“எப்படியோ கஷ்டப்பட்டு கம்பெனியோட நொய்டா ஆஃபீசுல இருந்து சென்னை ஆஃபீசுக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்துட்டீங்க..இப்போ சந்தோஷம் தானே?” என்று புன்னகையுடன் கேட்டாள் ரோகினி.
"ஏன்? உனக்கு சந்தோஷமா இல்லையா என்ன?? நானும் அங்க 4 வருஷமா இருந்துட்டேன். இப்போ உன்ன என் தலையில கட்டிட்டாங்க, எனக்கும் அத ஒரு காரணமா காட்டி சென்னைக்கு வர வசதியா போச்சி" என்றான் விஜய்.
"எப்படியோ நான் வந்த நேரம்,நீங்க ஆசை பட்டமாதிரி நடந்திருக்கு பாருங்க."
"சரி சரி. இப்படி செண்டிமெண்டா பேசியே அனுப்பிடலாம்னு பாக்காத. இட்லிய கொண்டா சாப்டு ஆஃபீசுக்கு ஓடுறேன்."
சென்னைக்கு மாற்றமாகி முதல் நாள் அலுவலகம் சென்றான் விஜய். எதிர்பார்ப்புகளோ கனவுகளோ அதிகமின்றி காணப்பட்டான். நான்கு வருட அனுபவங்கள் அவனுக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருந்தது.
அவனது புது அலுவலகத்தில் சுதர்ஷன் என்பவரை சந்தித்த விஜய் தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான்.
சுதர்ஷன், விஜய்காக ஒதுக்கப் பட்டிருந்த இருக்கையை அவனுக்கு காண்பித்தார். இருக்கையில் அமர்ந்த விஜய் ஒரு முறை அலுவலகத்தை சுற்றும் முற்றும் பார்த்தான். பழகிய முகம் என்று எதுவும் அவனுக்கு தெரியவில்லை.
விஜய்யின் அருகில் அமர்ந்திருந்த பிரகாஷ், “ஹாய், என் பெயர் பிரகாஷ்.நீங்க தான விஜய்?” என்றான்.
“யெஸ்" என்று புன்னகைத்தாண் விஜய்.
“நல்லது. நீங்க வரப் போறதா ஏற்கனவே சொன்னாங்க. இனி நாம ஒரே டீம்ல தான் வொர்க் பண்ண போறோம்” என்றான் பிரகாஷ்.
“ஒஹ்ஹ க்ரேட். மொத்தம் எத்தனை பேர் இந்த டீம்ல??”
“இப்போதைக்கு மொத்தம் பதினைஞ்சு. பதினொரு மணிக்கு மீட்டிங் இருக்கு.அப்போ டீம் லீடும் மத்தவங்களும் வருவாங்க."
“எல்லாரையும் சந்திக்க இதுதான் எனக்கும் சரியான இடம்” என்று கூறி தற்காலிகமாக விடை பெற்றுக் கொண்டான் விஜய் .
சரியாக 10.55 க்கு அனைவரும் மீட்டிங் அறையில் ஒன்று கூடி டீம் லீடர் செந்திலின் வருகைக்கு காத்துக் கொண்டிருந்தனர்.
“செந்தில் ஏதோ முக்கியமான போன் கால்ல இருக்கார் போல,அதான் இன்னும் வரல. ரொம்ப திறமையானவர்,3 வருட அனுபவம் தான் அதுக்குள்ள டீம் லீட் போஸ்ட்க்கு வந்துட்டார். ஜாலியா பழகக் கூடியவர்“ என்று விஜய்யின் அருகில் அமர்ந்திருந்த பிரகாஷ் கூறிக் கொண்டே இருக்க, அறையை நோக்கி வந்துக் கொண்டிருந்த செந்திலை பார்த்தான் விஜய்.
அதுவரை எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருந்த அவன் முகம் வியர்க்கத் தொடங்கியது. முகத்தில் ஏதோ எரிச்சல், குழப்பம் என்று அனைத்து உணர்சிகளும் தென்பட்டன.
'அய்யோ இவனா?? இந்த செந்திலா?? இவன் கீழயா நாம வேலை செய்யப் போறோம்?? இவன காலேஜ்ல படிக்கும் போது எத்தனை நாள் ராகிங் பண்ணியிருக்கேன்!! அது மட்டுமா கிளாஸ்ல பூந்து எல்லார் முன்னாடியும் அவன அடிச்சி இருக்கேனே? அவ்வ்வ்.. இது வேலைக்கு ஆகாது. வேற கம்பனிக்கு மாறிட வேண்டியது தான்' என்று தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.
அறைக்குள் நுழைந்த செந்தில்.. விஜய்யை நோக்கி அழகாய் புன்னகைத்தான்...
2 comments:
Vote poda mudiyala
tamilmanam kaanama poiduchi
Post a Comment