Tuesday, August 20, 2013

மேகமலை ஒரு பயணம்

சில நாட்களுக்கு முன் குமுதம் இதழ் மூலம் இந்த மேகமலை பற்றியறிந்த என் தந்தை தன்னை அங்கே அழைத்து செல்லுமாறு கேட்டார்.

அலுவகத்தில் ஒரு வாரம் விடுப்பில் இருந்த நான்,மேகமலை செல்ல இது தான் சரியான நேரம் என்று முடிவெடுத்து அதற்க்கு வேண்டிய  தகவல்களை சேகரிக்க தொடங்கினேன்.


அணைத்து விவரங்களும் சேகரித்த பின்னர், நாங்கள் ஒரு ஐந்து நபர்கள் விழுப்புரத்தில் இருந்து ஆகஸ்ட் 14 காலை 5 மணிக்கு  போலேரோ வில் புறப்பட்டோம்.


கடல் மட்டத்திலிருந்து 1500 மீ உயரத்திலிருக்கும் மேகமலை, தேனியிலிருந்து கம்பம் செல்லும் வழியில் சின்னமனூர் என்னும் ஊரிலிருந்து  35 கி மீ தொலைவில் இருக்கிறது.


இப்படி ஒரு இடமிருப்பது அநேக மக்களுக்கு தெரியாத காரணத்தினால் தானோ என்னவோ ஊட்டி கொடைக்கானல் போல் இல்லாமல் இங்கே இயற்க்கை இன்னும் கொஞ்சி விளையாடி கொண்டிருக்கிறது.


காலை 11 மணியளவில் சின்னமன்னூரை அடைந்தோம். மேகமலையில் ஹோட்டல்கள் அதிகம் இல்லாத காரணத்தினாலும், நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த இடத்தில் உணவு விலை சற்று அதிகம் என்பதாலும் மதிய உணவை சின்னமன்னூரில் வாங்கிக்கொண்டோம்.


மீண்டும் மேகமலை/ஹைவேவிஸ் நோக்கி பயணம் தொடங்கியது. 





வழி நெடுக்க இருந்த திராட்சை தோட்டங்கள் எங்கள் கண்களை குளிரச்செய்தன.







மேகமலை செல்வதென்று முடிவு செய்த உடனே, அங்கே தங்குவதற்கான வசதிகள் குறித்து ஆராய தொடங்கினேன். அப்பொழுது மேகமலை ரெசிடென்சி என்னும் ஒரு ஹோட்டலை தொடர்பு கொண்டபோது அவர் என்னை கேட்ட முதல் கேள்வி "எந்த வாகனத்தில் வருகிறீர்கள்?"

நான் ஸ்விப்ட் என்றதும் வேண்டவே வேண்டாம் ரோடு சரியில்லாத காரணத்தினால் முடிந்தால் SUV ஒன்றில் வாருங்கள் என்றார்.அதனாலேயே போலேரோவில் சென்றோம். 





மேலே செல்ல செல்ல தான் அவர் அப்படி கூறியதற்கான காரணம் தெரிந்தது. வருடத்துக்கு 8-9 மாதங்கள் மழை பொழிவதால் சாலை மிகவும் மோசமானதாக இருக்கிறது. நான் ஸ்விப்ட் எடுத்து சென்றிருந்தால் நிச்சியம் ரத்த கண்ணீருடன் தான் திரும்பி இருப்பேன்.

18 கொண்டை ஊசி வளைவினை கொண்ட அந்த சாலை மிகவும் பழுதடைந்து இருந்தது.

சாலை சரிவர இல்லாததும் இவ்விடத்துக்கு மக்கள் வருகை குறைவாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

மேலே செல்ல செல்ல சில்லென்று காற்று எங்களை வரவேற்றது 


மதியம் 1 மணியளவில், மேகமலைக்கு 4 கி மீ முன்னரே நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த மேகமலை ரெசிடென்சியை  அடைந்தோம்.



அங்கே மதிய உணவை முடித்துக்கொண்டு ஒரு கைடுடன் 2 மணிக்கு வெளியே புறப்பட்டோம்.


மோசமான  சாலை காரணமாக அந்த 4 கி மீ தூரத்தை கடக்க 30 நிமிடங்களுக்கு மேல் தேவைப்பட்டது. பல இடங்களில் பாதையே இல்லை.




மேகமலையை அடைந்ததும் நெடுக்க பச்சை பசேலென்று தேயிலை தோட்டங்களை காண முடிந்தது. முன்னாறு மற்றும் வால்பாறை சென்றவர்களுக்கு இந்த தேயிலை தோட்டம் அப்படி ஒன்றும் ஒரு புதிய உற்சாகத்தை அளித்துவிட முடியாது என்பது உண்மையே.



முதலில், ஹைவேவிஸ் டாமை கண்டோம். அணையில் நீர் நிரம்பி காணப்பட்டது. 




மேகமலையில் மட்டும் கிட்டத்தட்ட 4-5 அணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஊட்டி மற்றும் கொடைக்கானல் போல் இங்கே ஏரி சிறியது கிடையாது. மேகமலையில் நாங்கள் செல்லுமிடமெங்கும் ஏரிகள் எங்களுடனேயே பயணித்தது. அவற்றில் படகு வசதி இல்லாதது பெரிய குறையாகவே இருந்தது.








மகாராஜா வியூ பாய்ன்ட், வூட் பிரியர் டீ பாக்டரி என்று இருட்டும் முன் சில இடங்களை பார்த்த பிறகு மீண்டும் அறையை அடைந்தோம்.






நாங்கள் தங்கியிருந்த இடத்தில் மின்சார வசதி இல்லாத காரணத்தினால், 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஒரு 4 மணி நேரம் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. அந்நேரத்தில் கைபேசி, காமெரா சார்ஜ் போட்டுக்கொள்ள வேண்டும். இரவு எந்த ஒரு லைட் வெளிச்சமும் இருக்காது, எங்களுக்கு ஒரு எமெர்ஜென்சி லைட் மட்டும் கொடுக்கபட்டது.


