்கி நடந்தேன்.

அருகே சென்ற நான், அவள் அழகில் திகைத்துநின்றேன்.

என் கண்களை சிமிட்டாதபடி சில நொடிகள் அவள் கண்களை பார்த்த நான்என் கையில் இருந்த சிவப்பு ரோஜாவை அவள் முன் நீட்டினேன்.

இங்கே அந்த மலருக்கு  நான் தூதுவனா அல்ல அந்த மலர் என் காதலுக்கு தூதா ??  

 வீசும் தென்றலின் திசைக்கேற்ப
மெல்ல தலையசைக்கும் மலர்களுக்கு நடுவே
ஒரு மலர்  மட்டும்  அந்த தென்றலை எதிர்த்து  
நீ செல்லும் திசை நோக்கி தலையசைத்தது ..
 ஏனோ !?!

Monday, July 19, 2010

சுயம்வரம் - பகுதி 2

 

( இப்பதிவின் முதல் பகுதியை காண )

"அவன் எங்க சாப்பிட்டானா??" என்று தன் மனைவியிடம் கேட்டார் பத்மநாபன்.

"வீட்டுக்கு வந்ததுல இருந்து அந்த பொட்டிய வச்சிக்கிட்டு என்னமோ பண்ணிட்டு இருக்கான்" என்றார் அவன் தாய்.

மடி கணினிக்கு ராஜேஷின் தாய் வைத்த பெயர் "பொட்டி".

ராஜேஷின் அறைக்கு சென்றவர், "என்ன ஆபீஸ் வேலையா??"  என்று கேட்டார்.

அசடு வழிந்துகொண்டே,

"அந்த பொண்ணுக்கு அனுப்ப என்னுடைய தகவல்கள் அனைத்தையும் தயார் படுத்திகிட்டு இருக்கேன்" என்றான்.

"அட.. உனக்கு கூட பொறுப்பு வந்துடுச்சு போல!! சரி.. சரி.. காட்டு பார்ப்போம்" என்று அதனை பார்க்க தொடங்கியவர்,

"டேய்.. ராஜேஷ்  என்னடா இதெல்லாம். நீ எந்தெந்த கம்பெனில எத்தன வருஷம் வேலை பார்த்த என்ன கிழிச்சன்னு யாரு கேட்டா ??" என்றார் கடுப்பாக.


"அவ தான் ஈ மெயில் அனுப்ப சொல்லி இருக்காளே!!" என்றான் ராஜேஷ்...

"அதுக்காக ஏதோ வேலைக்கு அப்ளை பண்ற மாதிரி ப்ராஜெக்ட் தகவல் எல்லாம்  ஏன்டா அனுப்புற?"

"நீ இதுக்கு சரிப்பட்டு வர மாட்ட போல!! லக்ஷ்மி இவனோட ஜாதகத்த கொஞ்சம் கொண்டு வா" என்றார்.

"ஐயோ.. அப்பா ஜாதகமா?? இவ்ளோ மாடர்னா விளம்பரம் கொடுத்தவங்க ஜாதகமா பார்க்க போறாங்க??" 

"ஆமா இதெல்லாம் தெளிவா பேசு. வேலைக்கு போறவங்க தான் வேணும்னா மேட்ரிமோனியல் சைட்ல தான் போட்டோவோடு போட்டிருக்க போறாங்க."

"அப்புறம் என்ன அனுப்புறது?"

"ம்ம்.. "

"ம் னா?"

"உனக்கு ஒன்னும் இல்லன்னு.. மெடிக்கல் செர்ட்டிஃபிக்கேட் அனுப்பி வையேன்."

"அப்பா. மூளைப்பா உங்களுக்கு" என்று ராஜேஷ் கட்டி பிடித்துக் கொண்டான் அப்பாவை.

ஒரு வழியாக அவனுடைய பொது விவரங்களையும் உடன் அவனது மெடிக்கல் செர்ட்டிஃபிக்கேட்டையும் அவளுக்கு ஈமெயில் மூலம் அனுப்பி வைத்தான்.

எழுத்து தேர்வுக்கு எப்படியும் அழைப்பு வரும் என்ற நம்பிக்கை
ஒரு புறம்  இருந்தாலும், மற்றொரு புறம் ஒரு வித பதட்டத்துடனேயே காணப்பட்டான் ராஜேஷ்.


தொடரும் .....  

