இருண்ட மேகமும் அதனை தொடர்ந்த இடியுடன் கூடிய மழையும் அவனை மிரட்டியது.
அவனால் சரியாக நடக்க கூட முடியவில்லை. தள்ளாடிக்கொண்டே நடந்து வந்தவன் அந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்தான்.
எங்கும் ஒரே இருட்டு,மழையினால் மின்சார வசதி துண்டிக்கபட்டிருந்தது. குளிரி ல் மிகவும் நடுங்கி கொண்டிருந்தான்.பசி வேறு வயிற்றை கிள்ளியது.
அவன் அணிந்திருத்த சட்டை கிழிந்து இருந்தது. தாடையில் இருந்த அடர்த்தியான மயிர் அவன் முகத்தை மறைத்துக்கொண்டிருந்தது.உணவை உண் டு பல நாட்கள் ஆகும் உடல்,முற்றிலும் பரிதாபமான தோற்றம் அது.
திண்ணையின் மறுமுனையில் இருந்த அந்த நாய் அவனை பார்த்து குறைக்க தொடங்கியது. அதனை எதிர்த்து போராடும் தெம்பும் இல்லை அவனுக்கு. நாய் தொடர்ந்து குறைத்துக்கொண்டே இருக்க, அவன் எந்த ஒரு அசைவுமின்றி அங்கேயே அமர்ந்திருந்தான்.
சப்தம் கேட்டு,வீட்டினுள் இருந்த அந்த பெரியவர் மெழுகு வெளிச்சத்துடன் வெளியே எட்டி பார்த்தார்.
"ஐயா,இன்று இரவு மட்டும் இங்கே இருந்துவிட்டு காலை சென்றுவிடுகிறேன்" என்றான் அவன்.
அவனை பார்த்தால் ஏதோ பிச்சைகாரனை போல தெரியவில்லை அந்த பெரியவருக்கு.
அவன் நிலைமையை பார்த்தவர்,சாப்பிடுகிறாயா ?? எ ன்றார்.
அவன் எதுவும் பதில் பேசவில்லை.கைகளை தூக்கி கும்பிட்டான்.
உள்ளே சென்றவர், ஒரு தட்டில் ஆறு இட்லி மற்றும் ஒரு சொம்பினில் தண்ணீரும் இவன் அருகே வைத்தார்.
இரண்டு நிமிடங்களுக்குள் அதனை விழுங்கியவன், அரை சொம்பு தண்ணீரை பருகினான்.
அதுவரை அமைதியாக இருந்த பெரியவர்,
உன் பெயர் என்ன ? எந்த ஊரு ? என்றார் அவனிடம்.
இளவரசன், அரசானந்துர் என்றான்.
இங்க சென்னையில என்ன பண்ற ?
வீட்டுல அப்பாவோட சண்டை, நாலு காசு பணம் சம்பாதிக்க வீட்டுல இருந்து இங்க வந்துட்டேன்.
எதாவது படிச்சி இருக்கியா ??
படிப்புல ஆர்வம் இல்லை.
என்ன வேலை செய்யலாம்ன்னு இந்த ஊருக்கு வந்த ?
என்னால செய்ய முடிஞ்ச வேலைய கொடுத்தா செய்வேன்.
பெரியவர் சிரித்துகொண்டே,
சரி காலையில் என் மவன் கிட்ட சொல்லி, அவனோட கடையில உனக்கு ஒரு வேலை போட்டு தர சொல்லுறேன்.
"ரொம்ப நன்றி அய்யா" என்றான்.
மின்சாரம் மீண்டும் உயிர்பெற்றது, திண்ணையில் அணைக்கபடாமல் இருந்த அந்த பல்ப் தானாக எரிந்தது.
அப்பொழுதான் அந்த பெரியவர் அவனை சரியாக பார்த்தார்.அவனது சட்டை கிழிந்திருந்த இடத்தில ரத்த காயங்கள் இருப்பதை கண்டார்.