இடைவேளியின்றி தொடர்ச்சியாக கடற்கரையில் வரும்  அலையின் சப்தம் எவ்வாறு இருக்குமோ அதே போல் தான் இரவு முழவதும் காற்றின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. சில நேரங்களில் எங்கேகாற்று  நம்மை தூக்கி வீசிவிடுமோ என்று பயமாக கூட  இருந்தது.



மீண்டும் மறுநாள் காலை ட்ரெக்கிங் செல்வதற்காக 5 மணிக்கே எழுந்து, கைடையும் எழுப்பிவிட்டு கையில் டார்ச்சுடன் ஒரு நடைபயணம் சென்றோம். எந்த மிருகத்தையும் பார்க்கும் வரம் கிடைக்காத காரணத்தினால் மீண்டும் அறைக்கு வந்துவிட்டோம்.



அழகான மேக மூட்டங்களை ரசித்துவிட்டு, மேகமலையில் எங்களது பயணத்தை முடித்துக்கொண்டு சுருளி அருவிக்கு செல்ல தயாரானோம். 




மேகமலையில் தங்குவதற்கு 4-5 இடங்களே தற்போதைக்கு உள்ளன 



அரசு விடுதிகள் : 

1. பஞ்சாயத்து விடுதி  - 

2. அரசு இன்ஸ்பெக்ஷன் பங்களா

தொடர்ப்புக்கொள்ள 04554232389 or 04554232225



தனியார் விடுதிகள்: 


3. மேகமலை ரெசிடென்சி 

4. சாண்ட் ரிவர் காட்டேஜ் 
5. க்லௌட்  மவுண்டைன் பங்களா 

தொடர்ப்புக்கொள்ள திரு.சிவக்குமார் +919894055554 or +919487850508.



சுருளி மற்றும் சின்ன சுருளி அருவி :


மேகமலையில் இருந்து சுருளி மற்றும் சின்ன சுருளி என இரண்டு அருவிகள் உருவாகுகின்றன. 


இரண்டும் வெவ்வேறு திசையில் உள்ளன. பொதுவாக கம்பம் அருகே இருக்கும் சுருளி அருவி தான் பலருக்கு தெரியும் ஆனால் மயிலாடும்பாரை, வர்ஷநாடு அருகே இருக்கும் சின்ன சுருளியை அதிகம் தெரியாது.


நாங்கள் சில காரணங்களுக்காக  சுருளி அருவிக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம்.


மேகமலையில் இருந்து மீண்டும் சின்னமன்னூர் வந்து ஒரு 25 கி மீ சென்றால் சுருளி அருவியை அடைந்துவிடலாம்.


வழியெங்கும் மீண்டும் திராட்சை தோட்டங்கள், பச்சை பசேலென்று வயல்வெளிகள் பார்க்கவே அவ்ளோ ஆசையாக இருந்தது.







சுருளி அருவியில் நல்லதொரு குளியலை போட்டுவிட்டு, தேக்கடியியை ஒரு எட்டு பார்த்துவிட்டு மீண்டும் விழுப்புரம் திரும்பினோம்.

அடுத்த முறை சின்ன சுருளி,கும்பக்கரை அருவி ஆகியவற்றுக்கும் இன்னும் சில இடங்களுக்கு செல்லலாம் என்று இருக்கிறோம்.


அந்த இரண்டு நாட்கள் வீடு அலுவலகம் என்று எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் நகர வாழ்க்கையிலிருந்து தள்ளி வந்து, எந்த ஒரு மாசுமில்லாத அருமையான மேகமலையில் கழித்தது மறக்க முடியாத ஒரு அனுபவம்.


சாலைகள் அனைத்தும் சீர் செய்ததும் மீண்டும் ஒரு முறை குடும்பத்துடன் அங்கே  செல்லவேண்டும் என்ற ஒரு ஆசை உள்ளது. அதுவும் அந்த காற்றினில் இரவினை கழிக்க இதே ஆடி மாதத்தில் செல்ல வேண்டும்.



Thursday, October 18, 2012

இஸ்ரேலின் அப்பாடக்கர்கள்


என் அப்பா M.A. வரலாறு  படித்தவர், அதனால் தானோ என்னவோ எனக்கும் வரலாற்றின் மேல் ஒரு தனி ஆர்வம் உண்டு..

ஒரு முறை ஹைதிராபாத்திலிருந்து சென்னை வந்து, அங்கிருந்து விழுப்புரத்தில் இருக்கும் என் வீட்டுக்கு சென்றிருந்தேன்.. எப்பொழுதும் பேருந்து நிலையம் வந்து அழைத்துசெல்லும் என் தந்தை அன்று ஏனோ ஷேர் ஆட்டோ பிடித்து நீயே வந்துடு என்று கூறிவிட்டார்..

ஞாயிறன்று  என் தந்தைக்கு, அப்படி என்ன வேலை இருக்கப்போகுது  என்று எண்ணிக்கொண்டே வீட்டை  அடைந்த எனக்கு கோபம்.. 800 கிமீ தொலைவு பயணம் செய்து வந்த என்னை அவர் கண்டுக்கொள்ளவே இல்லை.. காரணம், கையில் ஒரு புத்தகம்..

கருப்பு அட்டை அதில் ஏதோ ஒரு பறவை.. அருகே நெருங்கி சென்று பார்த்தேன் 'மொஸாட்' என்றிருந்தது.





'மொஸாட்' - இஸ்ரேலிய உளவு துறை.. சரியாக கூற வேண்டுமேயானால் இஸ்ரேலின் உயிர்த்  துடிப்பு அவர்கள். அப்படித் தான் என் தந்தை ஒரு முறை என்னிடம் கூறினார்.


முடிவின்றி நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை போல் தான் இஸ்ரேல்-பாலஸ்தீன  பிரச்னையும். முஸ்லிம்களின் தேசத்தில் மைனாரிட்டிகளாக இருந்த யூதர்கள், தங்களுக்கு என ஒரு நாட்டை அமெரிக்க மற்றும் இங்கிலாந்தின் உதவியால் அமைத்துக் கொண்டு சுற்றியிருக்கும் முஸ்லிம் நாடுகளின் சவால்களை மொஸாடின் உதவியுடன்  எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதை நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கிறார் என்.சொக்கன்.