Tuesday, July 13, 2010

சுயம்வரம் - பகுதி 1

வழக்கம் போல் அன்று காலை "The Hindu" நியூஸ் பேப்பர் படித்துகொண்டிருந்தார் பத்மநாபன்.

திடிரென்று பலமாக சிரிக்க தொடங்கியவர், தன் மகனிடம்,

"டேய் ராஜேஷ் நீ இன்டெர்வியுக்கு ரெடியாக வேண்டிய நேரம் வந்துடுச்சி  டா " என்றார்.

"இன்டெர்வியூவா?? என்னப்பா சொல்லுறீங்க??  இப்போ நான் இருக்கும் கம்பெனி நல்லா தானே இருக்கு, நான் ஏன் வேற கம்பெனி மாறனும்" என்றான் குழப்பத்துடன்.

ஹா ஹா சரி இதை பாரு என்று செய்தித்தாளை அவனிடம் நீட்டினார்.

அதில் கீழ்கண்டவாறு ஒரு விளம்பரம் கொடுக்கபட்டிருந்தது.

26 yrs old gal working as a HR in a MNC looking for a bridegroom

Interested candidates can forward their details to crazy....gal@gmail.com
 
Shortlisted profiles will be called up for selection procedure which comprises of following rounds
1. Written test
2. Group Discussion
 
Candidates clearing both the rounds would have a telephonic interview from the bride..
 
No of Vacancy : 1
*only for freshers


இப்படியும்  ஒரு  விளம்பரமா என்று ஆச்சர்யமாக பார்த்தான் ராஜேஷ்.

முழுமையாக படித்தவன் இறுதியில் அது என்ன "only for freshers" என்றான்  தன் தந்தையிடம்.

மணமாகாத பையனா இருக்க வேண்டும் என்பது தான் அது என்றார் அவர்.

அப்பா நான் செலக்ட் ஆகுறேனோ இல்லையோ, ஆனா  இந்த பொண்ண ஒரு தடவையாவது பார்த்தே ஆகணும் என்று கூறி முதல் சுற்றுக்கு தயாரானான் ராஜேஷ்.

தொடரும் ....

Tuesday, May 4, 2010

தாயின் அரவணைபிற்கு ஏங்கி....

நூறு குடும்பங்கள் வாழும் அந்த முகாமில் முக்கியமானவர் அந்தோணி தான்.
நன்கு படித்தவர்,செல்வசெழிப்புடன் வாழ்ந்தவர், ஒரு வருடத்திற்கு முன்பு மனைவியை உள்நாட்டு போரில் இழந்தவர். இப்பொழுது மகள் வடிவுடன் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளார்.
தாய்நாடு என்று எண்ணி வந்தோமே, ஆனால் இங்கேயும் அடிமைபோல் வாழ வேண்டியதா இருக்கே என்று எண்ணி அவர்கள் நொந்து போகாத நாள் இல்லை..  


அன்று காலை தூங்கி எழுந்ததும் ஆறு வயதான வேலு அந்தோணியை தேடி ஓடி வந்தான் ... 

டேய் டேய் !! ஏண்டா தம்பி இப்படி ஓடி வர,எங்கையாவது கீழ விழுந்துடபோர என்றார் அந்தோணி.
தான் மலம் கழிக்க வேண்டும் என்றான் அந்த பெரியவரிடம்.
ஹா ஹா.. இதுக்கு தான் நீ அவ்ளோ வேகமா ஓடி வந்தியா !! சரி வா என்று அவனை அழைத்து சென்றார்.
மலம் கழித்த சிறுவனை சுத்தப்படுத்த நீர் இல்லை.அவரும் ஒரு சில இடத்திருக்கு சென்று நீர் தேடினார் கிடைக்கவில்லை.
வேறு வழியின்றி அங்கே லட்டியுடன் அமர்ந்திருந்த அந்த காவல் துறை அதிகாரியிடம் சென்றார்..
ஐயா,குழந்தை மலம் கழிச்சான். இப்போ தண்ணீர் இல்லாததால சுத்தம் செய்ய முடியாம தவிக்கிறேன் என்றார்..
அதுக்காக,அவன கழுவ என்னை போய் தண்ணி கொண்டு வர சொல்றியா என்றார் அந்த காவலாளி கோவமாக.
ஐயா நான் அப்படி சொல்ல வரல, இரண்டு நாளா தண்ணியே சுத்தமா இல்ல, சமைக்க கூட தண்ணி இல்லை. நீங்க இத மேல் அதிகாரிங்க கிட்ட சொன்னீங்கனா எங்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும் என்றார் பெரியவர்.
உங்களுக்கு எல்லாம் போனா போகுதுன்னு தங்கறதுக்கு எடம் கொடுத்தா,இது வேணும் அது வேணும்னு சட்டம் பேசுரீகளோ அகதி நாயுங்களா என்று ஆவேசப்பட்டார் அந்த காவலாளி.
பதில் பேசாமல்,வேறு வழியின்றி அமைதியாக குடிசையை நோக்கி திரும்பி சென்றவர்,சிறு சிறு கந்தல் துணியை கொண்டு வேலுவை சுத்தம் செய்தார்.
 

