Wednesday, October 13, 2010

நடுநிசி மர்மம் (சவால் சிறுகதை)

"இப்போ நாம தயார் செய்துள்ள இந்த PX+ மருந்தை குரங்கு மேல செலுத்தி பரிசோதனை செய்து வெற்றியும் அடைஞ்சாச்சி, அடுத்து மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கனும்."

"ஆனா தன் உடம்புல செலுத்தி பரிசோதிக்க யார் முன்வருவாங்க ஆல்பர்ட்??" என்று கேட்டார் மருத்துவர் கிருஷ்ணன்.

அப்பொழுது மருத்துவர் ஆல்பர்டின் அறைக்குள் இரண்டு உயரமான ஆசாமிகள் நுழைந்தனர்.

"வாங்க.. உங்களுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். இரவு நேரத்துல, ரோடுல இருக்குற பிச்சைகாரங்க,  வயசானவங்க இப்படி உங்க கண்ணுல படுற  யாராவது 2 பேர தூக்கிட்டு வாங்க. பத்தாயிரம் தரேன். ஆனால் எனக்கு எந்த பிரச்னையும் வராம பார்த்துக்கனும் புரியுதா??"  என்று புருவங்களை உயர்த்தியபடி இருவரையும் கண்களால் ஆராய்ந்தார் மருத்துவர் ஆல்பர்ட்.

சரி என தலையை ஆடிவிட்டு அந்த இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

"நடக்க கூட உடம்புல தெம்பில்லாம இருக்குற பிச்சைக்கார பசங்கள தூக்கிட்டு வரதுக்கு பத்தாயிரமா? கொஞ்சம் அதிகமா தெரியுதே ஆல்பர்ட்!!" என்றார் மருத்துவர் கிருஷ்ணன்.

"இதுக்கு கம்மியா கொடுக்கனும்னா நாம ரெண்டு பேரும் போய் தூக்கிட்டு வந்தா தான் உண்டு" என்று எரிச்சலுடன் ஆல்பர்ட் கூற, கிருஷ்ணன் எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து சென்றார்.

இரவு மணி – 11

"டேய் சிவா.. வண்டிய கொஞ்சம் வேகமா தான் ஓட்டி தொலையேன். அம்மா வேற சாப்பிடாம எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க."

"காமினி நீ மட்டும் இப்போ 'ஐ லவ் யு' ன்னு சொல்லு, அப்புறம் பார் என் வேகத்த."

"போடா எரும. நேத்து இதையே தான் ஆஃபீசுல ஷீலாகிட்டயும் சொன்னியாமே!!"

"அவ்வ்.. போட்டு கொடுத்துட்டாளா?."

"ஹே சிவா அங்க கொஞ்சம் பாரு. அது மாநகராட்சி (corporation) வண்டி மாதிரியும் தெரியல ஆனா அந்த ரெண்டு பிச்சை காரங்களையும் வலுக்கட்டாயமா ஏத்திக்கிட்டு வேகமா போகுது பாரேன்."

"அட விடு பிச்சைகாரங்க தான!!"

"இல்லை.. எனக்கு ஏதோ தப்புன்னு படுது. நீ அந்த வண்டிய ஃபாலோ
பண்ணு."

"அடிப்பாவி!! அம்மா காத்துகிட்டு இருப்பாங்க சீக்கிரம் போகணும்ன்னு சொன்ன. இப்போ என்னடான்னா பிச்சைக்காரங்கள தொரத்திக்கிட்டு போக சொல்ற??"

"டேய்.. நைநைன்னு பேசாம கொஞ்சம் போயேன். அந்த வண்டிக்கு பின்னாடி."

இருவரும் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர். அந்த வாகனம் மருத்துவர் ஆல்பர்டின் மருத்துவமனையை அடைந்ததும், ஏற்றப்பட்ட அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் இறக்கி உள்ளே அழைத்து சென்றனர்.

"பார் சிவா. அந்த வண்டியில ஏறும் போது நல்லா இருந்தவங்க. இப்போ மயக்கம் அடைந்த நிலைமையில இருக்காங்க. நான் சொன்னேன்ல சம்திங் ராங்னு."

"இப்போ என்ன பண்றது காமினி??"