மொஸாட்  என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரான்னு கேட்பவர்களுக்கு அவர்களின் திறமையை பற்றிய ஒரு உதாரணம்.

"அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும்  இடையிலான பனிப் போர் சூடு பிடித்திருந்த நேரமது.. ரஷ்யர்கள் புதிதாக என்ன செய்தாலும் அமெரிக்கர்களுக்கு ஜன்னி கண்டது..

அந்நேரத்தில் ரஷ்யா தான் தயாரித்த MIG-21போர் விமானத்தை தன்னுடைய தோழமை நாடுகள், முக்கியமாக அமெரிக்காவின் விரோதிகளுக்கு மட்டுமே விற்பனை செய்தது. அதற்கு எரிபொருள் நிரப்புவது, பயிற்சி தருவது என அனைத்தையும் அவர்களே செய்தனர்.  

இதனால் டென்ஷன் ஆன  அமெரிக்கர்கள், அதனை எப்படியாவது கடத்தி விட வேண்டும் என்று எண்ணி பல முயற்சிகள் செய்தனர். ஆனால் அவர்கள் கைகளுக்கு அது கிடைக்கவில்லை.

அப்பொழுது இஸ்ரேலில், விமான படைத்தலைவர் ஜெனரல் மொர்டேசாய் ஹாட், மொஸாடின் தலைவர்  மிய்ர் அமிதை சந்தித்து MIG-21 குறித்து விளக்கினார். மேலும் இஸ்ரேலை சுற்றியிருக்கும் முஸ்லிம் நாடுகளிடம் MIG-21 இருப்பதால், அதன் தொழில்நுட்பத்தை  பற்றி தெரிந்துகொள்வது முக்கியமென்று கூறினார்.

பிறகு அக்கம்பக்கத்தில் எந்த நாடுகளில் MIG-21 இருக்கு என்னும் விவரத்தை திரட்டினார்கள்.. எகிப்த 34, சிரியாவில் 18, ஈராக்கில் 10  இருப்பதாய் அறிந்தார்கள்..

இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் MIG-21 ரக விமானத்தை இயக்க நிறைய அனுபவமுள்ள விமானிகளுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. இவர்களை விலைக்கு வாங்கினால் மட்டுமே விமானத்தை கடத்த முடியும். ஆக அப்படி ஒரு சந்தர்ப்பம் வர காத்திருந்தனர்.

அப்பொழுது தான் ஜோசப் என்பவர், மொஸாடை தொடர்புக் கொண்டு உங்களுக்கு MIG-21 விமானம் வேண்டுமா? விலை ஒரு மில்லியன் டாலர்  என்று கூறி  ஆச்சர்யப்படுத்தினார். கடத்த போவது நானில்லை ஈராக்கில் விமானியாக இருக்கும் எனது மருமகன் 'முனிர் ரெட்பா'  என்றும் கூறினார்..

முதலில் மொஸாட் அவரை நம்ப யோசித்தது. இருந்தாலும் அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அவரை அழைத்து மொஸாட் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பிறகு ஒப்புக்கொண்டனர்.

முனிர் இராக்கிலிருந்து விமானத்தை கடத்தி இஸ்ரேல் வர தயாராக இருந்தார். அதற்கு முன்பே அவரது குடும்பத்தினரை மொஸாட் உளவாளிகள் இஸ்ரேலுக்கு பத்திரமாக அழைத்து சென்றுவிட்டனர்..

1966, ஆகஸ்ட் 16 ஆம் தேதி திட்டமிட்டபடி ஈராக்கிலிருந்து MIG-21 விமானத்தை இஸ்ரேலுக்கு கடத்தி  உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது."






1975 மியூனிச் ஒலிம்பிக் போட்டியில் பாலஸ்தீன தீவரவாதிகள் இஸ்ரேலிய வீரர்களை பணயக் கைதிகளாக பிடித்த 'பிளாக் செப்டம்பரிலிருந்து'  ஆரம்பிக்கிறது. மெதுவாக அங்கு நடைபெற்ற நிகழ்வுகளையும் அதன் பின் மொஸாடின் பழிவாங்கும் செயல்பாடுகள் பற்றியும் விரிவிக்கின்றது இந்தப் புத்தகம்.


மேலும் ஹிட்லர் ஆட்சியில் யூதர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளும் அப்பொழுது இஸ்ரேலிலிருந்து யூதர்கள் தன் இனத்தவன் ஜெர்மனியில் படும் துன்பங்கள் தாளாமல் அவர்களை காக்க முயற்சிப்பதும் அழகாக கூறியிருக்கிறார் ஆசிரியர் என்.சொக்கன்.

இப்படி பல சுவாரசியமான விஷயங்களை விளக்கியிருக்கிறது இந்தப் புத்தகம்..

மேலும் பிரான்ஸ் நாட்டை  ஏமாற்றி தங்களுக்கு சொந்தமான படகுகளை திருடும் போதும், சதாம் ஹுசைனின் அணு ஆயுத முயற்சிகளை சீர்குலைக்கும் போதும்  அவர்களின் திறமையை எண்ணி பிரம்மிக்க வைக்கின்றது.

அமெரிக்கர்களின் பயிற்சியும், பல அதிநவீன கருவிகளையும் பெறும் இவர்கள், அதனை பயன்படுத்தி அமெரிக்கர்களையே வேவு பார்த்த விஷயம் நம்மை சிரிக்க வைக்கின்றது.

நான் இதுவரை எந்த ஒரு புத்தகத்தையும் ஒரே நாளில் படித்து முடித்ததில்லை, ஆனால் இந்த புத்தகத்தை முடித்தேன்.

Thursday, August 2, 2012

2012 ஒலிம்பிக்கும் நானும்

சில நாட்களுக்கு முன்பு லண்டன் ஒலிம்பிக் பாக்சிங் போட்டியில், 60 கிலோ எடை  பிரிவின் முதல் சுற்றில்  இந்தியாவின் ஜெய் பகவான்  பங்கேற்றிருந்தார்.. 


27 வயதாகும் இவர் இதுவரை கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் தவித்தவர்.. தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர்..

