Wednesday, September 8, 2010

அழுமூஞ்சி விளையாட்டு

சீதாவிற்கு பள்ளியில் இருந்து வீடு திரும்பும் பொழுது, அவங்க ஊரை பற்றியே யோசனையாக இருந்தது. ஏன் அவங்க ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இல்லை என்றும், தான் ஏன் அத்தை வீட்டில் தங்கி படிக்க வேண்டும் என்றும் எவ்வளவு யோசித்தும் புரியவில்லை. மூன்றாம் வகுப்பு படிக்கும் அவளுக்கு இது மட்டும் புரியாத புதிராகவே இருந்தது.
பெற்றோர்களை பிரிந்து இருந்த  ஏக்கம் தானோ என்னவோ,சராசரி குழந்தையை போல் அல்லாமல் ஏதோ ஒரு வேற்று உலகில் வாழ்வது போல் இருப்பாள். படிப்பிலும் கொஞ்சம் மந்தம் தான்.அவளது ரேங்க் கார்டில் சிகப்பு மை பேனாவினால் எழுதபட்டிருந்த "NIL"  என்பது என்ன என்று கூட புரியாது இருந்தாள்.

அவள் அத்தை மகன் குமார் எப்பொழுதும் துறு துறு என்று சுற்றிக்கொண்டிருப்பான். இருவரும் ஒரே பள்ளியில் தான் மூன்றாவது படித்து வந்தனர். சிறு வயதில் குழந்தைகளுக்கு சொந்தமான துடிப்பும் சுட்டி தனமும் அவனிடத்தில் நிறைந்து கிடந்தது. சீதாவுக்கு அவன் நேர் எதிர்.

பள்ளி முடிந்த பின், சீதாவுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த குமாரின் கண்களை கடந்து சென்றது அந்த தும்பி. அதனை பிடிக்கும் நோக்கத்துடன் பின் தொடர்ந்த குமாருக்கு அவன் முதுகில் சுமந்து சென்ற மூட்டை  முட்டுக்கட்டையாக அமைந்தது.

இருவரும் வீட்டை அடைந்ததும் அவர்களுக்கு பால் மற்றும் சிற்றுண்டிகள் கொடுக்கப்பட்டது. அதனை உண்ட இருவரும்,செல்வி மிஸ்ஸின் வீட்டுக்கு டியூஷனுக்கு செல்ல தயாராக, அவளுக்கு அந்த இன்ப  அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

அவளது அம்மா அப்பா, அவள் தம்பி சரவணனுடன் அவளை காண வந்தனர். ஒரு புத்துணர்ச்சி அவள் முகத்தில் காண முடிந்தது. அவளுள் எழுந்த அந்த மகிழ்ச்சியை அவள் அடக்கிக் கொள்ள முயற்சிக்கவில்லை. ஓடி வந்தவள் தன் அம்மாவை அணைத்துக்கொண்டாள்.

"வாங்க.. வாங்க" என்று அவர்களை உள்ளே அழைத்தார் சீதாவின் அத்தை.

சீதாவின் அம்மா அப்பாவுக்கு தண்ணீர் கொடுத்த சீதாவின் அத்தை"இன்னைக்கு வரதா சொல்லவே இல்லை" என்றார்.

"ஒரு விசேஷத்துக்கு வந்தோம் அதான் அப்படியே இவளையும் பார்த்துட்டு போகலாமேன்னு வந்துட்டோம் வீட்டுக்கு" என்றார்.

கொஞ்சலாக தன் தந்தையிடம், "இன்னைக்கு டியூஷன் போகாம விட்டுடவா ??" என்றாள்.

அதெல்லாம் கூடாது என்று அவள் அம்மா சொல்வதற்குள், அவள் தந்தை சரி போக வேண்டாம் என்றார்.

குமார் மட்டும் சீதாவை முறைத்தவாரே டியூஷனுக்கு புறப்பட்டான்.

சரவணன்
அழத் தொடங்கினான். அப்பொழுது தான் அவள் பார்வை தம்பியின் மீது திரும்பியது. சரவணனுக்கு இரண்டு வயது தான் ஆகிறது. அவள் தன் தம்பியுடனும் அதிக நாட்கள் கழித்ததில்லை. அதனால் தானோ என்னவோ அவன் மேல் மிகுதியான பாசம் அவளுக்கு.

அவனை தூக்கிக்கொண்டு  கொஞ்ச நேரம் சுற்றி வந்தாள்.ஆனால் அவன் அடம்  பிடித்ததின் காரணமாக அவனை  அம்மாவிடம்  கொடுக்க  நேர்ந்தது.

அம்மாவின்
பின்னாடியே கொஞ்ச நேரம் சுத்தி சுத்தி வந்தாள்.அம்மாவிடம் சமர்த்தாக இருந்த தம்பியின் கன்னத்தை மெல்ல கிள்ளினாள்.


மேலும்  விளையாட்டாக  முகத்தை  மூடிக்  கொண்டு அழுவது  போல்  நடித்தால்அதை  நடிப்பென்று  அறிந்து  அவன்  சிரிக்க தொடங்கினான். அதையே தொடர்ந்து செய்தவாறு இருந்தாள் . ஒரு  கட்டத்தில்  எறும்பு  கடித்ததோ  என்னவோ,  சரவணன் அழத்  தொடங்கிவிட்டான்.

பயந்து போய் அங்கிருந்து ஓட தொடங்கியவள் அப்பாவிடம் அடைக்கலம் புகுந்தாள். அவர் அவளுக்கு புது ஆடை ஒன்றையும் ஜியோமெட்ரி பாக்ஸ் ஒன்றையும் தந்தார் .