அப்பொழுது வேலுவின் 2 வயது தம்பி குமார் அழுவும் சப்தம் அந்தோணியின் காதில் விழ,ஏய் வடிவு கொழந்த பசியில அழுவுது பாரு. யாருக்கு பால் சொரக்குதோ அவங்கள சீக்கிரம் கொடுக்க சொல்லு என்றார்.
முகாமைவிட்டு வெளியே சென்று கூலி வேலை செய்ய முப்பது நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. 

அவர்கள் வேளைக்கு சென்று கொண்டு வரும் தொகையின் ஒரு பகுதியை அரசு அதிகாரிகளுக்கு தரபடும்,மீதமுள்ள பகுதியில் முகாமில் இருக்கும் அனைவர்க்கும் உண்பதற்காக பன் மற்றும் பிஸ்கேட் என்று எதாவது வாங்கி வருவார்கள்.
இந்த பொருட்களே இவர்களின் வாழ்கையை ஓட்ட உதவுகின்றன. இவையின்றி எப்பொழுதாவது அரசியல்வாதிகள் தங்களின் விளம்பரத்திற்காக 5 கிலோ அரிசி அது இது என்று எதாவது தருவது உண்டு, ஆனால் அதையும் பிடிங்கி தின்னும் கூட்டம் இருப்பது தான் கொடுமை..
அன்றைய தினம் அந்தோணியிடம் அதிகாரிகள் ...  

நாளை உங்களை காண அமைச்சர் திரு. ஜெயகாந்தன் காலை 10 மணிக்கு வருகிறார், உங்கள் மக்கள் அனைவரையும் எங்கும் செல்லாமல் இங்கேயே இருக்குமாறு சொல்லிவிடு என்றார்.

அப்படியே நாளை அவரது வரவை எண்ணி அன்றைய பொழுதை கழித்தார்கள்.
அடுத்த நாள் சரியாக சொன்னதுபோல் 10 மணிக்கு நேரம் தவறாமல் வந்தார் ஜெயகாந்தன். மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் அவரை காண, அவர் எதோ அதிகாரிகளுடன் பேசி கொண்டிருந்தார்..


வேலு அந்த கூட்டத்தில் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தான்,அதிகாரிகளுடன் பேச்சை முடித்துக்கொண்டு அவர் அருகில் நின்ற வேலுவை அவரது கைகளால் தூக்கினார்.

உன் பேரு என்ன என்றார் ஆசையாக.. வேலு என்றான் அவன் .
உனக்கு இங்கே இருக்க பிடிச்சி இருக்கா என்றார். சற்றும் யோசிக்காமல் பிடிக்கலை என்றான்.
ஏன் என்று அவர் கேட்கும் முண்பதே காரணத்தை சொல்ல தொடங்கினான் வேலு.
"என் அம்மா, என்னை தனியாக தவிக்கவிட்டு எங்கோ சென்றுவிட்டால்.அப்படி அவள் சென்றது தவறு தானே ?? " என்றான் ஜெயகாந்தனிடம்..
சற்று மௌனம்காத்த ஜெயகாந்தன்,
"தவறு தான், உங்களது அல்லல்களையும், இன்னல்களையும் பார்த்துக்கொண்டு தாய்நாடு அமைதிகாத்தது மிக பெரிய தவறு தான். தவிக்கும் குழந்தையான உங்கள்
அனைவருக்கும் கைகொடுக்காத இந்த தாய் நாட்டிற்கு பாவ மன்னிப்பே கிடையாது" என்றார்
கூட்டத்தில் இருந்து ஒருவன் நீங்க நல்ல நடிகர்னு சொன்னாங்க இப்போ தான் நேருல பாக்குறோம் என்று சொன்னான்......