ஜெய் பகவான் முதல் சுற்றில் 19 வயதே ஆனா செஷல்ஸ் நாட்டின் வீரரை எதிர் கொண்டு அந்த போட்டியில்  18-8 என்ற புள்ளி கணக்கில் வெற்றியையும் சுவைத்தார்..


ஆனால் 19 எங்கே ?? 27 எங்கே ?? 

என்ன தான் ஒரே எடையாக இருந்தாலும், 19 வயது வீரருக்கு 27 வயது வீரரை கண்டால் பயம் நிச்சியம் இருக்கும்.. அந்த பயமே அவனுக்கு எதிரியாகி விட, தோல்வி நிச்சியம் என்ற எண்ணம் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே மனதில் பதிந்து விடும்..

இதற்க்கு நானே சிறந்த உதாரணம்... ஒரு சின்ன ப்ளாஷ் பாக் ..  அப்போ நான் மூணாவது படிச்சிட்டு இருந்தேன்..  (பயப்படாதீங்க சீக்கிரம் முடிச்சிடுறேன்)

பள்ளியில், நண்பன் ஒருவன் என்னை அடித்துக்கொண்டே இருக்கிறான், கோவத்தில் திருப்பி அடித்தால் இன்னும் பயங்கரமா அடிக்குறான்  என்று என் வீட்டில் கூறி வந்தேன் .. 

சும்மா விடுவாரா என் தந்தை, என்னை உடனே கராத்தே கிளாசில் சேர்த்து விட்டார் .. கராத்தே மாஸ்டர் என் தந்தையின் நெருங்கிய நண்பர் ..

வாரம் தோறும்  சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், காலை மற்றும் மாலையில் வகுப்பு நடைபெறும் .. என்னுடன் கிட்டத்தட்ட 30 நண்பர்கள், பலரிடம் அடிவாங்கிய காரணத்தினால் வகுப்பில் சேர்ந்தனர்.. 


மூன்றாம் வகுப்பில் தொடங்கிய பயிற்சி சிறிது சிறிதாக சூடேறியது.. நான் ஏழாவது படிக்கும்போது திருச்சியில் மாநில அளவில் ஒரு கராத்தே போட்டி நடைபெற்றது.. 

என் மாஸ்டரும் இம்முறை நான் களத்தில் இறங்க தயாராக இருப்பதாக கருதினார். இத்தனை வருட பயிற்சிக்கு பின், முதல் முறையாக களத்தில் நேருக்கு நேராக மோதுவதை நினைத்து உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி..

நாங்கள் மொத்தம் 15  நபர்கள் போட்டிக்காக மாஸ்டருடன் திருச்சி சென்றோம் 


கராத்தே போட்டியில் இரு வகை உள்ளது .. 

 2. Kata                 - http://en.wikipedia.org/wiki/Karate_kata


நான் கலந்து கொண்டது "ஸ்பாரிங்". இரண்டு நிமிடங்கள் கொடுக்கப்படும், அதில் அதிக புள்ளிகளை பெரும் வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கபடுவார் ..

காலை 11 க்கு போட்டி நடைபெறும் திருவெறும்பூருக்கு சென்றோம் .. அங்கே பேருந்தை விட்டு இறங்கியதும் சாலையோரத்தில் ஒரு மாமிச உணவகத்தை பார்த்தேன் .. 

வெளியில் ஒரு கண்ணாடி கூண்டில் நெருப்பில் பொறித்த கோழியை கம்பியின் நடுவே சொருகி வைத்திருந்தார்கள்.. அருகே ஒரு விளம்பர பலகையில் சிக்கன் பிரியாணியின் போட்டோ வேறு..

என்னத்த சொல்ல  என் மனசு என்கிட்டே இல்ல .. 

உடனே என் மாஸ்டரிடம், பிரியாணி வேணும் என்றேன்..  அவர் அப்படியே ஷாக் ஆகிட்டார் போல .. 

டேய் இப்போ தான கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி திருச்சி பஸ் ஸ்டான்ட்ல இட்லி / தோசைன்னு சாப்பிட்ட அதுக்குள்ள என்னடா பிரியாணின்னு ஒரு மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு கேட்டார் .. 

பிறகு வாங்கி தரேன்/ தரமாட்டேன்னு எதுவுமே சொல்லாம என்ன கூட்டிகிட்டு போட்டி நடைபெறும்  அரங்கத்துக்கு சென்றார்... 

அங்கே  சென்றதும், ஸ்பாரிங் போட்டியாளர்களுக்கு எடை சோதனை நடைபெற்றது -- அப்பொழுது என்னுடைய எடை 42, ஆகவே நான் 40-45 இடை பிரிவில் போட்டியிட்டேன்.. 

போட்டிகள் பொதுவாக இரண்டு நாட்கள் நடைபெறும் .. என்னுடைய போட்டி இரண்டாவது நாள் தொடங்கியது .. 

முதல் இரண்டு சுற்று எனக்கு எளிதாகவே இருந்தது..மேலும் போராடி படி படியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றேன்.

இப்போது தான் எனக்கு பிரச்சனை ஆரம்பமாயிற்று.. 

அரையிறுதி  சுற்றில் என்னுடன் மோத ஆயுத்தமானது B.com இரண்டாவது வருடம் படிக்கும் நபர்

12 வயது எங்கே ?? 19 வயது எங்கே ??  

அந்த பிரதரோட மீசையை பார்த்தே எனக்கு தோல்வி பயம் வந்து விட்டது.. நல்ல உசரம் வேறு.. பயபுள்ள எடைய மட்டும் கம்மியாவே மைண்டைன் பண்ணியிருக்கான் என் உசுர வாங்க ..

ஒரு பயத்திலேயே அந்த சுற்றில் தோல்வியடைந்தேன் ..ரெண்டு நிமிஷத்துக்கு எவ்ளோ அடி வாங்க முடியுமோ அவ்ளோவும் வாங்கிட்டு என் மாஸ்டரிடம் அழுதவாறே வந்து சேர்ந்தேன்..  

என்னை என் நண்பர்கள் சூழ்ந்திருக்க, இப்போ எதுக்கு அழுவுற என்றார் என் மாஸ்டர்.

