"உங்கள யாரு இவள 'எம்.ஈ.' (M.E) சேர்க்க சொன்னது. ஒழுங்கா கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இப்போ ஒரு பிரச்சனையும் இருக்காதுல்ல உங்களுக்கு" என்றான் ராதாவின் அண்ணன் ராகவன்.
"இப்போ மேரி வீட்டுல மாப்ள தேட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கும் வேற வழி தெரியல.
இன்னும் ஒரு மாசம்தான் டைம். அதுக்குள்ள நல்ல வரனா பாத்து அவளுக்கு கல்யாணத்த முடிச்சிடுங்க. இல்லன்னா யார பத்தியும் கவலப்படாம நான் மேரிய கல்யாணம் பண்ணிப்பேன்" என்றான்.
"டேய் இப்படி சொல்லாதடா. ரொம்ப கஷ்டபட்டு அந்த காலேஜ்ல சீட் வாங்கி இருக்காடா.அவளோட ஆசைய எப்படிடா எங்களால கெடுக்க முடியும்" என்றாள் அவன் தாய் வரலக்ஷ்மி.
இவை அனைத்தையும் கேட்டு மிரண்டு போய், கதவோரத்தில் நின்று கொண்டிருந்தாள் ராதா.
அடுத்த நாள் கல்லூரி சென்று அவளின் நெருங்கிய தோழனான வெங்கடேஷிடம் விஷயத்தைச் சொன்னாள்.
சிறு வயது முதலே வெங்கடேஷும் ராதாவும் நெருங்கிய நண்பர்கள். வெங்கடேஷிற்கு ராதா என்றால் மிகவும் பிடிக்கும். அவளுக்கும் கூட.
வெங்கடேஷ் மனதில், 'நாம் ஏன் ராதாவை மணக்கக் கூடாது?' என்று எண்ணம் தோன்றியது.
ஆனால் அவனோ இன்னும் படிப்பை கூட முடிக்கவில்லை. வேலை என்று ஒன்று இல்லாமல் ராதாவின் பெற்றோர்கள் முன்பு இவனால் நிற்க முடியாது. ஆகையால் அமைதியாக இருந்துவிட்டான்.
ராதாவின் பெற்றோர்கள் அவசர அவசரமாக ஒரு பையனை அவள் தலையில் கட்டினார்கள்.
நாட்கள் நகர்ந்தன..
கல்யாணத்திற்கு பிறகு துபாய் சென்றுவிட்டதால், கல்லூரிக்கு தொடர்ந்து வராமல் பாதியிலேயே நின்றுவிட்டாள் ராதா.
வெங்கடேஷிற்கும் அவள் எப்படி இருக்கிறாள்.. என்ன ஆனாள் என்று விவரம் தெரியாமலே இருந்தான்.
கல்லூரி படிப்பை முடித்தான், ஒரு நல்ல வேலையும் கிடைத்தது அவனிற்கு.
ஒரு வருடம் கழித்து, திடீரென்று ராதாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
"ராதாவா என்ன ஆச்சர்யம்!! எப்படி இருக்க? கல்யாணம் ஆனது தான் தெரியும். உடனே துபாய் போயிட்ட. இப்போ தான் எனக்கு போன் பண்ணனும்னு தோனுச்சா?" என்றான்.
ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள், "என் கணவர் என்னிடம் விவாகரத்து கேட்கிறார்" என்றாள்.
ஒரு வருடம் கழித்து அவளிடமிருந்து வந்த முதல் அழைப்பு. அந்த அழைப்பு வராமலே இருந்திருக்கலாம் என்று எண்ணும்படி அமைந்தது தான் வருத்தம்.
சற்று நிதானத்துடன் பேச ஆரம்பித்தவன், "என்ன ஆச்சு? ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார் உன் கணவர்?" என்றான்.
"அவர் கல்யாணத்துக்கு முன்பே ஒரு பொண்ண லவ் பண்ணியிருக்கார். ஆனா அவர் அப்பாவோட கட்டாயத்துக்காக என்னை கல்யாணம் பண்ணியிருக்கிறார்."
"இப்போ அந்த பொண்ணோட வீட்டுல அவளுக்கு மாப்ள பாத்துட்டு இருக்காங்க. அவளும் இவரையே நினைச்சிட்டு இருக்கா" என்று கூறினாள்.
"இந்த விஷயம் வீட்டுக்கு தெரியுமா?"
"இல்ல.. இத எப்படி வீட்டுக்கு சொல்றதுன்னு புரியல. உங்கிட்ட முதல்ல சொல்லனும்னு தோனுச்சு அதான் உனக்கு போன் பண்ணேன்."
"இது சாதாரண விஷயமில்ல!! நீயா சமாளிச்சுக்க, முதல்ல அப்பா கிட்ட சொல்லு" என்றான்.
பிறகு இரண்டு மாதத்திற்குள் நடக்கக் கூடாது என்று அவன் எண்ணியவை அனைத்தும் நல்லபடியாக நடந்து முடிந்தது.
வெங்கடேஷ் ஒரு நாள் அவன் தாயிடம் ராதாவை பற்றி பேச ஆரம்பிக்க,
"எனக்கு உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியும். ஆனா அதுல எனக்கு இஷ்டமில்ல, மத்தபடி உன் விருப்பம்" என்று கூறி சென்றுவிட்டார் அவர்.
"எனக்கு உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியும். ஆனா அதுல எனக்கு இஷ்டமில்ல, மத்தபடி உன் விருப்பம்" என்று கூறி சென்றுவிட்டார் அவர்.
அன்றிரவு மனதில் பல குழப்பத்துடன் உறங்காமல் இருந்த அவன், காலையில் அழகிய சூரியோதயத்தை கண்டான். திருமண ஏற்பாடுகள் துவங்கின.
2 comments:
ஒரு நல்ல சிறுகதையை மிஸ் செய்துவிட்டீர்கள். நண்பா
கேபிளண்ணாவை நான் வழிமொழிகிறேன்
Post a Comment