'பிரபலம் ஆன முன்? பிரபலம் ஆன பின்?'
"பிரபலாகும் முன் நிறைய நண்பர்களுடன் கும்மி. பிரபலமான பின் சில தோழர்களுடன் மட்டும் கும்மி."
'எப்படி பிரபலம் ஆகனும் என்ற எண்ணம் வந்தது?'
"அது காலத்தின் கட்டாயம். நான் என் வாதத்திற்கு எதிர் வாதம் செய்பவர்களை காயப்படுத்தனும் என்று தான் முதலில் நினைத்தேன்."
'ஓ! அப்புறம் என்ன ஆச்சு?'
"நான் என்ன கதையா சொல்றேன். அப்புறம் விழுப்புரம்".
'உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் போல!!'
"ஆமாம். சின்ன வயதில் இருந்தே அப்படி தான். இப்படி தான், ஒரு தடவ..... "
'சரி சரி. உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் தான். ஏற்றுக் கொள்கிறோம். காலத்தின் கட்டாயம் என்று சொன்னீர்களே!! அது என்ன?'
"நான் அன்பால் அனைவரையும் என் வழிக்கு கொண்டு வந்து விடுவேன். தவறு செய்தவர்கள், செய்யாதவர்கள் என்று பாரபட்சமின்றி அனைவரையும் மன்னித்து விடுவேன். அது என் நண்பர்களுக்கு தெரியும்."
'ஓ!! நீங்க ரொம்ப நல்லவங்க போல?'
"ஆமாம். எப்பவுமே அப்படி தான்."
'ஆனால் நீங்க ஒரு தடவை பொங்கியதாக செய்தி தாளில் பரபரப்பாக வந்ததே!'
"ஆமாமாம். நீங்க அதை படிச்சீங்களா?"
'உலகமே படிச்சுதாக அறிக்கை ஒன்று சொல்கிறதே!'
"படிச்சாங்களா.. படிச்சாங்களா? அதுக்கு தான் சப்ப மூலப் பிரச்சனையோடு.. சம்பந்தமே இல்லாத பூதகரமான பிரச்சனை சும்மா நுழைத்து வைத்தேன்."
'கேட்கவே சுவாரஸ்யமாக இருக்கே!! அப்புறம்?'
"சும்மா பத்திக்கிச்சு இல்ல. பூதகர பிரச்சனையில் எதிர்வாதம் புரிந்தவர்களை சிக்க வைத்ததால், படிப்பவர்களும் ஒன்றும் புரியாமல் குழம்பி போய் எனக்கு ஒரே ஆதரவு தான் போங்க!!"
'பரவாயில்லை. சுலபமாக பிரபலம் அடைந்து விட்டீர்கள் போல!!'
"அட நீங்க வேற. எனது பொங்கல் இரண்டாம் நாளே பிசுபிசுத்து விட்டது."
'நிஜமாவா? ஐயோ பாவம்.'
"ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஓடினேன் ஓடினேன்."
'ஐய்யோ.. வாழ்க்கையின் எல்லைக்கா?'
"இல்லைங்க சிந்தனையின் எல்லைக்கு."
'ஓ!'
"நியாயம் கேட்டு பலரை அணுகினேன். உதவ யாருமே முன் வரல. தட்டினேன் புத்திய. தீட்டினேன் திட்டத்த."
'என்ன திட்டங்க இது?'
"சத்தம் போடாதே என்பதையே சத்தம் போட்டு தான் இங்க சொல்ல வேண்டியிருக்கு. அதனால ஊர்லயே பெரிய சவுன்ட் சர்வீஸ்காரங்க கிட்ட போனேன்."
'அற்புதமுங்க.'
"அங்க போன சவுன்ட் சர்வீஸ்காரங்க ப்ரெண்ட்சும் இலவசமா வந்து சத்தம் போடுவாங்க."
'பிரபலம் ஆக பிறர் பலமும் தேவைப்படுதுன்னு சொல்லுங்க!!'
"அது மட்டும் போதாதுங்க. நாம முன் வைக்கிற உப்பு சப்பில்லாத விஷயத்த வைத்து எவ்வளவு நேரம் தான் போராட முடியும். முதல் முயற்சியே தோல்வி தானே!!"
'ஆமாமாம். என்ன பண்ணீங்க?'
"என்ன தற்காத்துக் கொள்ள ஒரு கவசம்."
'என்ன கவசமுங்க அது!!'
"சொன்னா புரியாது. உங்களுக்கு புகைப்படமா காண்பிக்கட்டுமா?"
'பரவாயில்ல் இருக்கட்டும். நீங்க விஷயத்த மட்டும் சொல்லுங்க. யாரும் உங்கள கேள்வி எல்லாம் கேட்க மாட்டாங்களா?'
"இங்க தான் நீங்க சவுன்ட் சர்வீஸ்காரங்களோட இராஜ தந்திரத்த பார்க்கனும். ஆளுக்கு ஒரு மூளையில் போய் நின்னுக்கிட்டு, தேய்ந்த ரெக்கார்டை காது கிழியுற அளவுக்கு போட்டுடுவாங்க. அதனால் எதிராளி.. எப்படி கேள்விக் கேட்டாலும் வெளில கேட்காது. அவங்க சோர்வடையும் பொழுது, நாங்க ஒரு கேள்வி கேட்போம். எதிராளிங்க பதிலே சொல்லல என்று கும்பலா எங்களுக்குள்ள சிரிச்சுக்குவோம்."
'யப்பா.. சாணக்யர் கெட்டாரு போங்க. நிறைய கத்துக்கனும் உங்ககிட்ட இருந்து.'