பின்ன ?? தோத்தது கூட அசிங்கமா படல .. ஆனா  அவன ஒரு அடி கூட அடிக்க முடியாம  போனது தான் வருத்தம்.

"டேய் உனக்கு இன்னும் மூணாவது இடத்துக்கான மேட்ச் இருக்கு டா.. இவன் மேல இருக்குற கோபத்தை  எல்லாம் அவன் மேல காட்டு போ " என்றார் 

கொஞ்சம் அமைதியானேன், மீண்டும் போட்டிக்கு என்னை தயார் படுத்திக்கொண்டேன்.. 

என் முதல் டோர்னமென்ட், இவ்ளோ தூரம் வந்தாச்சி.. எப்படியாவது ஒரு பதக்கம் வாங்கிடனும்ன்னு தோனுச்சி.. 

மூன்றாமிடதுக்கான போட்டி தொடங்கியது, இப்பொழுது என்னுடைய எதிரிக்கு 17 வயது.. ஒரு டவுட்டா என் மாஸ்டர "மறுபடியுமா??"  என்றவாறு திரும்பி பார்த்தேன் 

என்னை அருகில் அழைத்தவர், "டேய் இந்த மேட்ச்ல மட்டும் ஜெய்ச்ச, உனக்கு நிச்சையம் சிக்கென் பிரியாணி வாங்கி தரேன்" என்றார்..

இது  போதாதா நமக்கு, 

அந்த போட்டியில் ஒரு அடி கூட  மேலே வாங்காமல் வெற்றி பெற்றேன்.. 

மேட்ச் முடிந்ததும் என்னுடைய ஆப்போனன்ட்  அவன் மாஸ்டர் கிட்ட கன்னத்துல வாங்கின அப்பு இப்போ கூட நியாபகம் இருக்கு .. 

எனக்கு பிரியாணி மாதிரி,அந்த செஷல்ஸ் வீரருக்கு எதவாது இருந்திருந்தா ஒரு வேல நம்ம ஆளுக்கு டண்டனகான் தானோ :P


* I will update the blog with my karate pics later 
*  வேற என்ன டைட்டில் வைக்கறதுன்னு தெரியாம வச்சிட்டேன் என்ன விட்டுடுங்க :P

Tuesday, March 6, 2012

Bay Decoration @ Oracle,Hyderabad

என்னுடைய அலுவலகத்துல  இந்த வருடமும் வெட்டியா சம்பளம் வாங்கும் எங்களுக்காக பல போட்டிகள் நடைபெற்றன..அதில் ஒன்று Bay  Decoration போட்டி 

இந்த வருடம் நடைபெற்ற போட்டியில் பல குழுவினர் வித விதமாக தங்களது பேவை டேகரெட் செய்தனர். அவற்றுள் பலரது  மனதை கொள்ளை கொண்டது "Temple of Power - In Style" என்று ரஜினியை மூலவராக வைத்து உருவாக்கப்பட்ட கோவில்..

அதன் சில புகைப்படங்கள் உங்களுக்காக...


தரிசனம் மற்றும் அபிஷேகங்களுக்கு கவுன்ட்டர்

அபிஷேக தட்டு கொடுக்குமிடம்

அபிஷேக தட்டு


கொடி கம்பம் 

கடவுளின் லீலைகள் -1

கடவுளின் லீலைகள் - 2





ரஜினியின் புஷ்பக விமானம் 

ஒரே திசை (மூலவர் ) நோக்கி நிற்கும் நவகிரகங்கள்

Last But Not The Least - மூலவர் 


புகைப்படங்களை ரசித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் .. நன்றி



Wednesday, November 2, 2011

மாத்தேரான் - மாசற்ற சொர்கத்திற்கு ஒரு பயணம்


பூனாவில் படிப்பை முடித்த ஒரு வருடத்திற்கு பின், நண்பர்கள் அனைவரும் மீண்டும் ஒன்று கூடலாம் என்று எண்ணினோம்.. அதற்கான பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள்..

நானும் ஆர்வத்துடன் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நண்பரையும்  இ -மெயில் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடர்புக்கொண்டேன்.. 

அனைவரும் பூனாவில் செப்டெம்பர் மாதம் சந்திப்பதாகவும் அங்கிருந்து 'மாத்தேரான்' என்னும் இடத்திற்கு செல்வதாகவும் முடிவு செய்தோம். 

பூனாவில் பனி புரியும் அண்ணன் ஆனந்த அவர்கள், மாத்தேரான் செல்லும் பயணத்திற்கான ஏற்பாட்டினை செய்யத்தொடங்கினார்.. 

10-செப்டெம்பர்-2010 அன்று நான் சென்னையிலிருந்து புறப்பட்டு  பூனாவை அடைந்தேன்.. ஆங்காங்கே இருந்து நண்பர்கள் பூனா வந்தடைந்தனர்.. 

நெப்போலியனின் துணையுடன் ஓல்ட் மாங்கய் தேடி மாத்தேரானுக்கு 11-செப்-2010  பயணத்தை தொடங்கினோம்...மாத்தேரானில் சரக்கு விலை அதிகமென்பதால் போகுற வழியிலேயே வேண்டியதை வாங்கிக்கொண்டோம்..


'மாத்தேரான்' - 'Forest on the Head'...பூனாவிலிருந்து 120 கி மீ தொலைவில் இப்படி ஒரு மாசற்ற சொர்க்கம் உள்ளது என்பதை இரண்டு வருடம் அங்கு தங்கி படிக்கும் பொழுது அறியாதிருந்தேன்.. அப்படியொரு அழகு...

மாத்தேரானுக்கான Ghat Road துவங்கும் இடத்தில் சுற்றுலா வாகனத்திலிருந்து இறக்கி விடப்பட்டோம்..7 கி.மீ தொலைவுள்ள Ghat Roadல் சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கபடாததால் மாருதி ஆம்னியில் பயணத்தை துவக்கினோம்..

Dasturi Naka என்னும் இடம் வந்ததும் இதற்க்கு மேல் எந்த வாகனம் செல்லாது...அடுத்த 8 கி.மீ நடந்தோ அல்லது குதிரையிலோ தான் செல்ல வேண்டும் என்றும் கூறினார்கள்..