செல்லமாக தந்தையின்  கன்னத்தில் ஒரு முத்தமிட்டு அதனை வாங்கிக் கொண்டு, நேராக அறைக்கு ஓடி சென்று அந்த புது ஆடையினை உடுத்திக்கொண்டாள். பிறகு அப்பா முன் வந்து நின்று அழகாக சிரித்தாள்.

"அட வள்ளி.. என் செல்லக்குட்டிக்கு இந்த டிரஸ்ல எவ்ளோ அழகா இருக்கு பாரேன்!!"

அம்மா அவளை கவனிக்காமல்,அழுதுக் கொண்டிருந்த சரவணனை சமாதானம் படுத்திக் கொண்டிருந்தாள்.சீதாவுக்கு இது கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தது.அமைதியாக அப்பாவின் மடியில் போய் அமர்ந்துக் கொண்டாள்.

அப்பா அவள் படிப்பை பற்றி பேச தொடங்கியது தான் தாமதம்,உடனே என்னை மிஸ் அடிச்சிகிட்டே இருக்காங்க எனக்கு ஸ்கூல் போகவே பயமா இருக்கு என்று அடிக்கிக்கொண்டே சென்றாள்.ஒரு வழியாக அவளை சமாதானம் படுத்துவதற்குள் இரவு உணவு தயாரானது .

அன்றிரவு தூங்கும் பொழுது அம்மா அப்பா இருவருக்கும் இடையே படுத்துக்கொண்டாள்.அவளுக்கு தூக்கம் வருவது போல் தெரியவில்லை.அப்பாவிடம் ஏதோ பேசிக்கொண்டே இருந்தாள்.

"என்னங்க,கொழந்தைக்கு உடம்பு சுடுதுங்க.காய்ச்சலா என்னன்னு தெரியல? தண்ணி எதாவது ஒத்துக்கலையா?? இதுக்கு தான் இவள வந்து பார்க்க வேணாம் அப்படியே ஊருக்கு போயிடலாம்ன்னு சொன்னேன்.இப்போ பாருங்க யார் தூக்கிட்டு அலையறது ஹாஸ்பிடலுக்கு?" என்றார் வள்ளி.


வந்ததிலிருந்து  தன்னை  எதுவும்  கண்டுக் கொள்ளாமல்  சரவணனை  மட்டுமே கொஞ்சிக் கொண்டிருந்தது சீதாவுக்கு கோவத்தை  உண்டாக்கியது. அழத் தொடங்கினாள். அவளால் வேறென்ன செய்திட முடியும்?


மெல்ல தந்தையிடம்,"நாளைக்கு நானும் உங்களோடவே ஊருக்கு வந்துடவா?" என்றாள்.

இவள் மெல்ல பேசியது அவள் அம்மாவின் காதிலும் விழுந்து விட்டது."எங்க கூடவே வந்துட்டா.படிப்பு என்ன ஆகறது ??அதெல்லாம் இப்போ வேணாம்.அரையாண்டு பரீட்சை முடியட்டும் அப்புறம் ஊருக்கு கூட்டிட்டுப் போறோம்" என்றார் அவள் அம்மா.

தேம்பிக்கொண்டே இருந்தவள் மேலும் அழத் தொடங்கிவிட்டாள்.அவள் அழுகையை   நிறுத்த அவள் தந்தைசரி  எங்களோட உன்னையும் ஊருக்கு கூட்டிட்டு போறோம்"  என்றார்.

உடனே மனதுள் பல கனவுகளோடு உறங்கினாள்.என்றும் 7 மணிக்கு எழும் சீதா அன்று ஏனோ 6.30 க்கு விழித்துக் கொண்டாள்.அவள் பக்கத்தில் படுத்திருந்த அம்மாவும் அப்பாவும் அங்கே இல்லை.

வேகமாக  எழுந்து  அறையை  விட்டு  வெளியே  வந்தாள்.

அம்மாவும்  அப்பாவும்  தம்பியுடன்  ஊருக்கு  செல்ல  தயாராகி  பேருந்து  நிறுத்ததிற்கு  புறப்பட்டனர். வீதியில்  அவர்கள் நடந்து செல்ல அவர்கள் பின்னால் அழுதுக் கொண்டே ஓடத்  தொடங்கினாள் சீதா. அவள் விழித்துக் கொண்டதை யாரும் கவனிக்கவே இல்லை.

என்ன செய்தாலும் இப்பொழுது சமாதனம் செய்ய முடியாது என்று ஒரு முடிவுக்கு வந்த அவள் அத்தை, அவளை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

அவள் கதறிக்கொண்டே இருக்க அவர்கள் பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகமாக நடந்துக் கொண்டிருந்தனர்.

அம்மாவின் தோளில் சாய்ந்துக் கொண்டிருந்த சரவணன், அவன் அக்கா அழுவதை பார்த்து சிரித்தான். பாவம் அவனுக்கு எங்கே தெரியும் இது விளையாட்டல்ல என்று!!

4 comments:

மதுரை சரவணன் said...

அருமையான கதை. வாழ்த்துக்கள்

எண்ணங்கள் 13189034291840215795 said...

பாவமா இருக்கு குழந்தையை நினைத்து..:((

Rajasubramanian S said...

ரொம்ப நல்லா இருக்கு உங்கள் கற்பனை.

இரகுராமன் said...

அனைவருக்கும் மிக்க நன்றி