Thursday, April 29, 2010

அக்கரை சீமையில்

அன்று வெள்ளிக்கிழமை,எதிரே இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தனது காதலி ஹம்சாவுடன் ஆஸ்திரேலியாவின் 'பெர்த்' நகரின் ரம்மியமான இடங்களில் நேரத்தை கழித்தான் பிரகாஷ். 

இரவு 11.30 மணி அளவில் ஹம்சாவை அவளது இல்லத்தில் பத்திரமாக இறக்கி விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.


அவளின் நினைப்பிலேயே காரை ஓட்டிக்கொண்டிருந்தவன்,திடீரென்று பிரேக்கினை அழுத்தினான்.

நடுரோட்டில் மூன்று நபர்கள் கையில் பீருடன் காரின் எதிரே வழி மறிப்பது போல் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

முகத்தில் சிறிது வியர்வை துளிகள் எட்டிப்பார்க்க, கொஞ்சம் படபடப்புடன் காணப்பட்டான் பிரகாஷ்.
எதிரே நிற்பவர்கள் யார் என்று கூட இவனுக்கு தெரியாது. ஆனால் தொடர்ந்து நிகழும் சில சம்பவங்கள் மூலம் இவர்களின் நோக்கம் என்ன என்பதை யூகித்தான்.
'ஓடிடலாமா இல்ல நிக்கலாமா!!' என்று பிரகாஷ் யோசித்துக்கொண்டே இருக்க எதிரே நின்றவர்களில் ஒருவன் முதுகுப்புறமிருந்து ஒரு உருட்டுக் கட்டையை எடுத்தான்.

"ஷிட்" என்று சொல்லி,கதவை தள்ளிக் கொண்டு கண், மண் தெரியாமல் ஓட ஆரம்பித்தான் பிரகாஷ்.
அவர்களும் விடாமல் துரத்த ஆரம்பித்தனர். நீண்ட தூரம் ஓடி, பிறகு முடியாமல் ஒரு இடத்தில நின்று விட்டான்.
வெறியுடன் துரத்திக் கொண்டிருந்தவர்கள் அவனை நெருங்க, வேகமாக ஒரு கார் வந்து பிரகாஷை உள்ளே ஏற்றிக்கொண்டு பறந்தது.
சற்று பதட்டம் தெளிந்த பிறகு, "தேங்க்ஸ்" என்று சொல்லி சிரிக்க முயன்றான் பிரகாஷ்.
கார் ஓட்டிக்கொண்டிருந்தவர், "இட்ஸ் ஓ.கே. ஜஸ்ட் ரிலாக்ஸ்" என்று புன்னகைத்தார்.

அவர் முகமும், அவரது உடலை போர்த்தியிருந்த தோலும் அவனுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியது.
 
யுவர் நேம்?? என்று அவர் கேட்க "பிரகாஷ்" என்று பதில் அளித்தான்.
"வேர் ஆர் யு லிவிங் ?? என்று கேள்விக்கு மில் மவுன்ட் ரோட் என்றான் பிரகாஷ்.

சோ.. யூ ஆர் ஆன் இந்தியன்?" என்று பிரகாஷை பார்த்துக் கேட்டார்.
'நீங்களும் தானா?' என கேட்க நினைத்தான். ஆனால் எதுவும் சொல்லாமல், அவர் முகத்தை பார்த்தான். அவரும் பதில் எதிர்பார்த்த மாதிரி தெரியவில்லை.

மில் மவுன்ட் ரோடும் வந்து விட்டது. ஆனால் அவர் தன்னைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. பிரகாஷ் இறங்கியும் விட்டான்.

"தேங்க்ஸ் அகெயின்,யுவர் குட் நேம் ப்ளீஸ்" என்று இறுதியாக கேட்டான்.

"ஐ ஆம் ஜமால் யூசுஃப்" என்று முதல் கியரினை போட்டுக் கொண்டு, "ஃப்ரம் பாகிஸ்தான்" என்ற அவரது குரல் கார் சீறலையும் மீறி கேட்டது.

2 comments:

இராகவன் நைஜிரியா said...

தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு பாக்கிஸ்தானியர்கள் நல்லவர்கள்.

அரசியல் வேறு, பழகும் விதம் வேறு.

இரகுராமன் said...

பொதுவாக பாகிஸ்தானியர்கள் என்றாலே நம்பியாரை போல மக்களுக்கு தென்படுகின்றார்கள். ஆனால் உண்மையில் நம்பியாரும் ஹீரோ தான் என்பது அவர்களுக்கு புரிவதில்லை. :)