அட  8 கி.மீ தானே என்று நடக்க தொடங்கினோம் .. உடன் நடந்தவர்கள் எங்களிடமிருந்தும் குரங்குகளிடமிருந்தும் விலகியே இருந்தனர் ..

நடைபாதையின் அருகிலிருந்த ரயில் தண்டவாளங்கள் அங்கே பல வருடங்களுக்கு முன்பு டாய் ட்ரைன்  இயங்கியுள்ளதை எங்களுக்கு தெரியப்படுத்தியது..

UNESCO Oct 2009 ஆம் ஆண்டு மீண்டும் ரயில் போக்குவரத்தை அங்கே தொடங்க ஆய்வு நடத்தியுள்ளது.. அதன் அடிப்படையில் அங்கே மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கும் வாய்ப்புள்ளது. 




நாங்கள் நடந்து செல்லும்போதே, இது நம்ம கொடைக்கானல் போலவோ ஊட்டி போலவோ அல்ல என்பதை அறிந்துக்கொண்டோம்..

ஒரு மணி நேர நடை பயணத்திற்கு பின் மாத்தேரானை அடைந்தோம்...


நடந்து வந்த அசதி,நல்ல பசியும் கூட..நாங்கள் தங்குவதற்காக புக் செய்த ஹோட்டலுக்கு சென்றதும் அன்லிமிடெட் லஞ்ச் ப்ரீன்னு சொன்னாங்க...  அப்புறம் நடந்தத சொல்லவா வேணும் .. நாங்க 11 பேர் தான் ஆனா எப்படியும் 200 ரொட்டி காலியாகியிருக்கும்.. இது இல்லாம ப்ரூட் சாலட் வேற.. 

இதெல்லாம் முடிச்சிட்டு கொஞ்ச நேரம் ஓய்வுக்கு பின்னர் பிற இடங்களுக்கு நடக்க தொடங்கினோம்.. 

மாத்தேரானில் சுற்றி பார்பதற்கு நிறைய இடங்கள் இருக்க அனைத்தையும்  2Days/1Night காண முடியாது என்பதை புரிந்துக்கொண்டோம்.. அதுவும் நடந்தே சென்று அத்தனை இடங்களையும் பார்ப்பது கடினமான ஒன்று..

ஆக கீழ் காணும் இந்த மேப்பில் இடது  பக்கத்தினை மட்டும் சுற்றி பார்த்திட முடிவு செய்தோம்..








முதலில் Charlotte Lake சென்றோம். பிறகு Cecil Pt (Actually a water fall mouth) க்கு சென்றோம்.

Charlotte Lake 


Cecil Pt
                                     


அணைத்து இடங்களும் நான் இது வரை கண்டிடாத ஒரு உலகத்தை எனக்கு காட்டியது..


நான் ஐஸ் கிரீம் சாப்பிடுறத பார்த்து யார் கண்ணு வச்சாங்களோ தெரியல .. போன இடத்துல எனக்கு மெட்ராஸ் ஐ வந்துடுச்சி :(( 








நான் இந்த பதிவில் அதிகம் மாத்தேரானின் அழகினை வர்ணிக்கவில்லை.. காரணம் 

1.எனக்கு சரியா வர்ணிக்க தெரியாது/வராது..
2.நான் இலக்கியவாதி அல்ல 
3.டைப் செய்ய கை வலிக்குது .. அதான் போட்டோ போட்டிருக்கேன்ல அத பார்த்து தெரிஞ்சிக்கோங்க :P

மேலும் இந்த இடத்தினை நான் வர்ணிப்பதை விட நீங்களே சென்று கண்டுக்கொள்வது சிறந்தது..

http://en.wikipedia.org/wiki/Matheran - Check this for more details..


Thursday, October 6, 2011

நான் ஒரு திருட்டு பையன் !!



அப்பொழுது எனக்கு வயது 13 இருக்கும் ..

மதிய உணவு இடைவெளியின் போது,பள்ளியினருகில் இருக்கும் அந்த கடையில் தினமும் ஏதாவது வாங்கி தின்பது என்பது ஒரு பழக்கமாகிவிட்டது. அன்றும் சீக்கிரமே சாப்பிட்டு முடித்து, கடையை நோக்கி நடந்தோம். 

"டேய் இன்னைக்கு சுப்ரியா மிஸ் திருத்தி கொடுத்த சயின்ஸ்ல டெஸ்ட் பேப்பர்ல் நான் 81 மார்க் வாங்கினேன்..நீங்க எவ்ளோடா வாங்கினீங்க ??" என்று கேள்விகேட்ட தரணியிடம் "எனக்கு 73 தான் டா போட்டாங்க"  என்று பதில் சொல்லிக்கொண்டு வந்தான் ராம்ஜி... 

தரணி,"டேய் ரகு உனக்கு எவ்ளோ டா வந்துச்சி ??"

எனது சிந்தனையோ வேறெதிலோ இருந்தது. "நேத்து கமர்கட்டு, முந்தா நேத்திக்கு கடலை மிட்டாய் இன்னைக்கு மறுபடியும்....,ச்சே இந்த தரணி பயனுக்கு மட்டும் வீட்டுல எப்படி தான் காசு  தராங்களோ?"


"அவன் பதில் சொல்லாம வரத பார்த்தாலே புரியலையா?? அவன் பெயில்டா" என்றான் ராம்ஜி ..

இதை ஒரு கவுரவ பிரச்சன்னையாக தான் எடுத்துக்கொண்டேன் போலும் (பெயில் ஆனதை அல்ல, அவன் வாங்கி கொடுத்து தின்பதை)...

அடுத்த நாள் காலை அம்மா வழக்கமாக காசு வைக்கும் அந்த டப்பாவினுள் யாருக்கும் தெரியாமல் கையைவிட்டு 50 காசினை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு புறப்பட்டேன்.. எனக்கு அப்பொழுது எந்த பயமுமில்லை..

அன்று மதியம், நான் தான் என் நண்பர்களுக்கு தேன் முட்டாய் வாங்கிக்கொடுத்தேன்.