"என்ன தான் பண்ணுறாங்கன்னு பார்க்கலாம் வா."

"காமினி.. நாம ஏன் தேவையில்லாம ஏதாவது பிரச்சனைல சிக்கனும்??"

"நாம ரெண்டு பேரும் ரிப்போர்ட்டர்ஸ் அதை மறந்துடாத சிவா."

இரவு நேரம் என்பதால் டூட்டி டாக்டர் மட்டும் ஒரு சில செவிலியர்கள் மட்டுமே மருத்துவமனையில் இருந்தனர்.  நான்கு மாடி கட்டிடத்தில் முதல் இரண்டு மாடிகளில் மட்டுமே மருத்துவமனை செயல்பட்டு வந்தது. மூன்றாவது மாடியில் சில அறைகளில் மருத்துவமனைக்கு தேவைப்படும் ஒரு சில பொருட்கள் மட்டும் இருந்தன. அந்த பிச்சைக்காரர்களை மூன்றாவது மாடிக்கு தள்ளிக் கொண்டு சென்றனர் அந்த ஆசாமிகள்.

காமினியும்,சிவாவும் அவர்களை பின் தொடர்ந்து செல்ல அந்த உயரமான ஆசாமிகளுள் ஒருவன் யாராவது பின் தொடர்கிறார்களா என சந்தேகத்துடன் திரும்பி பார்த்தான். வராண்டாவில் யாரையும் காணவில்லை. பின்பு அந்த  இரண்டு ஆசாமிகளும் அந்த பிச்சைக்காரர்களை ஒரு தனி அறையில் படுக்க வைத்து விட்டு மீண்டும் வாகனத்தை நோக்கி செல்ல தொடங்கினார்கள்.

நடப்பது என்ன என்பது புரியாத நிலையில் சிவாவும் காமினியும் முழித்துக் கொண்டிருக்க, மின் தூக்கி வழியாக மருத்துவர்கள் ஆல்பர்ட்டும், கிருஷ்ணனும் வெளியே  வர தொடங்கினர். அதனை சற்றும் எதிர்ப்பார்த்திடாத காமினியும்,  சிவாவும்  என்ன செய்வதென்று புரியாமல் அருகிலிருந்த ஒரு அறையினுள் புகுந்தனர்.

எதையோ உணர்த்த ஆல்பர்ட் அந்த அறையை நோக்கி நடந்து வந்தார். டாக்டரின் காலடி சப்தம் தங்களை நோக்கி வருவதை அறிந்த காமினி மறைந்துக் கொள்ள இடம் தேடினால். ஆனால் அதற்கு ஏதுவாக அந்த அறையில் எந்த ஒரு இடமுமில்லை.

ஆல்பர்ட் அந்த அறையின் கதவுகளை திறக்க முற்பட, கிருஷ்ணன் அவரை விரைவாக வருமாறு அழைத்தார். கதவின் மீது கைகளை வைத்தவர், அதனை விடுத்து கிருஷ்ணனை நோக்கி சென்றார். அந்த இரண்டு பிச்சைக்காரர்களுக்கும் மயக்கம் தெளிய தொடங்கி இருந்தது.

இது தான் சரியான நேரம் என்று கூறி அவர்கள் இருவரின் உடலுக்குள்ளும் PX+  செலுத்தப்பட்டது. இதனை நிருபர்கள் இருவரும் கதவின் துவாரம் வழியாக பார்த்துக் கொண்டிருந்தனர். மருந்தை உடலில் செலுத்திய அடுத்த ஐந்து நிமிடங்களில் அந்த இரண்டு பிச்சைக்காரர்களும் விழித்தனர்.

அதன் பின்பு அங்கே காமினி பார்த்த காட்சி அவளை மிரட்டியது.

PX+ உட்கொள்ளும் நபர் நல்ல ஆரோக்கியத்துடன் காணப்பட்டாலும், அவர்களின் மூளைக்கு செல்லும் இந்த மருந்தின் தாக்கத்தால் சுயமாக சிந்திக்க முடியாத நிலைமைக்கு ஆளாவார்கள். அதாவது ஒரு அடிமைப் போல் மற்றவர்களின் கட்டளைக்கு அடிபணிவார்கள்.

