Tuesday, September 21, 2010

பிறந்த நாள் பரிசு

"ன்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா?"

"திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி?"

"இல்ல.. நாளைக்கு உன் பிறந்த நாள் வேற, எதாவது பிளான் இருக்குமே!! அதான் கேட்டேன்."

"அப்படி பிளான் இருந்திருந்தா லீவ் கேட்டு நானே உங்ககிட்ட வந்திருப்பேனே சார். எங்கயும் போகல நாளைக்கும் ஆபீஸ் வருவேன்."

"வேணும்னா நாளைக்கு லீவ் எடுத்துக்கோ. ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா சனிக்கிழமை வொர்க் பண்ணி காம்பென்செட் பண்ணிடு."

"எனக்கு அப்படி ஒரு லீவ் தேவையே இல்ல சார், நான் வரேன்."


 
"டேய் பாஸ்கர், நான் அருண் பேசுறேன்டா. நீ எங்க  இருக்க??"

"இப்போ  தான் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்தேன். ஏன்டா?"

"உனக்காக நாங்க விக்னேஷ் வீட்டு மொட்ட மாடியில வெயிட் பண்ணிட்டு இருக்கோம். சீக்கிரமா வந்து சேர்." 

"10 நிமிஷத்துல இருப்பேன்."

"டேய் அருண். போன்ல அவன் என்னடா சொன்னான்?"

"இப்போ தான் ஆபீசுல இருந்து வீட்டுக்கு வந்தானாம். ஒரு 10 நிமிஷத்துல இங்க வரேன்னு சொல்லி இருக்கான்டா."

"பக்கத்து தெருவுல இருக்குற என் வீட்டுக்கு என்ன மேக்கப் போட்டுகிட்டு வர போறானா? அப்புறம்,டேய் அருண் அவன் வந்ததும் நீ தான்டா நாளைக்கு பிளான் பத்தி அவன் கிட்ட பேசனும்."

"ஆமாடா நான் அவன் கிட்ட வாய் கொடுத்து வாங்கி கட்டிக்கனும். அத பார்த்து நீங்க எல்லாரும் சிரிக்கனும்ம். இதானே உன் பிளான்? நான் பேசல. வேணும்னா சையத்த பேச சொல்லு."

"கொய்யாலே சப்ப மேட்டர் இது. இதுக்கு போய் ஓவர் சீன் போட்டுகிட்டு.. அவன் வரட்டும்டா நானே பேசுறேன்."

"இதுக்கு தான்டா கூட நீ இருக்கனும்னு சொல்றது. பாஸ்கர் வந்ததும் நீயே பேசுடா சையத்."

"வாப்பா பாஸ்கர். எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன்மா.. விக்னேஷ்ஷ்ஷ்?"

"அந்த கொரங்கு மத்த கொரங்குங்க கூட மொட்ட மாடியில தான் அரட்ட அடிச்சிகிட்டு இருக்கு நீயும் போய் சேர்ந்துக்கோ."

" (அவ்வ்வ்வ்வ்வ்) சரிமா."

"டேய் அப்படியே அங்க வச்சிருக்குற வாழ பழத்தையும் மேல எடுத்துட்டு போய் எல்லார்க்கும் கொடு."

'இதுவேறயா!' 

"இங்க பார்டா வரும் போதே நமக்காக பாசமா பழம் எல்லாம் கொண்டு வரான்."

"பாசமா ?? எனக்கா ??.. மேல இருக்கற கொரங்குங்க எல்லாத்துக்கும் கொடுக்க சொல்லி உங்க அம்மா தான்டா கொடுத்து அனுப்பினாங்க."

“கொரங்கா?? டேய் விக்னேஷ் இதுக்கு தான் வேற எங்கயாவது மீட் பண்ணலாம்ன்னு சொன்னேன்.. இது எனக்கு பெருத்த அவமானம்டா.”

"டேய்  இங்க பாருங்கடா ஆப்பிசர் அருண்க்கு கோவம் வருது. ஓவரா சீன் போடாமா மூடிட்டு பழத்த சாப்டு டா."

"சரி விஷயத்துக்கு வருவோம். நாளைக்கு என்ன பிளான்டா?"

"ஒரு பிளானுமில்ல. ஏன்டா?? "

"என்ன இப்படி கேட்டுட்ட? உன் பிறந்த நாள் வேற.. நாங்க நிறைய பிளான் வச்சிருக்கோம்."

"ச்சே.. ச்சே.. கேக் எல்லாம் கட் பண்ணி காசு வேஸ்ட் பண்ணாதீங்கடா எனக்காக. "

"ஐய ஆசை தான்.. உனக்கு யார் இப்போ கேக் கட் பண்ண போறதா சொன்னது. எங்களுக்கு சரக்கு வேணும் ஸ்பான்சர் பண்ணு."

"க்ர்ர்ர்ர்.. சரக்கா?? நானா!! பிச்சிபுடுவேன் பிச்சி.. சரக்குக்கு எல்லாம் நான் வெட்டி செலவு பண்ண மாட்டேன்."

"டேய் அப்படி எல்லாம் சொல்லிடாதடா. உன்ன தான் மலை போல நம்பி இருக்கோம். சரக்கு நாக்குல பட்டு வாரம் ஒன்னு ஆயிடுச்சிடா.. நீ எங்க நண்பேன்ல, கொஞ்சம் யோசிச்சி சொல்லுடா."