டேய் தரணி, நானும் உனக்கு வாங்கிக்கொடுத்தேன் பார் என்று மனதுள் மகிழ்ச்சியில் பொங்க,"காசு யார் டா கொடுத்தா??" என்றான் ராம்ஜி..  

இப்பொழுது எனக்கு பயம் வந்துவிட்டது.. காரணம், ராம்ஜி என் வீட்டின் அருகிலேயே இருக்கிறான். என் அம்மாவுக்கோ இவனை ரொம்பவே பிடிக்கும். இவன் கையெழுத்தை பார் எவ்ளோ அழகா இருக்கு என்று என் அம்மா சொல்லாத நாளே இல்லை.. நாளைக்கே இவன் என் அம்மாவிடம் சென்று எதையாவது உளறி வைத்துவிட்டால் என் கதி???

சற்று யோசித்த நான், "அப்பாக்கிட்ட கேட்டேன்டா அவர் தான் கொடுத்தார், அம்மா கிட்ட சொல்ல வேனாம்ன்னு சொல்லிட்டார், உனக்கு தான் தெரியுமே என் அம்மாக்கு வெளியில கடைல வாங்கி சாப்படா பிடிக்காதுன்னு!!.. நீயும் என் அம்மாகிட்ட சொல்லாம இருந்தா என் அப்பா கொடுக்குற காசுல உனக்கும் வாங்கி தரேன்" என்றேன். அன்றோடு எனக்கிருந்த ஒரு பிரச்சனை தீர்ந்தது..

தவறு செய்கிறோம் என்று தெரிந்தது ஆனால் பெரும் தவறு என்பதை நான் அந்த வயதில் உணரவில்லை... 

50 காசு 1 ரூபாய் ஆனது பிறகு 1 ரூபாய் 5 ரூபாயாக ஆனது..



ஒரு சில நாட்கள் இதே தொடர, எப்பொழுதும் காசு வைக்கும் அந்த டப்பாவில் அன்று  கையை விட்டு ஏமாந்தேன்.. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு இதே ஏமாற்றம் தான்.. 

அம்மாவுக்கு தெரிந்துவிட்டதோ என்று பயம் வந்தது, அதே சமயம் தெரிந்திருந்தால் அம்மா இப்படி இயல்பாக இருக்க மாட்டாரே என்ற எண்ணமும் வந்தது.. இருப்பினும் சில நாட்கள் இந்த பழக்கத்தை நிறுத்தி வைத்திருந்தேன். 

அன்று என் அம்மா என்னை அழைத்து, இன்னொரு ஒரு டப்பாவை காட்டி "ரகு, இதுல இருந்து 1 ரூபாய் எடுத்துகிட்டு போய் பச்சை மிளகாய் வாங்கிட்டு வாடா"  என்றார். 


1 ரூபாய் எடுக்கும் போதே அந்த டப்பாவை நன்கு கவனித்தேன், அதில்10 ரூபாய் தாளை தவிர வேறு சில்லறை எதுவுமில்லை...

அடுத்த நாள் காலை என் அம்மா என்னை பள்ளிக்கு அனுப்ப பிஸியாக இருந்த நேரம், அந்த பத்து ரூபாவை எடுத்துக்கொண்டால் என்ன என்று தோன்றியது எனக்கு.. உடனே தயங்காமல் அதனை எடுத்து பையிலிருந்த கணக்கு புத்தகத்தின் நடுவில் வைத்துக்கொண்டேன்...என்றும் போல் அன்றும் சாப்பிட்டுவிட்டு, பேருந்து நிறுத்ததிற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தேன்...  


"மனதிற்குள் கலக்கிட்டடா ரகு" என்று சொல்லிக்கொண்டே செல்ல, பின்புறத்திலிருந்து அம்மாவின் குரல் கேட்டது ..  இப்பொழது எனக்கு
வயிறு கலக்க ஆரம்பித்துவிட்டது...


"வா சாமி கும்பிட்டு போ" என்று பேருந்து நிறுத்ததிற்கு அருகிலுள்ள அந்த பிள்ளையார் கோவில்லுக்குள் அழைத்து சென்றார்..கோவிலுக்குள் சென்றதும், "ரகு பையை என்கிட்ட கொடுத்துட்டு கோவில சுத்தி வா" என்று அனுப்பினார்..


சரி தான் கும்(பிட)ம போறது பிள்ளையார இல்ல என்ன தான் என்று ஓரளவுக்கு தெரிந்து விட்டது.....நான் கோவில ஒரு சுத்து சுத்திட்டு வரத்துக்குள்ள, கணக்கு புக்கும் அதுக்குள்ள இருந்த பத்து ரூவாவும் அம்மா கையில சரியாய் சிக்கிடுச்சி.. 

இப்போ அம்மா என்ன பண்ணுவாங்க.. அப்பாக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவாரு?  ஒரு பக்கம் பயம், இன்னொரு பக்கம் அசிங்கமாவும் இருந்துச்சி...

தூரமா இருந்தே அம்மாவ பார்த்தேன்.. "எனக்கு தெரியும் நீ தான் இந்த திருட்டு  தனத்த பண்ணுறன்னு.. கையும் களவுமா பிடிக்கனும்ன்னு தான் காத்துட்டு இருந்தேன்னு அம்மா சொல்ல"..  ஒஹ் சரி தான், ப்ளான் பண்ணி தான் என்ன கவுத்திருக்காங்கன்னு புரிஞ்சிடுச்சி....

சரி இன்னைக்கு,நீ ஸ்கூல்க்கு போக வேணாம்..வீட்டுக்கு வான்னு கூட்டிட்டு போக, அப்புறமென்ன வீட்ல ஒரே கச்சேரி தான்...

அடிச்சி அடியில ஜல்லிக்கரண்டி உடன்சிடுச்சி... இருந்த ஒரே ஜல்லிக்கரண்டியும் போச்சேன்னு கோவத்துல இன்னும் நாலு அடி சேர்ந்து விழுந்துச்சி .. 