Friday, April 30, 2010

வெள்ளை மனசு

 மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த விக்னேஷ், தான் கொண்டுவந்த  இரு சக்கர வாகனத்தை கூட மறந்து, நடந்தே வீட்டை சென்றடைந்தான் ..

வழியில் யாரையும் நிமிர்ந்து பார்க்கவுமில்லை,பேசவுமில்லை..
வீட்டினுள் நுழைந்தவன் நேராக சென்று ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.. ஏதோ யோசித்துக்கொண்டிருந்தவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

அம்மாவின் அருகில் சென்றான்,
"
எனக்கு கேன்சர் இருக்குன்னு டாக்டர் மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்து சொன்னாரு. அதுவும் இப்போ குணப்படுதுற நிலையில இல்லை. முத்திபோயிடுசாம்.. இன்னும் அதிகபட்சம் 3
மாசம் "
 என்றான்...

இதை கேட்டதுதான், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார் அவன் தாய் ..
உடனே பதறிபோனவன், தண்ணீர் தெளித்து தாயை தெளிய வைத்தான்..
எழுந்தவர் அழ தொடங்கிவிட்டார்,

"உன்ன நல்லா தான டா வளத்தேன். ஏன் டா ஆண்டவன் இப்படி சோதிக்குறான்"..
 

அலுவலுகத்தில் இருந்த தந்தையை அழைத்து, அவருக்கும் தகவல் அளித்தான் விக்னேஷ் ...

அவருக்கோ இதை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் இப்படி வளர விட்டோமே என்று வருத்தம்..
 

ஆனால் இப்பொழுது எதுவும் அவர்கள் கையில் இல்லை என்பதை புரிந்து கொண்டார்...

இருந்தாலும் ஏன் இன்னொரு நல்ல மருத்துவமனையில் காட்ட கூடாது என்று எண்ணினார்.. அழைத்தும் சென்றார் விக்னேஷை,ஆனால் பலனில்லை...

வீட்டில் அமைதியே நிலவியது... நண்பர்களிடமும் பேச விருப்பமில்லாமல் வீட்டினுள்ளேயே அடைந்து கிடந்தான் விக்னேஷ்..

இப்படியே இரண்டு வாரங்கள் அமைதியும் அழுகையுமாக கழிந்தது..

ஒருநாள்  விக்னேஷை அழைத்தார் அவன் தாய்..

"இந்த வயசுல இப்படி நீ எந்த சுகத்தையும் அனுபவிக்காம போறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா, அதனால நான்  ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்" என்றார் அவர்.

என்ன அது என்று புரியாமல் விக்னேஷ் மட்டுமல்ல அவன் தந்தையும் குழம்பிபோய் இருந்தார்..

அப்பொழுது அவன் தாய்,
" உனக்கு வேண்டிய துணி எல்லாம் எடுத்து வைக்குறேன், நீ மும்பைக்கு போய்  கொஞ்ச நாள் இருந்துட்டு வா" என்றார்.

அதை கேட்டதும் கொஞ்சம் அதிர்ச்சியில் மூழ்கி போன விக்னேஷின் தந்தை தன் மனைவியின் என்னத்தை புரிந்து கொண்டு  தன்னை சமாதான படுத்திக்கொண்டார்....


விக்னேஷிற்குஎன்ன சொல்வதென்று  புரியவில்லை.. அமைதியாகவே நின்றுகொண்டிருந்தான்...

நான் போய்  நாளைக்கு நீ மும்பை போறதுக்கு டிக்கெட் புக் பண்றேன் என்று கூறி விட்டு சென்றார் விக்னேஷின் தந்தை ..

விக்னேஷின் அருகில் சென்ற அவன் தாய்,
 இது எனக்கு தப்புன்னு தோனல டா. யோசிக்காத போய் கொஞ்ச நாள் எல்லாத்தையும் மறந்துட்டு சந்தோஷமா இருந்துட்டு வா என்றார்.

மறுநாள் மும்பை செல்ல ரயில் நிலையத்தில் விக்னேஷ் காத்துக்கொண்டிருக்க, அவன் தந்தை அவன் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து,
"எது எப்படியானாலும் சேப்டி (safety)  முக்கியம் மறந்துடாத"  என்று கூறி வழி அனுப்பிவைத்தார்...

மறுபடியும் வருவானா என்று கூட முழுமையாக தெரியாது,ஆனால் அவன் சந்தோஷத்திற்குகாக அனுப்பி வைத்தார்கள் ...