"நல்ல சமயத்துல உதவின சவுன்ட் சர்வீஸ்காரங்க.. எனக்கு ஆத்திகவாதிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் போல!! அவங்க கிட்ட போனவுடன் எல்லாரும் அலற ஆரம்பிச்சிட்டாங்க."
'ஓ!!'
"அவங்களுக்கு தான் எல்லாம் புகழும் சேரும்."
'இதை எல்லாம் மீறி யாருமே உங்கள கேள்வி கேட்கலியா?'
"அதெப்படி விடுவாங்க. அங்க இங்கன்னு வந்து ஏதாவது சொல்லிக்கிட்டு தான் திரியுமுங்க."
'எப்படி சமாளிச்சீங்க?'
"ஹிஹி.. இதென்ன பெரிய விஷயம். ஆதாரம் கேட்போம்."
'ஆதாரம் கொடுத்துட்டா?'
"சின்னக் கொழந்த மாதிரி கேள்விக் கேட்டுக்கிட்டு... எவ்ளோவோ சமாளிக்கிறோம். இதென்ன பெரிய விஷயமா? ஆதாரத்தில் பெரிய ஓட்டை என்று நொட்டை சொல்லுவோம்."
'இது போதுமா?'
"போதாது தான்."
'ஐய்யோ.. சஸ்பென்ஸ் தாங்களா!! சீக்கிரம் சொல்லுங்களேன்.'
"கே. பாலசந்தரின் 'இரு கோடுகள்' பாணியை.. கோயபெல்ஸ் எப்படி உபயோகம் பண்ணியிருப்பார்?"
'புரியலியே!!'
"அவங்க ஆதாரத்த பற்றி சுலபமா மறந்துட்டு.. அதை விட பெருசா ஏதாவது திரிய கொளுத்தி போட்டுட்டு, திரும்ப திரும்ப.. திரும்ப திரும்ப அதை பத்தியே பேசுவோம்."
'அவங்க எதுவும் பேச மாட்டாங்களா?'
"எப்படி பேசுவாங்க? கேள்வி மட்டும் தான் கேட்போம். அப்புறம் எல்லாத்தையும் இழுத்து பூட்டிட்டு வேலைக்கு பார்க்க போயிடுவோம்."
'ஓ!!'
"பாவம். அவங்களும் மனுஷங்க தானே!! பூட்டின வீட்டு முன் கத்திட்டு ஓஞ்சி போயிடுவாங்க. நாங்க மீண்டும் கூடி.. சொம்புக்களை காணோம் என்று சிரிச்சுப்போம். இத சொல்றப்பவே எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது."
'நல்ல பொருத்தமான பெயரு தான் உங்களுக்கு.'
"நான் இந்த பேட்டியை சிலருக்கு டெடிகேட் பண்ண விரும்புறேன்."
'கண்டிப்பா பண்ணலாம். யார் யாருக்கெல்லாம்?'
"ஏழர மணிக்கு அவசரமா ஆஃபீசுக்கு போகனும் என்று பஸ்ல போகும் பொழுது, எனக்கு அர டிக்கெட் கிழித்துக் கொடுத்த கன்டக்டருக்கு, பல கேள்விக்குறிகளாக சில கெட்டவன்கள் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது.. நான் இறங்க வேண்டிய ராஜா தியேட்டர் ஸ்டாப்பிங்கில் எழுப்பி விட்ட அட்டையம்பட்டிக்காரருக்கு.. எனக்கு இனாமா சவுன்ட் சர்வீஸ் உபயோகிக்க தந்தவங்களுக்கு. இப்போதைக்கு இவ்வளவு தான்."
'அவ்ளோ தானா.. வேற யாராச்சும் இருக்காங்களா?'
"அப்புறம் எனக்கு ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும்."
'வேற ஏதாவது உலகத்திற்கு சொல்ல விரும்புறீங்களா?'
"ஆமாம். நான் ஆயிரம் தடைகள் கடந்து வந்த முள் பாதைகளை நினைத்து பார்க்கிறேன்."
'ஐய்யோ.. முள் மேலயா நடந்து வந்தீங்க?'
"நான் நடந்து வந்த பாதையில ஓரமா முள் இருந்துச்சு. சும்மா கேள்விக் கேட்காதீங்க!! அப்புறம் சவுன்ட் சர்வீஸை உங்க வீட்டுக்கு முன்னாடி ஒலிக்கும்."
'அவ்வ்.. வேணாமுங்க. நீங்க சொல்லுங்க கேட்டுக்கிறேன்.'
"இனி இந்த சமூகத்தில் எந்தவொரு அப்பாவிக்கும் எதுவும் நடக்க விட மாட்டேன். போராடுவேன். நான் அடுத்த தலைமுறையினருக்கு பாடமாக இருக்கேன். நமது மன அமைதிக்காக, நாம் ஒரு மாதம் முன்பு மன்னித்தவர்கள் மேலே போர் எடுக்கலாம். மன அமைதி வேண்டுமெனில், என்னை எப்ப வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். நமக்கு பின்னாடி சவுன்ட் சர்வீஸ் எப்பவும் இருப்பாங்க."
'உங்க அமைதிப்படையின் செயல்பாடுகள் மெய் சிலிர்க்க வைக்கிறது.'
டிஸ்கி - நண்பன் சாம்ராஜ்யப்ரியனின் (Mr.RDIN) "பூக்காரி" சிறுகதை போல.. உரையாடல்களாலேயெ ஒரு சிறு முயற்சி.
No comments:
Post a Comment