அடிவாங்கும்போது... ச்சே இப்படி அடிச்சிட்டாங்கலேன்னு அம்மா மேல அவ்ளோ கோவம்.. பிறகு யோசிச்சி பார்த்தா, பெயிலா போனதுக்கு கூட அடிக்காதவங்க இதுக்கு போய் இப்படி அடிசிருக்காங்கன்னா.. நாம ரொம்ப பெரிய தப்பு பண்ணி இருக்கனும்ன்னு தோனுச்சி.. 

என் தந்தையோ என்னை அடிக்கவுமில்ல திட்டவுமில்லை..
ஒரே வார்த்தை தான் சொன்னார்," இந்த திறமைய நீ படிப்புல காட்டினா எங்கையோ போவ"..        


அன்னைக்கு வாங்குன அடி தான், அதுக்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் காசு விஷயத்துல எந்த ஒரு தப்பும் பண்ணினதில்ல..

இப்போ யோசிச்சு பார்த்தா,அப்போ கண்டுக்காம விட்டிருந்தா இன்னைக்கு இப்படி ஒரு நல்ல நிலைமையில் இருக்க முடியுமான்னு தோணுது..


இந்த திருட்டு பயல திருத்தினதுக்காக என் அம்மாக்கு நன்றி.. அதற்க்கு உதவிய அந்த உடஞ்ச ஜல்லிக்கரண்டிக்கும் என் நன்றி !!! 

Sunday, March 27, 2011

நான், நிஷா(லா) & கிப்ளிங்...

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவும் த்ரிஷாவும் சென்னையின் ODE Cafe வில் சந்தித்துக்கொள்ளும் காட்சி வெளிவந்ததிலிருந்து அந்த இடம் மிகவும் பிரபலமடைந்தது.


அந்த ODE கபேவிற்கு தன்னை அழைத்து செல்ல வேண்டும் என்று என் பியான்சீ நிஷா கேட்க,முடியாதென்றா சொல்ல முடியும் ??

அங்கே செல்வதற்கு முன்பு,அந்த இடத்தை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் என்று கூகிள் ஆண்டவரின்  உதவிய நாடிய பொழுது தான் ODE Cafe  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறித்து தெரியவந்தது. இவனும்,இப்போ திறப்பான் அப்போ திறப்பான்னு 3 மாதங்கள் காத்திருந்து தான் மிச்சம், அவன் திறப்பதாக இல்லை.



சரி, இதே போல் சென்னையில் வேறென்ன இடங்கள் இருக்கு என்று கூகிளில் தேடும் போது தான் Kiplings Madras Cafe பற்றி தெரிய வந்தது. உடனே கிப்ளிங் கபே வலைதளத்தை பார்வையிட,அது ECR சாலையில் அக்கறை என்னும் இடத்தில் அமைந்துள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.



மார்ச் 19, கிப்ளிங் கபே செல்லலாமென்று முடிவு செய்தோம். மாலை 6.30 க்கு வருவதாக கூறி டேபிள் ரிசர்வ் செய்தோம். நான் அவளுக்கு முதல் முறையாக வாங்கி தந்த புடவையை அணிந்துக்கொண்டு என்னுடன் புறப்பட, 7 மணிக்கு அங்கே சென்றடைந்தோம்.

உள்ளே நுழையும் போதே கடலலை BGM வாசிக்க, சில்லென்று தென்றல் எங்களை உரசிக்கொண்டே வரவேற்றது.




சரியான இடத்திற்கு தான் நிஷாவை அழைத்து வந்துள்ளேன் என்று ஒரு திருப்தி என்னுள். அங்கே சர்வர்களை தவிற மற்ற டேபிளில் அமர்ந்திருந்த அனைவரும் வெள்ளைக்காரர்களே.
  
குடிசையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த ஒரு டேபிளில் நாங்கள் அமர, ராஜா என்னும் சர்வர் எங்களுக்கு மெனு கார்டை அளித்தார். மெனு கார்டில் காண்டினெண்டல் மற்றும் தாய் வரைட்டி உணவுகள் மட்டுமே இருந்தன, அதிலும் பெரும்பாலான ஐடங்கள் அசைவமே. நிஷாவோ சைவம், ஆகையால் நானும் சைவத்துக்கு தாவிக்கொண்டேன். 

முதலில் Tam Yum veg soup ஒன்று ஆர்டர் செய்தோம். பதினைந்து - இருபது நிமிடங்களில் எங்கள் மேஜைக்கு வந்தது. தாய்லாந்து வரைட்டி சூப், இது வரை நான் அதை போன்ற ஒரு சூப் சுவைத்ததே அல்ல. எனக்கு அந்த சுவைய சரியாக விவரிக்க தெரியவில்லை, ஆனால் அருமையாக இருந்தது.



அசைவமே அதிகமிருந்ததால்,விருப்பமின்றி Four-Cheese Pizza ஒன்று ஆர்டர் செய்தோம்.. பீசா வழக்கமாக ஒரேமாதிரி தானே இருக்கபோகிறது என்று நாங்கள் நினைக்க, அது வழக்கத்துக்கு மாறாக, அருமையாக இருந்தது. பொதுவாக டாமினோஸ் மற்றும் பீசா கார்னர் ஆகிய இடங்களில் தடி தடியாக இருக்கும். ஆனால் இங்கோ மிகவும் மெல்லிதாக இருந்தது ..

பிறகு Thai Flat Noodles ஆர்டர் செய்தோம். நூடுல்ஸ் பொதுவாக நூல் போல இருந்து தான் பார்த்திருக்கிறேன்.ஆனால் இதுவோ பட்ட பட்டையாக இருந்தது. வித்யாசமாக இருப்பினும் சுவை நன்றாகவே இருந்தது. 

மணி 9 ஆனது, பில் வந்ததும் 1500 ரூபாய் மொய் எழுதிவிட்டு, கிப்ளிங்க்ஸ் கபேவின் terraceக்கு சென்றோம்.

பௌர்ணமி நிலவொளியில் கடல் கொள்ளையழகுடன் மின்ன,அதனை 15 நிமிடங்கள் இருந்து ரசித்துவிட்டு புறப்பட்டோம்..  




அன்று (March 19th,2011) நிலவு பூமியின் அருகே வந்ததாம்.. 
நிலா மட்டும் தானா?? நிஷாவும் தான் !!

மை டே வாஸ் பெர்பெக்ட் !!