"என்னபா இது, உடம்பெல்லாம் ரத்த காயமா இருக்கு ??"
சற்று சிரித்துக்கொண்டவன்,என் பழைய முதலாளி கொடுத்த ஊதியம் இது என்றான்.
இப்படியா ?? காரணமில்லாமலா ??
காரணம் தான, உண்மைய சொன்னேன் அதான் இப்புடி.
கேள்விக்கு நேராக பதிலை சொல்லாமல் குழப்பிக்கொண்டிருந்தது பெரியவருக்கு எரிச்சல் தந்தது.
அப்படி என்ன உண்மை அது ?? (சீக்கிரம் சொல்லி தொல என்பது போல் இருந்தது அவரது கேள்வி)
என்னோட ஆபீஸ்ல வேல பாக்குற பொண்ணுகூட எப்பவும் பேசிக்கிட்டே இருப்பான். எனக்கு அது பிடிக்கல. அந்த பொன்னும் அவன்கிட்ட போய் போய் பேசிட்டு இருந்தா. எனக்கு இது சரியா படல.
என் முதலாளியோட பிரெண்ட பார்த்தபோது , அந்த பொண்ணோட நடத்தை சரியில்ல,முதலாளியோட போக்கும் தப்புன்னு சொன்னேன். இந்த விஷயம் தெரிஞ்சி என் முதலாளி,என்ன அவன் நண்பனோட சேர்ந்து அடிச்சி தொரத்திட்டான்.
பொறுமையாக இவன் சொன்ன அனைத்தையும் கேட்டுகொண்
அவர் அந்த பொண்ணோட பேசினா உனக்கென்ன ?? என்றார்.
மெளனமாக இருந்தான் இளவரசன்.
அவங்க ரெண்டுபேரும் தினமும் என்ன பேசிப்பாங்கன்னு உனக்கு தெரியுமா?
இல்லை அவங்க பேசுறது என் காதுல விழாது.
நீ அந்த பொண்ண காதலிச்சியா??
இதற்கும் மௌனம் தான் பதிலாக வந்தது.
அந்த பொண்ணுகிட்ட உன் காதலை சொன்னியா??
இல்லை என்றது அவன் குரல்.
கோபம் அடைந்த பெரியவர்,
நீயும் உன் காதல சொல்ல மாட்ட, நீ காதலிக்கும் பொண்ணோட யாரும் பேச கூடாது, அவளும் யார் கூடவும் பேச கூடாது, மீறி பேசினா அவளோட நடத்தை சரி இல்லைன்னு ஊருக்குள்ள போய் சொல்லுவ, சம்பளம் தர முதலாளிய பத்தியும் தப்பு தப்பா பேசுவ,அப்படி தானே?? என்ன ஜென்மம் டா நீ ??
நீ பெரிய சைக்கோவா இருப்ப போல.உனக்கு சோறு போட்டதே தப்பு, இதுல வேலை வேற ஒரு கேடா ?
பின்னாடி என் புள்ளைய பத்தி என்கிட்டையே வந்து தப்பா சொன்னாலும் சொல்லுவ . இப்போவே எழுந்து ஓடிடு.
அட போயா நீ என்னவோ யோகியன் மாதிரி பேசுற. ஆறு இட்லி கொண்டு வந்தியே கொஞ்சமாவது சட்னி கொண்டு வரணும்ன்னு தோணுச்சா ??என் யோகியதை பத்தி நீ பேச வந்துட்ட.
போயா பெருசு உன் மவனும் அவன (பழைய முதலாளி) மாதிரி தான் இருப்பான்னு உன் மூஞ்ச பார்த்தாலே தெரியுது.எனக்கு வேலையும் வேணாம் ஒன்னும் வேணாம். நீ இல்லைனா இன்னொருத்தன் என்று பொலம்பியபடியே அடுத்த வீட்டை கடந்து சென்றான்.
No comments:
Post a Comment