"ஓஹ் மை காட். வீ ஹேவ் டு டூ சம்திங் அபௌட் திஸ் சிவா. இது சட்டப்படி குற்றம்".

"இப்போ நம்மகிட்ட எந்த ஒரு ஆதாரமும் இல்ல காமினி. நாம கொஞ்சம் பொறுமையா செயல்பட்டா நிச்சியம் அவங்களை கையும் களவுமா பிடிக்க முடியும்."

சிவா சொல்வது சரி தான் என்பது போல் தனக்குள் எதையோ பேசிக் கொண்டிருந்தாள். மறுநாள் என்ன செய்வது, இதை எப்படி கையாள்வது என்பதிலேயே அவள் சிந்தனை இருந்தது.உடனே தன் அலுவலக சீனியர் பரந்தாமனுக்கு போன் செய்தவள் நடந்ததை விளக்கி கூறினாள். 

அடுத்த நாள் இரவு, கேமராவுடன் மருத்துவமனைக்கு சென்று பிச்சைக்காரர்களை அடைத்து வைத்திருந்த அறையின் பக்கத்து அறைக்கு மருத்துவர்கள் வருவதற்கு முன்பே புகுந்தனர்.

சிவா அந்த அறையில் லேசர் கதிர்வீச்சைக் கொண்டு சுவற்றில் சிறிய கண் போன்ற துளையை உருவாக்கினான். பொறுமையோடு இருந்தவர்கள், அந்த துவாரம் வழியாக டாக்டர்களின் செயல்பாடுகள் அனைத்தையும்  கேமரா மூலம் தெளிவாக பதிவு செய்தனர்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக சிவாவின் கால்கள் பட்டு ஒரு பிராணவாயு கலன் (ஆக்சிஜெண் சிலிண்டர்) உருள அந்த சப்தத்தை கேட்டு ஆல்பர்ட்டும் கிருஷ்ணனும் அந்த அறைக்கு விரைந்தனர். 

சிவாவும் காமினியும் மூன்றாவது மாடியில் இருந்து கீழே இறங்கி தனித்தனியாக பிரிந்து ஓடத் தொடங்கினார்கள். சிவா மருத்துவமனையிலிருந்து வெளியே தப்பிக்க, அவனை பின் தொடர்ந்து துரத்தினார் ஆல்பர்ட். தன்னால் சிவாவை போல் வேகமாக தப்பிக்க முடியாது என்றுணர்ந்த காமினி தன்னை கிருஷ்ணனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள தரை தளத்தில் நோயாளிகளின் அறையில் புகுந்தாள்.

இரவு நேரம் என்பதால் விளக்குகள் அணைக்கப்பட்டு அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த அறையிலிருந்த  ஜன்னலுக்கு மறுபுறம் 'பார்க்கிங் ஏரியா' இருப்பதை கண்டாள். மருத்துவர் அவளை பின்தொடர்ந்து அந்த அறைக்கு வரக்கூடும் என்பதால் யாருமில்லாத படுக்கையில் ஏறி படுத்துக் கொண்டு அருகில் இருந்த மாஸ்கையும் வயர்களையும் அணிந்துக் கொண்டாள்.

அவளை துரத்திக்கொண்டு வந்த கிருஷ்ணன் அவள் படுத்திருந்த கட்டிலை தாண்டி ஓடினார். டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

தப்பித்து இல்லத்தை அடைந்தவள், சிவாவுக்கு போன் செய்து அவன் பாதுகாப்பாக இருக்கிறானா என்று அறிந்துக் கொண்டாள். அவனும் தன் இல்லத்தை அடைந்து விட்டதாக கூறவே காமினி நிம்மதி பெருமூச்சி விட்டாள்.

தனது கேமராவை எடுத்து பதிவு செய்யப்பட்டதை பார்த்தவள் மேலும் திடுக்கிட்டாள். மருத்துவர்கள் பேசியவை அந்த கேமராவில் பதிவாகியிருந்தது. அதன் மூலம் மேலும் பல முக்கிய புள்ளிகள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது அவளுக்கு புரிந்தது.  

பரந்தாமனுக்கு போன் செய்து கேமராவில் எடுத்த ஆதாரங்கள் பற்றியும் அவர்கள் துரத்தப்பட்டது பற்றியும் கூறினாள். அமைதியாக அவள் கூறுவதை கேட்டுக் கொண்ட பரந்தாமன், "நீங்க யார்ன்னு அவங்களுக்கு தெரியாதுல?? அவங்களுக்கு உங்கள பத்தின க்ளூ எதையும் விட்டுடலையே??" என்று வினவினார்.

"ஷிட்"  என்று கூறிக் கொண்டு தன் தலையில் அடித்துக் கொண்டவள், "சார் என் ஐ.டி. கார்டை தப்பிக்கும் போது அங்கேயே விட்டுட்டேன்" என்றாள்.

"ஓஹ் காட்.ஹெல்த் மினிஸ்டர் வேற சம்மந்தபட்டிருகார் இதுல. யூ மஸ்ட் பீ வெரி கேர்புள் நவ்.உன்னோட ஐ.டி கார்டு மூலமா உன் வீட்டு முகவரிய அவங்க சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்க.

இனி நீ வீட்டுல இருக்க வேணாம் உடனே வேற பாதுகாப்பான இடத்துக்கு போ.அப்புறம், அவங்க நாம பேசுறத கூட  ஒட்டு கேட்க ட்ரை பண்ணலாம். சோ இனி கேசட் பத்தி பேசும் போது டைமண்ட்ன்னு சொல்லு. இனி கோட் வோர்ட்ஸ் தான் பயன்படுத்தணும். வெளிப்படையா பேச வேண்டாம்.காலைல சீக்கிரமே ஆபீஸ்க்கு வந்துடு நாம செய்ய வேண்டியத  அங்க பார்த்துக்கலாம்" என்றார் பரந்தாமன்.   

களைப்பும் சோர்வும் உடல் முழுவதும் பரவியிருக்க அவள் கண்கள் அவளை அந்த சோர்விலிருந்து காப்பாற்ற முயற்சி செய்துக் கொண்டிருந்தது.

மறைந்துக்கொள்ள எங்கே செல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.அப்பொழுது சிவாவிடமிருந்து வந்த அந்த தொலைபேசி அழைப்பு அவளுக்கு அதீத எரிச்சலை கொடுத்தது. அடக்கிக் கொண்டு 'ஹலோ' என்றவள், "இப்போவேவா?" என்றாள்.

அவனுடைய அழைப்புக்கு செவி சாய்த்து தனது கேமராவில் பதிவு செய்யப்பட்ட கேசட்டுடன் அவன் அழைத்த இடத்திற்கு அந்த இருளில் சென்றாள். அப்பொழுது மணி மூன்று, சாலைகளில் மனிதர்கள் நடமாட்டமின்றி ஒரு சில மாடுகள் மட்டுமே திரிந்துக் கொண்டிருந்தன.சிவாவின் பைக் சப்தம் அவளை நெருங்கியது.

"உனக்கு எதுவும் ஆகலையே?" என்று காமினியை நோக்கி கேட்டான் சிவா.

"எப்படியோ கேமராவோட தப்பிச்சிட்டேன் பட் என் ஐ.டி. கார்ட அங்கயே விட்டுட்டேன். எனிவேஸ்,இப்போ நமக்கு தேவையான அனைத்து ஆதாரங்களும் கிடைச்சிடுச்சி" என்றாள் சிரித்தபடியே.

"அதுமட்டுமில்ல இதுல நிறைய முக்கிய புள்ளிகளும் சம்மந்தப்பட்டிருக்காங்க." 

"அப்படியா,யார் அது??" என்று புருவத்தை உயர்த்தினான் சிவா.

"ஹெல்த் மினிஸ்டர் மிஸ்டர். அன்புராஜ்."

"இப்போ அடுத்து என்ன செய்றதா பிளான்??"

"நாளைக்கு இந்த ஆதாரத்த மக்கள் முன் வெளியிடப் போறோம்.  மக்களுக்கு இதை பத்தி தெரிஞ்சாகனும். அப்போ தான் அரசாங்கமும் அவங்க மேல நடவடிக்கை எடுக்கும். நம்மளாலும் பிரச்சனையிலிருந்து தப்பிக்க முடியும்."

