Thursday, October 6, 2011

நான் ஒரு திருட்டு பையன் !!அப்பொழுது எனக்கு வயது 13 இருக்கும் ..

மதிய உணவு இடைவெளியின் போது,பள்ளியினருகில் இருக்கும் அந்த கடையில் தினமும் ஏதாவது வாங்கி தின்பது என்பது ஒரு பழக்கமாகிவிட்டது. அன்றும் சீக்கிரமே சாப்பிட்டு முடித்து, கடையை நோக்கி நடந்தோம். 

"டேய் இன்னைக்கு சுப்ரியா மிஸ் திருத்தி கொடுத்த சயின்ஸ்ல டெஸ்ட் பேப்பர்ல் நான் 81 மார்க் வாங்கினேன்..நீங்க எவ்ளோடா வாங்கினீங்க ??" என்று கேள்விகேட்ட தரணியிடம் "எனக்கு 73 தான் டா போட்டாங்க"  என்று பதில் சொல்லிக்கொண்டு வந்தான் ராம்ஜி... 

தரணி,"டேய் ரகு உனக்கு எவ்ளோ டா வந்துச்சி ??"

எனது சிந்தனையோ வேறெதிலோ இருந்தது. "நேத்து கமர்கட்டு, முந்தா நேத்திக்கு கடலை மிட்டாய் இன்னைக்கு மறுபடியும்....,ச்சே இந்த தரணி பயனுக்கு மட்டும் வீட்டுல எப்படி தான் காசு  தராங்களோ?"


"அவன் பதில் சொல்லாம வரத பார்த்தாலே புரியலையா?? அவன் பெயில்டா" என்றான் ராம்ஜி ..

இதை ஒரு கவுரவ பிரச்சன்னையாக தான் எடுத்துக்கொண்டேன் போலும் (பெயில் ஆனதை அல்ல, அவன் வாங்கி கொடுத்து தின்பதை)...

அடுத்த நாள் காலை அம்மா வழக்கமாக காசு வைக்கும் அந்த டப்பாவினுள் யாருக்கும் தெரியாமல் கையைவிட்டு 50 காசினை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு புறப்பட்டேன்.. எனக்கு அப்பொழுது எந்த பயமுமில்லை..

அன்று மதியம், நான் தான் என் நண்பர்களுக்கு தேன் முட்டாய் வாங்கிக்கொடுத்தேன்.

டேய் தரணி, நானும் உனக்கு வாங்கிக்கொடுத்தேன் பார் என்று மனதுள் மகிழ்ச்சியில் பொங்க,"காசு யார் டா கொடுத்தா??" என்றான் ராம்ஜி..  

இப்பொழுது எனக்கு பயம் வந்துவிட்டது.. காரணம், ராம்ஜி என் வீட்டின் அருகிலேயே இருக்கிறான். என் அம்மாவுக்கோ இவனை ரொம்பவே பிடிக்கும். இவன் கையெழுத்தை பார் எவ்ளோ அழகா இருக்கு என்று என் அம்மா சொல்லாத நாளே இல்லை.. நாளைக்கே இவன் என் அம்மாவிடம் சென்று எதையாவது உளறி வைத்துவிட்டால் என் கதி???

சற்று யோசித்த நான், "அப்பாக்கிட்ட கேட்டேன்டா அவர் தான் கொடுத்தார், அம்மா கிட்ட சொல்ல வேனாம்ன்னு சொல்லிட்டார், உனக்கு தான் தெரியுமே என் அம்மாக்கு வெளியில கடைல வாங்கி சாப்படா பிடிக்காதுன்னு!!.. நீயும் என் அம்மாகிட்ட சொல்லாம இருந்தா என் அப்பா கொடுக்குற காசுல உனக்கும் வாங்கி தரேன்" என்றேன். அன்றோடு எனக்கிருந்த ஒரு பிரச்சனை தீர்ந்தது..

தவறு செய்கிறோம் என்று தெரிந்தது ஆனால் பெரும் தவறு என்பதை நான் அந்த வயதில் உணரவில்லை... 

50 காசு 1 ரூபாய் ஆனது பிறகு 1 ரூபாய் 5 ரூபாயாக ஆனது..ஒரு சில நாட்கள் இதே தொடர, எப்பொழுதும் காசு வைக்கும் அந்த டப்பாவில் அன்று  கையை விட்டு ஏமாந்தேன்.. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு இதே ஏமாற்றம் தான்.. 

அம்மாவுக்கு தெரிந்துவிட்டதோ என்று பயம் வந்தது, அதே சமயம் தெரிந்திருந்தால் அம்மா இப்படி இயல்பாக இருக்க மாட்டாரே என்ற எண்ணமும் வந்தது.. இருப்பினும் சில நாட்கள் இந்த பழக்கத்தை நிறுத்தி வைத்திருந்தேன். 