"நான் காசு போட்டு ஏன்டா உங்க உடம்ப கெடுக்கணும். எனக்கு மனசு வரல. வேற எதாவது கேளுங்க."

"தத்துவம் எல்லாம் பேசி காரியத்த கெடுத்துடாதடா. வேற ஒன்னும் வேணாம் மச்சி. நீ சரக்கு ஸ்பான்சர் பண்ணு. சைடு டிஷ்க்கு நான் உஷார் பண்ணிக்குறேன்."

"ஹ்ம்ம்.. வாழ்க்கையோட அருமை உங்களுக்கு இப்போ சொன்னா புரியாது. என்னமோ பண்ணுங்க.. நாளைக்கு 7 மணிக்கு ரெடியா இருங்க. ஆபீஸ் விட்டு வந்து உங்கள கூட்டிட்டு போறேன். சரியா!!"

"நீ எங்க உண்மையான நண்பேன்டா."

றுநாள் மாலை 7 மணிக்கு..

"என்னடா எல்லாரும் நான் எப்போ வருவேன்னு ரெடியா நிக்குறீங்க போல."

"இல்லையா பின்ன.. அப்புறம் உன்னோட கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இதெல்லாம் மறக்காம எடுத்துகிட்ட இல்ல ?"

"வந்து தொல எல்லாம் இருக்கு."

"ரெண்டு பைக் நாலு பேரு. சரிவா எந்த "பார்"க்கு போறதுன்னு நானே சொல்றேன்."

"விக்னேஷ் நீ ஒன்னும் சொல்ல வேணாம். நான் முன்னாடி போறேன். நீ பேசாம என்ன பின்தொடர்ந்து வா." 

"டேய் உனக்கு எதாவது பார்ல அக்கௌன்ட் இருக்கோ?? சரி நீ பார்ட்டி தர எங்க கூப்டாலும் வர்றோம். ஆனா சர்வீஸ் நல்லா இருக்கனும்."

"டாய் படுத்தாதடா. எல்லாம் நல்லா தான் இருக்கும். வா போலாம்."

"டேய் சையத். இவன் எங்கடா போயிட்டு இருக்கான். இந்த ஏரியால பாரே இருக்குற மாதிரி தெரியலையே!!"

"எனக்கும் அதே யோசனையா தான் இருக்கு. பின்னாடியே போவோம். போய் தான் பாப்போம் வா."

பாஸ்கர் வாகனத்தை அன்பு இல்லம் என்னும் ஆசிரமத்தின் முன் நிறுத்தினான்.

"டேய் என்னடா இங்க வந்து நிறுத்துற? என்ன ஆச்சி உனக்கு!!"

"பேசாம உள்ள வாடா சையத். எல்லாம் புரியும்."

அனைவரும் பாஸ்கரை பின் தொடர்ந்து சென்றனர். 

"ஹலோ பாஸ்கர் வா வா. எப்படி இருக்க?? இவங்க எல்லாம் யார் உன் பிரெண்ட்சா??"

"ஆமாம் சார்."

"வெரி குட். வெரி குட். நான் தான்பா சிதம்பரம் இந்த ஆசிரமத்துக்கு மேனேஜர்" என்றார் மற்றவர்களை நோக்கி.

“டேய் இந்த ஆளை பாக்கவாடா எங்கள இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்த ?? “ என்று பாஸ்கரின் காதில் கிசுகிசுத்தான் விக்னேஷ்.

"இவர பார்க்க கூட்டிட்டு வரல. இங்க இருக்கற பசங்கள பாருங்க. 100 குழந்தைங்க கிட்ட இருக்காங்க இங்க."  

"ஒரே ஒரு குழந்தை கிட்ட மட்டுமாவது 10 நிமிஷம் பேசி பாருங்க. அவங்களுக்குள்ள இருக்கற ஏக்கம்,எதிர்பார்ப்பு எல்லாமே புரியும்டா. அவ்ளோ ஏன்டா.. பேச கூட வேணாம். அன்பா அவங்கள பார்த்து ஒருதடவ சிரிச்சா அதுவே போதும்."

"என்ன பாஸ்கர்.. பிரெண்ட்ஸ் என்ன சொல்லறாங்க??"

"ஒண்ணுமில்ல சார். சும்மா பேசிட்டு இருந்தோம்."

"இந்தாங்க 25,000 ருபாய். இப்போ என்னால முடிஞ்சது இது. எல்லார்க்கும் ரெண்டு நாள் சாப்பாட்டுக்கு ஆகட்டும். வேற எதாவது வேணும்னா தயங்காம கேளுங்க சார். நான் இன்னும் உங்களுக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கு."

"ஹாஹா நிச்சியமா பாஸ்கர். உங்கிட்ட கேட்காம வேற யார்கிட்ட கேட்க போறேன்."

"தேங்க்ஸ் சார். நான் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு போறேன்."

"ஓஹ் தாராளமா." 

"டேய் டேய் என்னடா நடக்குது இங்க?? நீ எப்போடா பாஸ்கர் இப்படி மாறின??"

"எப்போ என்னோட வாழ்க்கையை இங்கிருந்து தான் ஆரம்பிச்சேன்னு தெரிஞ்சிதோ அப்போ."

3 comments:

அருண் said...

//"எப்போ என்னோட வாழ்க்கையை இங்கிருந்து தான் ஆரம்பிச்சேன்னு தெரிஞ்சிதோ அப்போ."//
நல்லாயிருக்கு.

தக்குடு said...

Nice one dude!..:)

Rajasubramanian S said...

கதை நல்லா இருக்கு.