"லிசன் காமினி. உயிரை பனயம் வச்சி இந்த காரியத்த பண்ணியிருக்கோம். கொஞ்சமாவது காசு பாக்கனும்னு உனக்கு தோனலியா??"

"வாட் டூ யு மீன்?? "

"ஐ மீன். வீ கேன் மேக் சம் மணி!! மினிஸ்டர் மற்றும் டாக்டர்ஸ இந்த  காசெட் வச்சி மெரட்டி காசு பார்க்கலாமே!!"

"நோ!! காசுக்கு ஆசைப்பட்டு நான் இதை செய்யல."

"ப்ளீஸ் காமினி,டோன்ட் மேக் மீ வைல்ட். கிவ் மீ தி காசெட்".

வாக்குவாதம் பெருகி தொடர்ந்து காமினி அவனுக்கு செவி சாய்க்க மறுக்கவே, "ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

அந்நேரம் அந்த ஏரியாவில் ரோந்திலிருந்த போலீஸ் வாகனம் சற்று தூரத்தில் வர, சிவா என்ன செய்வதென்று புரியாமல் அங்கிருந்து மெல்ல ஓட தொடங்கினான்.

காமினியும் அங்கிருந்து உடனே அகன்று தன்னுடைய தோழியின் இல்லத்திற்கு சென்று விடியும் வரை அடைக்கலம் புகுந்தாள். பிறகு ஆட்டோ பிடித்து அலுவலகம் சென்று  பரந்தாமனை சந்தித்து கேசட்டை கொடுத்தாள்.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

"ஹா ஹா நீங்க இன்னும் டைமண்டை மறக்கல போல.. ஆனா,போலீஸ் கண்ணுல மண்ணை தூவிட்டுன்னு சொன்னீங்களே அதான் என்னன்னு புரியல??

"ஆமாம். மினிஸ்டர் நேற்று இரவு உங்க ரெண்டு பேரையும் கண்டுபிடிக்க சிட்டி முழுக்க ரோந்துல இருந்த போலீஸ்காரங்ககிட்ட சொல்லியிருக்கார்."
    
    "ஓ!!"        

9 comments:

மதுரை சரவணன் said...

super. vaalththukkal.

Rajasubramanian S said...

பிரமாதம்.வாழ்த்துக்கள்.

☀நான் ஆதவன்☀ said...

நல்லாயிருக்குங்க. வாழ்த்துகள் :)

இரகுராமன் said...

@மதுரை சரவணன்
@ராஜசுப்ரமணியன் S
@☀நான் ஆதவன்☀

- மிக்க நன்றி :-)

Madhavan Srinivasagopalan said...

எங்கண்ணா.. 'டைமண்டு.. டைமண்டு' அப்படீன்னு எதோ சொன்னீங்களே.. அது மட்டும்தாம் புரியலே.. மத்தபடி ஒக்கே..

வெற்றிபெற வாழ்த்துக்கள்..

(மனதினுள் : கெளம்பிட்டாங்கையா .. கெளம்பிட்டாங்க... நம்மள விட நல்லா எழுதுறாங்களே.. நம்ம கதைக்கு பரிசு கேடைச்சாமாதிரிதான்.. வெளங்கிடும்..)

இரகுராமன் said...

//டைமண்டு.. டைமண்டு' அப்படீன்னு எதோ சொன்னீங்களே.. அது மட்டும்தாம் புரியலே.. மத்தபடி ஒக்கே..//

அதற்க்கு தான் விளக்கம் கொடுத்திருக்கேனே... பாதுகாப்பு கருதி கேசட் பதிலாக டைமண்டு என்று கதையில் பயன்படுத்தப்பட்டுள்ளது :)

aru(su)vai-raj said...

கதை நல்லா இருக்கு . வாழ்த்துகள்

Abhi said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நானும் எழுதியிருக்கேன்.. படிச்சுப் பாருங்க

http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html

Ramesh said...

கதை நல்லா இருக்குங்க இரகு... இப்பதான் படிச்சேன்.. வெற்றிபெற வாழ்த்துக்கள்...

என்னுடைய கதை படிங்க..

http://rameshspot.blogspot.com/2010/10/blog-post_15.html