அன்று என் அம்மா என்னை அழைத்து, இன்னொரு ஒரு டப்பாவை காட்டி "ரகு, இதுல இருந்து 1 ரூபாய் எடுத்துகிட்டு போய் பச்சை மிளகாய் வாங்கிட்டு வாடா"  என்றார். 


1 ரூபாய் எடுக்கும் போதே அந்த டப்பாவை நன்கு கவனித்தேன், அதில்10 ரூபாய் தாளை தவிர வேறு சில்லறை எதுவுமில்லை...

அடுத்த நாள் காலை என் அம்மா என்னை பள்ளிக்கு அனுப்ப பிஸியாக இருந்த நேரம், அந்த பத்து ரூபாவை எடுத்துக்கொண்டால் என்ன என்று தோன்றியது எனக்கு.. உடனே தயங்காமல் அதனை எடுத்து பையிலிருந்த கணக்கு புத்தகத்தின் நடுவில் வைத்துக்கொண்டேன்...என்றும் போல் அன்றும் சாப்பிட்டுவிட்டு, பேருந்து நிறுத்ததிற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தேன்...  


"மனதிற்குள் கலக்கிட்டடா ரகு" என்று சொல்லிக்கொண்டே செல்ல, பின்புறத்திலிருந்து அம்மாவின் குரல் கேட்டது ..  இப்பொழது எனக்கு
வயிறு கலக்க ஆரம்பித்துவிட்டது...


"வா சாமி கும்பிட்டு போ" என்று பேருந்து நிறுத்ததிற்கு அருகிலுள்ள அந்த பிள்ளையார் கோவில்லுக்குள் அழைத்து சென்றார்..கோவிலுக்குள் சென்றதும், "ரகு பையை என்கிட்ட கொடுத்துட்டு கோவில சுத்தி வா" என்று அனுப்பினார்..


சரி தான் கும்(பிட)ம போறது பிள்ளையார இல்ல என்ன தான் என்று ஓரளவுக்கு தெரிந்து விட்டது.....நான் கோவில ஒரு சுத்து சுத்திட்டு வரத்துக்குள்ள, கணக்கு புக்கும் அதுக்குள்ள இருந்த பத்து ரூவாவும் அம்மா கையில சரியாய் சிக்கிடுச்சி.. 

இப்போ அம்மா என்ன பண்ணுவாங்க.. அப்பாக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவாரு?  ஒரு பக்கம் பயம், இன்னொரு பக்கம் அசிங்கமாவும் இருந்துச்சி...

தூரமா இருந்தே அம்மாவ பார்த்தேன்.. "எனக்கு தெரியும் நீ தான் இந்த திருட்டு  தனத்த பண்ணுறன்னு.. கையும் களவுமா பிடிக்கனும்ன்னு தான் காத்துட்டு இருந்தேன்னு அம்மா சொல்ல"..  ஒஹ் சரி தான், ப்ளான் பண்ணி தான் என்ன கவுத்திருக்காங்கன்னு புரிஞ்சிடுச்சி....

சரி இன்னைக்கு,நீ ஸ்கூல்க்கு போக வேணாம்..வீட்டுக்கு வான்னு கூட்டிட்டு போக, அப்புறமென்ன வீட்ல ஒரே கச்சேரி தான்...

அடிச்சி அடியில ஜல்லிக்கரண்டி உடன்சிடுச்சி... இருந்த ஒரே ஜல்லிக்கரண்டியும் போச்சேன்னு கோவத்துல இன்னும் நாலு அடி சேர்ந்து விழுந்துச்சி .. 

அடிவாங்கும்போது... ச்சே இப்படி அடிச்சிட்டாங்கலேன்னு அம்மா மேல அவ்ளோ கோவம்.. பிறகு யோசிச்சி பார்த்தா, பெயிலா போனதுக்கு கூட அடிக்காதவங்க இதுக்கு போய் இப்படி அடிசிருக்காங்கன்னா.. நாம ரொம்ப பெரிய தப்பு பண்ணி இருக்கனும்ன்னு தோனுச்சி.. 

என் தந்தையோ என்னை அடிக்கவுமில்ல திட்டவுமில்லை..
ஒரே வார்த்தை தான் சொன்னார்," இந்த திறமைய நீ படிப்புல காட்டினா எங்கையோ போவ"..        


அன்னைக்கு வாங்குன அடி தான், அதுக்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் காசு விஷயத்துல எந்த ஒரு தப்பும் பண்ணினதில்ல..

இப்போ யோசிச்சு பார்த்தா,அப்போ கண்டுக்காம விட்டிருந்தா இன்னைக்கு இப்படி ஒரு நல்ல நிலைமையில் இருக்க முடியுமான்னு தோணுது..


இந்த திருட்டு பயல திருத்தினதுக்காக என் அம்மாக்கு நன்றி.. அதற்க்கு உதவிய அந்த உடஞ்ச ஜல்லிக்கரண்டிக்கும் என் நன்றி !!! 

No comments: